Posts Tagged ‘தா.பாண்டியன்’

பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!

நவம்பர் 8, 2010

பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!

எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்

அதோ அங்கே பாருங்கள், வறண்ட , நெடிய கண்மாயில் பெண்கள் எல்லாம் போர் போட்டு குடி நீர் எடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள். என்னங்க செய்யறது? கண்மாய் வத்திப்போய் பல வருசம் ஆச்சு, ஓட்டு கேக்க வருவானுங்க எப்பயாவது.மண்ணை பொன்னாக்குறேன்ன்னு சொல்லுவான் ஒருத்தன், நாயை பேயாக்குறேன்னு சொல்லுவான் ஒருத்தென் இப்புடியேஎல்லாம் கருமாந்திரம் புடிச்ச பயலுவலும் சொல்லிகிட்டு திரியும் , எங்க தண்ணீ பிரச்சினைய எவனும் தீக்குற மாரி தெரியல.

அன்னக்கி தண்ணி எடுக்க வந்த பெரியாத்தா கூட சொல்லுச்சி “ஏய் மாரியம்மா இந்த பூமிய அழிச்சுப்புடு தாயீ , புதுசா கொண்டா ஆத்தா, நாங்க தெனமும் சாவுறோம் ஆத்தா” கண்ணீர் வுட்டு கதறுச்சி. எல்லாம் இச்சு கொட்டிட்டு போய்ட்டாங்க.

அடச்சே நாம எதுக்கோ வந்துட்டு எதைப்பத்தியோ பேசிகிட்டு இருக்கோம், நாம பேச வந்ததே நம்ம மாணிக்கத்தை பத்திதான், வயசு 35. அவுங்க தாத்தா துரையன் அந்த காலத்துலயே கம்யூனிஸ்டு கட்சியில இருந்தாராம். வெள்ளக்காரன்

காலத்துல துரையன் இருந்த ஜெயில்ல பக்கத்து ரூமிலதான் நல்லக்கண்ணு இருந்தாராம். கட்சி ரெண்டா உடைஞ்சப்பகூட துரையன் நகரலை. ” சாகுற வரைக்கும் தோலர் நல்லக்கண்ணுக்காகத்தான் அவுரு கட்சியிலத்தான் இருப்பேன்“ன்னாரு. அவரு போட்ட சபதத்த  மாணிக்கம் காப்பாத்துறாரு. ஆமா அவரும் சிபிஐ கட்சியிலதான் இருக்குறாரு. அவுங்க அப்பாவுக்கு ஒரு நல்லக்கண்ணுன்னா? மாணிக்கத்துக்கு வானவராயன்தான்.

போன முறை கோயம்புத்தூர் எம்பியா நின்னப்ப மாணிக்கம் செஞ்சவேலை என்ன? மாடாட்டம் வேல செஞ்சான். நாளைக்கு தேர்தல்ன்னா இன்னைக்கு வரைக்கும் தோரணம் கட்டுறதுகொடிபுடிக்குறதுன்னு அவன் தெருவையே கலக்கிப்புட்டான் போங்க.

வானவராயன் செயிச்சவொடனே  மாணிக்கத்த கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாரு அப்புறம் சொன்னாரு “என்ர மாணிக்கம் இருக்குற வரைக்கும் எனக்கு கவலையே இல்லை” ஆமா அவரு வீடு எங்க இருக்குன்னு தெரியலீங்களே! யாரை கேக்கலாம்………………… அதோ அந்த வெள்ளசீலை ஆயாவை கேக்கலாங்களா ?  “ஆயா இங்க துரையன் பேரன் மாணிக்கம் வீடு எங்க இருக்குதுங்க? ” ” நம்ம மாணிக்கம் வீடா? தா அந்த முக்குல போய் சோத்தாங்கை பக்கம் திரும்புங்க”

அதோ வெளிய கயித்துக்கட்டல்ல  இருக்குறாரே அவருதான் மாணிக்கம். திரைக்கதையெல்லாம் போதும் இனி கதைக்குள்ள போவோம்.

…………………………

……………………………………………………………………………………………………………………………………………………………………..

