B.P.O.அடிமை.காம்-பகுதி 5 – அடிமைகளின் ஆசை மொழி

B.P.O.அடிமை.காம்-பகுதி 5

அடிமைகளின் ஆசை மொழி

part5

வழக்கம் போலவே காலையில் பஸ்ஸை பிடித்து ரயில்வே ஸ்டேசன் வந்து அப்புறம் சைதாப் பேட்டையில் இறங்கி பிறகு 19 Bக்காக காத்திருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் பஸ் வரவில்லை. பக்கத்தில் ஒருவர் கேட்டார்.19 B வரலியா? “பரதேசி நாய்ங்க எங்க பஸ்ஸ உடறானுங்க? வாரம் ஆனா அத்தன பஸ் உட்டோம் இத்தன பஸ் உட்டோம்ன்னு சொல்லுறானுங்க இந்த ரூட் பஸ் மட்டும் அப்படியே இருக்குதே” என புலம்ப ஆரம்பித்தேன்.அவரும் சில கெட்ட வார்த்தைகளோடு ஆரம்பித்தார் முடிப்பதற்குள் வந்துவிட்டது

பஸ் எங்கேயிருந்துதான் அவ்வளவு கூட்டமோ சட சடவெனெ ஏறினார்கள் . எனக்கு பத்திரமாக நிற்பதற்கு இடம் கிடைத்தது. மெதுவாக மாட்டு வண்டிபோல இயங்க ஆரம்பித்தது . ஒரு நான்கு ஸ்டாப்தான்சென்றிருக்கும் மத்தியகைலாசத்துக்கு சற்று முன் வண்டியை நிறுத்திவிட்டார்கள். நடத்துனர் மெதுவாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.ஆளாளுக்கு கத்திக்கொண்டிருந்தோம்.எதையும் காதில் போடவில்லை.15 நிமிட இடைவேளைக்கு பிறகு கிளம்பியது. கொஞ்ச நேர பயணம். நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இறங்கினேன். வெயிலோ பட்டய கிளப்ப தலையில் கர்ச்சீப்பை கவிழ்த்துக்கொண்டு ஓடினேன்.

செய்ய வேண்டிய சம்பிரதாய வேலைகளை செய்து விட்டு அலுவலகம் உள்ளே சென்றிருந்தேன். ரொம்ப நாள் கழித்து டே ஷிப்ட்-ல் வந்திருந்தேன். எல்லோரையும் விசாரித்து விட்டு அமர்ந்தேன். என்னுடைய டீமைச்சேர்ந்த பெண் வந்து அமர்ந்தார்.அவரிடம் ஏதோ ஒரு மாற்றம். தெரிந்து விட்டது கண்ணாடியை மாற்றிவிட்டு லென்ஸ் போட்டிருந்தார். வேண்டுமென்றே கேட்டேன்” என்னங்க மூஞ்செல்லாம் வீங்கியிருக்கு வரவழியில விழுந்துட்டீங்களா? இல்ல உடம்பு சரியில்லயா?” “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே. லென்ஸ் போடிருக்கேன் ” என்றபடியே அவர் வார்த்தையில் ஒரு பெருமிதம். எனக்கு ஒரு சந்தேகம்” எதுக்காக லென்ஸ் போட்டிருப்பார்?”.

அடுத்த இரு நாட்கள் முழுவதும் வேறு வேலைகளில் மூழ்கிப்போனதால் அதைப்பற்றி என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆனால் வந்து அப்பெண்ணிடம் பேச இதை ஒரு சாக்காக வைத்து கொண்டு “இது நல்லாயிருக்கு”ஏன் மாத்தீட்டீங்க” என்ற பலரின் கேள்விகள் என் காதில் விழுந்து கொண்டே இருந்தன.

அன்று மாலை வேலை முடிந்து செல்லும் போது கேட்டேன் “எதுக்குங்க லென்ஸ் போட்டீங்க?”. “கண்ணாடி போட்டிருக்கிற்து அன் ஈஸியா இருந்துச்சு அதான்” தய்வு செய்து தப்பா எடுத்துக்காதீங்க அன் ஈஸின்னா கொஞ்சம் புரியல சொல்லுங்க”. “வேல செய்ய கஸ்டமா இருக்கு.” “அப்புடியா ஆமா நீங்க என்ன வேல செய்யுறீங்க” என்றேன். ஏன் தெரியாதா என்றபடி பேரைச் சொன்னார். “வேல செய்ய அந்தக்கண்ணாடி என்ன தொந்தரவா இருந்துச்சு நீங்க என்ன மரம் ஏறப்போறீங்களா? இல்ல ஒட்டப்பந்தய வீராங்கனையா? உங்க வேலைக்கு எந்தவிதத்துல அது தடயா இருந்துச்சு? ஒரு விசயத்த செய்யுறீங்கன்னா எதுக்குன்னே தெரியாமவே செய்யுறீங்களே எப்புடீங்க?”என்றேன்.

“அப்படி எப்படி சொல்லுறீங்க பத்து வருசம் முன்னாடி கிஷ்கிந்தா போனோம் அப்ப கண்ணாடி கீழ விழுந்துச்சு ,அப்புறம் எங்க அண்ணன் கூட சொன்னான் அதான் மாத்துனேன்”.    “அப்ப உங்க தேவைக்கு மாத்துல உங்க அண்ணன் தேவைக்காக மாத்துனீங்களா?இல்ல பத்து வருசமா அந்த விசயத்த நினச்சுகிட்டேயிருந்து லென்ஸ் போட்டீங்களா? பதில் சொல்லுங்க” என்றேன் அதற்கு பதில் இல்லை.

அறிவியலின் எந்த கண்டுபிடிப்பிற்கும் நான் எதிரா பேசலை அறிவியல் தான் கம்யூனிசம் . தன்னுடைய தேவை என்பதை மீறி மற்றவர்களின் தேவைக்காக தன்னை மாற்றிகொள்வது அப்படீங்குற விசயத்துல தான் எல்லோரும் தீவிரமா இருக்காங்க” ஏன் ஒரு விசயத்த செஞ்சீங்கன்னு கூட அதுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்ககுறீங்களே அதுதான் முதலாளித்துவத்தோட வெற்றி”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்னோட தேவைக்குதான் நான் வாழறேன்” என்ற படி கிளம்பினார். அவ்வாரம் முழுவதும் வேலைப்பளு காரணமாக அவ்விசயத்தப்பற்றி பேசமுடியவில்லை.

அவ்வாரம் முடிந்து அடுத்த வாரம் நைட் ஷிப்ட்ல் இருந்தேன். எல்லோருக்கும் மெயில் வந்திருந்தது. அலுவலகத்தில் பெண்கள் எல்லோரும் பெண்கள் தின கொண்டாட்டத்தை கொண்டாடிவிட்டார்களாம்.அந்த புகைப்படங்கள் மெயின் சர்வரில் போட்டிருந்தார்கள். விபி,மேனேஜர் ஹெச்.ஆர்.மற்ற பெண் தொழிலாளர்கள் உட்பட சமமாய் உட்கார்ந்து போஸ் கொடுத்திருதார்கள்.இன்னொரு போட்டோவில் கேக் சாப்பிட்டுக்கொண்டிருதார்கள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர் நோக்கினேன்.

எதிர்பார்த்த வாரமும் வர நேரமும் கைகூட நான் ஆரம்பித்தேன்” போட்டோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன அவ்வளவு ஜாலியா இருந்தீங்க, எல்லோரும் புடவைக்கட்டீருக்கீங்களே? எப்புடி முன்னாடியே சொன்னாங்களா?” ஆமா முன்னாடி நாள் எல்லோரையும் ஹெச் ஆர் கூப்பிட்டு சொன்னாங்க”.