மாணிக்கத்துக்கு ஒரு சந்தோசமாய் இருந்தது, இருக்காதா என்ன? சிபிஐ மாநில செயலாளர் ” நில மீட்பு போராட்டம்” அறிவிச்சதை பார்த்தவுடனே அப்படி ஒரு சந்தோசம். எல்லா கட்சியும் எப்படியெல்லாம் எங்களை கேவலப்படுத்துனீங்க நாய்ங்களா? வர்ரண்டா டேய்! சிங்கம் மாரி எங்க தோலர் கிளம்பிட்டார்டா………………….. அவன் மனசுக்குள் பல்லாயிரம் வாலா பட்டாசுகள் வெடித்தன. மாணிக்கத்தோட மாமன் வெள்ளையன் பக்கத்து வீடுதான்.

மாமன் வெள்ளையன்  சிபிஎம் கட்சியில இருக்குறாங்க. அவருகிட்ட சோலியா போறப்ப எல்லாம் சிபிஐ கட்சியை குத்தி குத்தி காட்டுவாரு. மனசு வலிக்கும், ஏன் போன வருசம் எங்க கட்சி மூத்த தலைவர் ஒருத்தரு சிபிஐ, சிபிஎம் ரெண்டு கட்சியும் இணையனும்ன்னு சொன்னவுடனே சிபிஎம் காரர் ஒருத்தரு “அதெல்லாம் முடியாது, பழச மறக்க முடியாது, எங்களை துரோகின்னு சொல்லி வெளியேத்துனீங்களே”ன்னு மைக்குல பேச எங்க தலைவருங்க மூஞ்செல்லாம் எவ்வளவு கவலையாஇருந்துச்சு தெரியுமா?

அதை பேப்பர்ல பாத்தவுடனே மாமங்காரன் சொன்னான் “டே மாப்புள! உங்கட்சியே ஒண்ணுமில்லாம போயிடுச்சு, செயலாளர் பதவிக்கு ஆள் இல்லாம ஓடிப்போன பாண்டியை புடிச்சுகிட்டு வந்தீங்க, இப்ப எங்க கட்சிக்கே மேட்டர் போடுறீங்களா? எங்க கட்சிய வளச்சுக்கிட்டு ஆள்புடிக்கப்போறீங்களா? அப்புடியே சொத்தப்புடுங்க பாக்குறீங்க”

வேற யாராவது சொல்லியிருந்தா அவன் சாவறதுக்கு கருப்பண்ணன் கோயில்ல கோழியை தலை கீழா தொங்கவுட்டுருப்பான் மாணிக்கம், மாமாங்குற ஒரே காரணத்துக்காக மனசுக்குளேயே புழுங்குனான். அவன் சொல்றது உண்மையா இருக்குமோ? ஏன் நம்ம கட்சியில யாருமே சேர மாட்டேங்குறாங்க! நமக்கு பின்னாடி பொறந்தவன் சிபிஎம், அவன்கூட கேரளாவுலயும் மேற்குவங்கத்துலயும் ஆட்சிய புடிச்சுட்டான்.  எச்சிப்பாலை (கொள்கையில்) குடிச்சு வளந்தவனுக்கே அவ்வளவு திமிறா?

ரொம்ப டென்சன் ஆகிப்போனான் மாணிக்கம். ” வொக்காளி என்ன திமிரு ஆளாளுக்கு ஆடுறானுங்க, நேத்து முளச்ச விஜயகாந்து புரச்சி பண்ணப்போறேங்குறான், நாங்க தாண்டா கம்யூனிசத்த இந்த நாட்டுக்கே அறிமுகப்படுத்துனோம், இப்ப எவன் பாத்தாலும் மதிக்க மாட்டேங்குறானுங்க, எம்பி சீட் கொடுத்தாலும் சரி, எம்மெலே சீட்கொடுத்தாலும் சரி எச்சிப்பாலு குடிச்சவனுக்குத்தான் எச்சா தராங்க” கவலையிலே சாயங்காலம் படுத்தவன்தான்,

ராத்திரி அவன் மனைவி ரத்தினம் எழுப்பிய போது அழுது அழுது அவன் கண்கள் வீங்கியிருந்தது, கேட்டாள் ” ஏ மாமா அழுவுற “, அவன் காலையில் மாமங்காரன் திட்டியதை சொன்னான்.