“அப்புடியா சொன்ன வுடனே புடவைய கட்டீட்டு வந்துட்டீங்களா பெண்கள் தினம்னா என்னன்னு தெரியுமா ? அமெரிக்காவுல பெண்கள் தன்னோட கொத்தடிமைத்தனத்த எதிர்த்து போராடினாங்க ஆனா நீங்க எல்லாம் நவீன கொத்தடிமை பீபிஓவில அடிக்கவோ திட்டவோ வேண்டாம் சொன்னாவே செஞ்சுடுறீங்க இல்லயா?”.

” புடவை கட்டுறது என்ன தப்பு ?. “புடவை கட்டுறதப்பத்தி பேசல உங்களுக்கு எது தேவையோ அதை உடுத்த உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா மற்றவங்களோட கட்டளைய இன்பமா ஏற்று அடிமையா வாழறீங்கன்னுதான் சொல்லுறேன்,

அதாவது நீங்க உழைக்குற உழைப்புக்கு இங்க சம்பளம் இருக்கா இல்ல, காலையில வந்துட்டு தினமும் குறஞ்சது ரெண்டு மணி நேரம் ஓ.டி பாக்குறீங்களே அதுக்கு ஏதாவது அலவன்ஸ் தராங்களா? இல்ல நீங்க ஒரு பெண் அப்புடீங்கறதால எத்தன பிரச்சினய சந்திச்சு இருப்பீங்க அதப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா?இல்ல நவீன கொத்தடிமையா மாறிக்கிட்டு வர நமக்கு மகளிர் தினம் நாளைக்கு சேலை கட்டிட்டு வான்னு சொன்னா எதுக்கு வரணும் என்ன அவசியம்?

சுரண்டுகிற வி.பியும், ஹெச்.ஆரும். சுரண்டப்படுகிற எங்களோட எப்புடி மகளிர் தினம் கொண்டாடமுடியும்ன்னு ஏன் பேசல?”…………………….

சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன் ” அதே சீனியர் ஹெஆர் பசங்கள கூப்பிட்டு ஏப்பா எல்லோரும் வேட்டி கட்டிட்டு வாங்கன்னு சொன்னா எல்லோரும் கட்டிட்டு வருவாங்களா என்ன? ஆனா புடவை கட்டிட்டு வான்னு பெண்கள்கிட்ட சொன்னா உடனே தன்னோட தேசியக்கடமையா செய்யுறீங்க ஆனா ……………….”என்றேன்

அதற்குள் அவர் இடை மறித்தார் ” உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்களே எனக்கு பிடிச்சுருக்கு அதான் போட்டேன், எனக்கு பிடிச்சதான் நான் செய்யுறேன்.மத்தவங்களுக்காக வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” .

சரிங்க ” என்ன சைக்கிள் வச்சுருக்கீங்க?” .”லேடிபேர்ட்”என்றார். “ஏன் ஹீரோ சைக்கிள் வாங்கல அது லேடி பேர்ட விட தாங்கும் விலையும் குறைவுதான”. “எனக்கு பிடிக்கல” என்றார்.” எனக்கு பிடிக்குது பிடிக்கல என்பத யார் தீர்மானிக்குறா நீங்களா இல்ல அந்த சைக்கிள் கம்பெனிக்காரனா? ஏன்னா முதலாளி தீர்மானிக்குறான் இதுக்கு இப்படியெல்லாம் விளம்பரம் கொடுத்தா இப்படி வியாபாரம் ஆகும் என்று.

ஒரு காலத்துல கண்ணாடிக்குன்னு அத்தன விளம்பரம் வந்துச்சு மருத்துவமனைகள் மூலமா ஆனா இப்ப அதே மருத்துவ மனைகள் என்ன சொல்லுது கண்ணாடி போடுறது கண்ணுக்கு விலங்கு மாட்டுறது போலவாம். லென்ஸ் போடுங்க லேசர் சிகிச்சை செய்யுங்க என்று இப்ப சொல்லுங்க நீங்க உண்மையாகவே உங்க நல்லதுக்குதான் லென்ஸ் போட்டீங்களா? “

“நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக்குறோம் இந்த சைக்கிள் தான் வாங்கணும் ஏன்னா அது லேடிஸ்க்குன்னு உருவானது, என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன கண்ணாடின்னு கூப்புடுறாங்க ,டூர்க்கு போனப்ப என் பிரண்ட் சொன்னா ஏன் இன்னும் கண்ணாடி போட்டிருக்க லென்ஸ் போடலியான்னு?.இது மட்டுமல்ல பேர் அண்ட் லவ்லியில இருந்து அடிக்குற செண்ட் வரைக்கும் மனிதனை ஒரு பொருளா மாத்தி இருக்கு . கருப்பா இருந்தா தன்னம்பிக்கை போயிடும், வாழ்க்கையே நாசமாபோயிடும் பேர் அண்ட் லவ்லி போடுன்னு சொல்லுறான்.அந்த விளம்பரம் புடிக்குதோ இல்லையோ ஏதாவது கிரீமை வாங்கி பூசிக்கிறது.”

“இப்படி ஒண்ணு ரெண்டு இல்ல வாழ்க்கயில எல்லா விசயத்தையும் ஏன் வாழ்க்கையையே மத்தவங்களுக்காகத்தான் வாழறோம். உங்களுக்காக உண்மையிலே ஒண்ணு பண்ணனுன்னு நினச்சீங்கன்னா போராடுங்க , பெண்கள் அடக்கப்படும் போது, உழைக்கிற மக்கள் பாதிக்கப்படும்போது ஏன் நீங்க பாதிக்கப்படும்போதும் போராடுங்க.ஆனா பலரும் அதப்பத்தி பேசவே தயாராயில்லை அப்படீங்கற்துதான் உண்மை. நல்லா  யோசிச்சுப்பாருங்க தியேட்டர் வாசல்ல கால்கடுக்க நிக்கத்தெரியுது,

கல்ச்சுரல் புரோகிராம்ல ஆடத்தெரியுது,ஆனா மக்களோட நம்மளோட பிரச்சனயப்பத்தி ஏன் பேச முடியல எது தடுக்குது ?.எது உங்கள மக்களை பத்தி பேசவிடாம தடுக்குதோ அதுதான் உங்கள தியேட்டர் வாசலில நிக்கவும் , உங்க முன்னாடியே கூட வேல செய்யுறவன் ஒரு பெண்ணை பத்தி கிண்டலடிச்சு பேசுனா அமைதியா இருக்கவும் செய்யுது. யோசிச்சு பாருங்க யாருக்காகத்தான் நீங்க வாழறீங்க?அது ஒண்ணுதான் விடுதலையை பெற்றுத்தரும்.அதில்லாம நீங்க செய்யுற எந்த வேலையும் உங்களை அடிமையாக நீடிக்கவே உதவும்.”

அப்பெண் அப்போது பேசவில்லை.பின்வரும் நாட்களில் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.இது நடந்து எப்படியும் ஒன்றரையாண்டுகள் இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன் பேச நேர்ந்த போது கூட அந்த அடிமைத்தனத்தின் சாயல் அவரிடமிருந்து துளியும் விலகவில்லை என்பதனை அவரின் மவுனமே காட்டிக்கொடுத்தது.

ஒரு வேளை மவுனங்கள் தான் அடிமைகளின் ஆசைமொழியோ என்னவோ?

குறிச்சொற்கள்: , , , , , , ,

8 பதில்கள் to “B.P.O.அடிமை.காம்-பகுதி 5 – அடிமைகளின் ஆசை மொழி”

  1. நொந்தகுமார் Says:

    நல்ல பதிவு. தொடர்ச்சியாக எழுதுங்கள். பீல்டில் நிற்பவர்கள் தான் இப்படி பல அனுபவங்களை சொல்லமுடியும்.

    அந்த பெண்ணிடம் நீங்கள் ஒருவர் மட்டும் பேசுகிறீர்கள். சீரழிவு கலாச்சாரம் ஓயாமல் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறதே?