“அட கெரகம் புடிச்சவனே! இதுக்கா அழுவுற , கருப்பண்ண சாமிக்கு கெடா வெட்டறன்னு நேந்துக்கோ எல்லா
சரியாயிடும்” மனைவியின் சொல் இதமாயிருந்து. சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்தான். கண்கள் சொக்கின, கூடவே ஒரு கவிதையும் வந்தது.

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்

அப்போதுதான் சன் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது, இப்போதுதான் அந்த செய்தி வந்தது ” சிபிஐ மாநிலச்செயலர்அறிவிப்பு,  நிலமற்ற மக்களுக்கு நிலத்தை வழங்கக்கோரி நில மீட்பு போராட்டம்”. என்ன ஒரு சந்தோசம். போன வாரம்கூடசன் டிவியில வந்துச்சே சேதி,

“தில்லையில 4 ஆயிரம் ஆண்டுகளாய் பூட்டு போட்டிருக்கிறார்கள் அதை அரசு அகற்றாவிடில் நாங்கள் அகற்றுவோம்” நம்ம பாண்டி தோலர் பேசும் போது எப்படி சிங்கம் மாரி பேசினார். அந்த ம.க.இ.க காரனுங்க என்னமோ 8 வருசமா போராட்டம் பண்ணுறாங்களாம்.  நம்ம பாண்டி தோலர் எப்பவுமே உசாரு!!! எட்டு வருசமா போராடுறவனுக்கு பேர் கிடைக்க வுட்டுடுவாரா என்ன ?  சிபிஎம் காரணெல்லாம் பேசும் போது எங்களுக்கு பேச உரிமை இல்லையா என்ன? எவன் எட்டு வருசம் போராடி மண்டை உடஞ்சா நமக்கென்ன?  நமக்கு பேர் வரணும் அவ்வளவுதான்? இதுல என்ன தப்பு? அவனுக்குள்ளே கேள்விக்கேட்டுக்கொண்டே தூங்கிப்போனான்.

—————————————————————————————————————————————————————

யாரோ எழுப்பியது போல் இருந்தது . மணியைப்பார்த்தான் அது 4 என பல்லைக்காட்டியது. மாவட்டப்பொறுப்பாளர் நேரே வந்திருந்தார் “ஏப்பா மாணிக்கம் இங்க வா” தனியாக அழைத்தார். காலங்காத்தால தோலர் வந்திருக்காரே குழப்பத்தோடுபின்னே சென்றான். ” ஏப்பா நேத்து நியூஸ் கேட்டியா “.

” கேட்டேன் தோலர், நம்ம பாண்டித்தோலரோட பேட்டியில நில மீட்பு போராட்டம்ன்னு சொன்னாரே” என்றான்
“கரெக்டா விசயத்துக்கு வந்துடுறேன். நேத்து பாண்டித்தோலரோட பேட்டியைப்பாத்த மொத்த தமிழ் நாடே ஆடிப்போயிடுச்சு, குறிப்பா  அரசாங்கம் ரொம்பவே கலங்கிப்போயிடுச்சு, தலைவர் கலைஞர் நம்ம தோலருக்கு ராத்திரி 10 மணிக்கு போன் பண்ணி “தயவு செஞ்சு உங்க போராட்டத்த ஒத்திவையுங்கன்னு” கெஞ்சிப்பாத்தாரு நம்மாளு கேக்கவே இல்லை.”

“ஒரு சாதாரண போராட்டத்துக்கு ஏன் முதல்வர் போன் பண்ணியிருக்காரு தெரியுமா?” சஸ்பென்சோடு மாணிக்கத்தைப்பார்த்தார். நில மீட்பு போராட்டம்ங்குறது புரட்சி செய்யறதுக்கான அறிகுறி !!!!. எல்லா கட்சியும் நம்மள எப்படியெல்லாம் திட்டுனாங்க, அதுக்கு பதிலா யாருக்குமே தெரியாம புரட்சியை செஞ்சு முடிக்கறதுன்னு மேல்கமிட்டியில தீர்மானம் போட்டிருக்கோம்.”

மாணிக்கத்தின் முகம் கலவரமடைந்தது. அந்த பனி கொட்டும் வேளையில் முகத்தில் பூத்திருந்த வியர்வையை வேட்டியில் துடைத்துக்கொண்டான். தோலர் தொடர்ந்தார் “அந்த விசயம் எப்படியோ உளவுத்துறை மூலமா லீக் ஆயிடுச்சு, அதனால தான் கலைஞர் போன் பன்ணியிருக்காரு.”  “அப்படியா” என வாயைப்பிளந்தான் மாணிக்கம்.

“இதுக்கே திகைச்சுட்டியே, நைட்டு 12 மணிக்கு  பிரதமர் போன் செஞ்சு புரட்சியை ப்ளீஸ் ஒத்தி வையுங்கன்னு கெஞ்சி இருக்காரு, அப்புறம் சோனியா காந்தி, அத்வானின்னு எத்தனையோ பேர் சொல்லியும் பாண்டித்தோலர் கேக்கல. வேற வழி இல்லாம நைட்டு 1 மணிக்கு அம்மா போன் பண்ணி புரட்சிய ஒத்தி வையுங்க இன்னைக்கு நாள் சரியில்லைன்னு சொல்ல அதுக்கு நம்ம தோலரோ ‘ நாளைக்குத்தான் நல்ல நாள் என் ராசிக்கு  நாளைக்கு  குரு உச்சத்துல இருக்கான், கண்டிப்பா

நாளைக்கு புரட்சி செய்யணும்னு மேல் கமிட்டியில தீர்மானம் போட்டுட்டாங்க அதுக்கு முன்னாடி ஆவி ஆவி ஆரதா மூலமா ரணதிவே கிட்ட கூட ஆசி வாங்கியாச்சு”ன்னு ஆணித்தரமா சொன்னாராம். அம்மா கம்முன்னு ஆப் ஆயிடுச்சாம்”

மணிக்கத்துக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. ” தோலர் நான் என்ன செய்யணுன்னு சொல்லுங்க? “. ” இப்ப மணி 4.இன்னும் சரியா ரெண்டு மணி நேரத்துல விடிஞ்சிடும் அதுக்குள்ள  நம்ம ஊருல இருக்குற எல்லா ஸ்கூல்,  பீடிஓ ஆபீஸ், அப்புறம் அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் , கொடிக்கம்பங்கள் எல்லாத்துலயும் நம்ம கதிர் அறிவாள் கொடியை ஏத்துனா போதும்,

நம்ம தோலர் பாண்டிக்கு அவர் ராசிப்படி காலையில 8.50 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பமாகுது, அவர் சரியா 9 க்கு டிவி ஸ்டேசனுல முறைப்படி புரட்சி நடந்து முடிந்ததை அறிவிப்பார். அதுக்கு முன்னாடி மக்கள் எழக்கூடாது.  அவங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் வேணுமில்ல , அதால காலையில மக்கள் முழிக்கறதுக்கு காரணமான சேவல்களை எல்லாம் இப்பவே நாம கொல்லணும். அதுக்கு தனியா ரெண்டு தோலர்களை அனுப்பிட்டேன். அவங்க எல்லா சேவலையும் கொன்னுட்டதா எனக்கு மெசேஜ் அனுப்பிட்டாங்க”.

மாணிக்கம்  தன் வீட்டு சேவல்கள் கொல்லப்பட்டு கிடப்பதை அப்போது பார்த்தான். அவன்
கண்ணீர் கசிந்தது. புரட்சிக்காகத்தான சேவல்கள் செத்தன என்பதை நினைத்து மனதை தேற்றிக்கொண்டான்.

” தோலர் 7 மணிக்கு காலையில சங்கு ஊதுவானே ?”  ” நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க, அவருக்கு கொஞ்சம் பணத்தைக்கொடுத்து  8.45 க்கு சங்க ஊத சொல்லிட்டேன், நீங்க விடியறதுக்குள்ள எல்லா கொடிக்கம்பத்துலயும் கொடியை ஏத்துனா போதும், காலையில எட்டே முக்கால் மணிக்கு மக்கள் எல்லாம் எந்திரிப்பாங்க, சுத்தியும் சிவப்பு கொடியை பார்ப்பாங்க, ஆச்சரியமா டிவி பெட்டியப் போடுவாங்க. அப்ப நம்ம தோலர் புரட்சி  நடந்து முடிந்ததை முறைப்படிஅறிவிப்பார்.” என்ற படி தோலர் கிளம்ப மாணிக்கம்  “ஒரு சந்தேகம்” என்று நிறுத்தினான் அவரை,

“தோலர் புரட்சின்னா அவ்வளவுதானா? யார்கிட்டயேயும் சண்டை போடவேண்டியதில்லையா?, இப்படி யாருக்குமே தெரியாம புரட்சி பண்ணிட்டமே தோலர், வேற கட்சிக்காரங்க சண்டைக்கு வரமாட்டாங்களா? ”

தோலர் புன்சிரிப்போடு சொன்னார் ” சில விசயங்களை சொல்ல முடியும் பல விசயங்களை சொல்ல முடியாது, புரட்சி என்பது மண்ணுக்கேற்றவகையில் இருக்கணும், ஒவ்வொரு நாட்டுலேயும் , பிரதேசத்துலேயும், பகுதியிலேயும் வேற மாதிரி தான் நடக்கும். புரட்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிஞ்சிடுச்சு, நைட்டு 1 மணிக்கு மேல் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லக்கூடாது அது கட்சி ரகசியம், அதை காலையில டிவியில தோலர் சொல்லுவார், நீங்க கொடியை ஏத்தி முடிக்குற நேரம் எல்லா ஊரிலேயும் இருக்கிற நம்ம தோலர்கள் கொடியை ஏத்தி முடிச்சிருப்பாங்க.  உங்க தாத்தா காலத்துல இருந்து நீங்க பார்ட்டியில இருக்கறதால தான் உங்களுக்கு இந்த பாக்கியம், சரி கிளம்பறேன், வேலையை முடிச்சவுடனே எனக்கு போன் பண்ணி சாப்பிட்டாச்சுன்னு சங்கேதமா சொல்லுங்க நான் புரிஞ்சிக்குவேன்.”

உடனே அவர் கொடுத்த கொடித்துணிகளையெல்லாம் வண்டியில் வைத்துக்கொண்டு பறந்தான், எல்லா இடத்திலும் கொடிகளை கட்டினான். கடிகாரத்தைப்பார்த்தான் அது 8.15 என்றது, போனை எடுத்து பேசப்போகும் போது நினைவு வந்தது, அந்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்குல கட்டவே இல்லையே !!! வண்டியை ஸ்டார்ட் செய்தான், பெட்ரோல் இல்லை,

வண்டியை தள்ளி விட்டு ஓடினான், ஒரு மைல் தூரத்தை 20 நிமிடத்தில் ஓடி வந்திருந்தான் மணி  8.40 என்றது. காலையில்சங்கும் ஊதவில்லை, சேவல்களும் கூவாததால் யாரும் எழ வில்லை. பெட்ரோல் பங்கில் கொடியை கட்டிவிட்டு இறங்கினான். பல சிராய்ப்புக்கள் உடலெங்கும், ஓடிவந்ததன் காரணமாம நெஞ்சு அடைத்தது. மாசெக்கு போன்  செய்யணுமே. மணி 8.45 என்றது.

நாம் போன் செய்ய வில்லை என்றால் ஒரு வேளை புரட்சி டிக்ளேர் செய்யப்படாமல் போய்விடுமோ? அந்த என்ணம் அவன் உடம்புக்குள் சக்தியை கொடுத்தது, ஒரு தேஜஸ் அவனுள் இறங்கியது போலிருந்தது, ஒரு வேளை இதுதான் “வர்க்கதேஜஸ்”ஆக இருக்குமோ? போன் செய்து சொன்னான். எதிர் முனையில் “என்ன தோலர் இவ்வளவு லேட்டாசொல்லுறீங்க, 5 நிமிசம் லேட்டாயிருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா? புரட்சி பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போயிருக்கும் , எனக்கு உங்க கிட்ட ஓரியாட நேரம் இல்லை சங்கூதறவனுக்கு போன் செஞ்சு சொல்லிடுறேன், சீக்கிறம் வீட்டுக்கு போய் டிவியைப்போடுங்க”என்றார்.

மாணிக்கம் ஓடினான் ” மணி 8.59 என்றது வீட்டில் , அதற்குள் சங்கூதி முடித்திருக்க, மக்கள் எல்லாம்
பதறியடித்துக்கொண்டி எழுந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு கொடியாயிருக்க, அவர்களுக்குபுரியவில்லை. எல்லோரும் டிவியப் போட்ட நேரத்தில் மாணிக்கமும் போட்டிருந்தான். சன் டிவியில் ப்ளாஷ் நியூஸ் ஓடியது “புரட்சி நடந்து முடிந்தது சிபிஐ கட்சி தமிழகத்தை கைப்பற்றியது, தோலர் பாண்டியின் உரை பின்னும் சிறிது நேரத்தில்ஒளிப்பப்படும்”

தோலர் பாண்டி டிவியில் தோன்றினார். அவர் சிவப்பு நிறம் கொண்ட சட்டை, சிவப்பு பேண்ட், ராணுவ
வீரனைப்போல உடை யணிந்து மார்பில் பல பதக்கங்களை அணிந்திருந்தார்.டிவியில் பேச ஆரம்பித்தார் பாண்டி ” நில மீட்பு போராட்டம் என்ற பெயரில் புரட்சி நடந்து முடிந்து விட்டது, பொதுமக்களும்
தோலர்களும் எல்லோரும் இதை கொண்டாட வேண்டும் இது உங்களுக்கான புரட்சி. நேற்று இரவு 10 மணிக்கு முன்னாள்முதல்வர் கலைஞரும் பின்னர் 12 மணிக்கு அம்மாவும், 1 மணிக்கு மன்மோகன், அத்வானி, சோனியா என எத்தனையோ
பேர்சொல்லியும் நான் கேட்கவில்லை, காரணம் என் உள்மனது என்னை வழி நடத்தியது, நேற்று முன் தினம் மத்திய கமிட்டி ஆவிஆரதா மூலமாக ரணதிவேயிடம் குறி கேட்கப்பட்டது, அவரும் இன்று புரட்சிக்கான நாளை குறித்தார். ஆயிரம் தடைகள்
வந்தாலும் புரட்சிக்கான சரியான நாளை தேர்வு செய்பவனே புரட்சியின் தலைவன், அவ்விதத்தில் நான் புரட்சியின் தலைவனாகிறேன்.

அதிகாலை இரண்டு மணிக்கு வேறு வழியின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையை நமது கட்சி உருவாக்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கடைசியாக சிபிஎம் போன்ற அனைத்து கட்சி MLAக்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து தங்களை சிபிஐ கட்சியில்  இணைத்துக்கொண்டனர், மேலும் கடவுளின் அனுக்கிரகம் போல சில சம்பவங்கள் நடந்தன.கலைஞர், புரட்சித்தலைவி, ராமதாசு, திருமாவளவன், வரதுக்குட்டி,புரட்சிக்கலைஞர், வாண்டையார், பச்சமுத்து உடையார், பெஸ்ட் ராமசாமி, தனியரசு, கிருஷ்ணசாமி ஆகிய அனைத்துக்கட்சி

தலைவர்களும், நமீதா, குஷ்பூ, மனோரமா, ரஜினி, விஜய், ஆர்யா, சூர்யா போன்ற முன்னணி நடிக நடிகையர்களும் தங்களை சிபிஐயில் இணைத்துக் கொண்டனர், இது நடந்தது அதிகாலை மூன்று மணிக்கு. பின்னர் புரட்சியின் திட்டப்படி அதிகாலையில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்கு அவர்கள் காலை 8.50 வரை உறங்கவைக்கப்பட்டார்கள், அவர்கள் காலையில் நல்ல செய்தியை கேட்க வேண்டுமென்பதற்காகவே. தற்போது ஆளுனர் மாளிகையை நோக்கி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர செல்லப்போகிறோம்.”

மாணிக்கத்துக்கு அடடா நேத்துதான புரட்சி வராதான்னு யோசிச்சோம், இன்னைக்கே வந்துடுச்சே, அதுக்குள்ளே முடிஞ்சு போச்சே, புரட்சிக்கு முக்கியமான காரணமே நாம ஏத்துன கொடிதான், 5 நிமிசம் லேட்டாயிருந்தாலும் என்னா ஆயிருக்கும்.சன் டிவியில் சிறப்பு செய்திகள் போட்டார்கள் “வணக்கம்” “முக்கிய செய்திகள்…………….. புரட்சி நடந்து முடிந்தது, பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் பாண்டியை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைத்ததை அடுத்து, தமிழக முதல்வராக தோலர்பாண்டி பதவியேற்பு, கம்யுனிசம் முறைப்படி மலர்ந்ததாக அறிவிப்பு……………………… நிதித்துறை அமைச்சராக கலைஞரும், போலீஸ்துறை அமைச்சராக அழகிரியும், திரைப்பட நல்வாழ்வுத்துறை அமைச்சராகசெயலலிதாவும், போக்குவரத்து துறை அமைச்சராக விஜய காந்தும், இளைஞர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இளையதளபதி விஜயும் முதல் கட்டமாக பதவி யேற்றனர். மேலும் பொதுத்துறை சீரமைப்பிற்கான அமைச்சர் பதவி புதியதாக ஏற்படுத்தப்பட்டு அது  பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு தரப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.”

மாணிக்கத்துக்கு தன்னை நம்பவே முடியவில்லை. ஆகா புரட்சி நடந்து முடிஞ்சுடுச்சே, அந்த கருமாந்திரம் புடிச்சவெள்ளையன் எங்க போனான் தெரியலையே? சரி அவனை தேடுறது இருக்கட்டும். காலையில சீக்கிரமே எழுந்தாச்சு,புரட்சிக்காக இவன் பட்ட பாடு கொஞ்சமா என்ன எத்தனை கம்பங்களில் ஏறி சிராய்ப்புக்காயங்களுடன், ரொம்பவேகளைத்துப்போய்விட்டான், கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றவாறு படுத்தான்.

ஒரே அழுகை சத்தம், மாணிக்கத்தின் 6 வயது மகள் “புரட்சி” வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். மாணிக்கம் கண்ணை விழித்தான். சுற்றியும் பார்த்தான், அவன் கட்டிய சிவப்புக்கொடிகளை காணவில்லை, அட ! எங்க போச்சு தெரியலையே ? பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தான்.  சமையல் செய்து கொண்டிருந்த அவன் மனைவி “ஏ மாமா புத்தி கீது கெட்டுப்போச்சா உனக்கு இப்புடி முழிக்குற! புள்ள அழுவுதே என்னன்னு பாக்கமாட்ட” என்றாள்.  மாணிக்கத்தின் முதல் மகன் ட்ராட்ஸ்கி பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

புரட்சியை இந்த புரட்சி கெடுத்துடுச்சே!!!!!!!!. கவலையோடு அவன் புரட்சியை தூக்கினான்.  அடச்சே இது கனவா?  அடச்சே இது கனவா? அவனுக்கு அவனே பதில் சொன்னான் “கனவாயிருந்தது  நனவானா எப்பூடி இருக்கும் ? ”  சப்பு கொட்டியபடி பல் விளக்க சென்றான்.

” இது கூட புரட்சி தானே?, பின்ன கனவில புரட்சிய சாதிச்சதை பாராட்டுனுமா இல்லையா ? எங்க எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்

அரிவாள் கதிரிருக்க பயமேன்………..கவிதைகள்

செப்ரெம்பர் 27, 2010

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்