  2. செங்கொடி Says:

    அடிமையாய் இருப்பதையே சுதந்திரம் என்கிறார்கள், சுரண்டப்படுவதையே சுகம் என்கிறார்கள், மவுனமே மொழி என்கிறார்கள் சுய நலத்தையே மனிதப்பண்பாய் கொண்டவர்கள். ஆனாலும் அவர்களால் தொடர்ந்து அப்படியே இருந்து விட முடியாது.

    சிறப்பாக வந்திருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்

    தோழமையுடன்
    செங்கொடி

  3. நொந்தகுமார் Says:

    நேற்று சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் பதிவில் படங்கள் அருமை. உட்கார்ந்து சிந்திச்சு, வரைவீங்களோ?!

  4. அர டிக்கெட்டு ! Says:

    பொதுவாகவே பெண் என்றால் அழகுப்பொருள் என அனைந்து ஊடகங்களும் தீர்மானித்துவிட்டன. அது ஆணாதிக்க சிந்தனை என்பதை மறுத்து பெண்கள் அழகாய் இருப்பதையே பெரிய்ய்ய்ய உரிமையாக கருதுகின்றனர். சோசியல் லைஃப் என்பதன் பொருள் குடித்து கூத்தடிப்பது என மாறிவிட்டது. இப்படி இருக்கின்ற உலகத்ததையே உண்மை என நம்பும் ஒரு பெண்ணிடம் உங்கள் கேள்வி பயத்தையே ஏற்படுத்தியிருக்கும். யாரும் தனது நம்பிக்கை உடைவதை விரும்புவதில்லையே. ஒரு வகையில் ஆண்களை விட இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.

  5. அர டிக்கெட்டு ! Says:

    தோழர் கலகம். பெண்கள் தினம் என்பது சோசலிச ரசியாவில் தான் முதன் முதலில் கொண்டாடப்பட்டது. முதலில் அதன் பெயர் உழைக்கும் மகளிர் தினம் – Working Womens Day என்று நினைக்கிறேன். மேலும் ஒரு விசயம். கட்டுரைகளை ஜஸ்டிபை செய்வதர்கு பதில் லெப்ட் அலைன் செய்யுங்களேன், வார்த்தை பிரிந்து படிப்பதற்கு ஒரு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

  6. xyz Says:

    Lady Bird is more suited for women than the Hercules/Hero cycle.
    Contact lenses are preferred because they are convenient. Doctors dont suggest them to all patients. Wearing a glass is not the only option. I think if any girl disagrees with you, you will simply brand her as slave or
    irrational. You try to understand them instead of looking through your ‘red’ lenses always. Girls are not fools. They may make some adjustments and that does not mean that they lack agency or they are slaves. Today a BPO job gives them a good income. That helps them in so many ways. For you they may be slaves but for them you may be a slave to an ideology/party.

  7. Anand Says:

    உலகின் சிறந்த அழகிக்கு கூட கண்ணாடி அணிந்தால் அது அவளின் வயதை அதிகமாகவும்,அழகை குறைத்தும்,கண்ணைச்சுற்றி கருவளையத்தையும் ஏற்படுத்தும்.அவள் என்ன பிறக்கும்போதே கண்ணாடியுடனா பிறந்தாள்? மீண்டும் தன் பழைய நிலையை அடைந்துள்ளார் அப்பெண் என்ற கோணத்தில் பாருங்கள்.

  8. kalagam Says:

    நண்பர் ஆனந்த்,

    ஒரு பெண் கண்ணாடி அணிந்தால் நல்லதா அல்லது லென்ஸ் அணியலாமா என்பது விவாதமல்ல? எது தன் தேவைக்குகந்தது என்பது அறியாது முதலாளித்துவ ஊடகங்கள் சொல்லுவதையே கிளிப்பிள்ளை போல செய்து தன்னையும் ஒரு பொருள் போல செதுக்கிக்கொள்ளும் செயல் சரியா தவறா என்பதுதான் கேள்வி விவாதம்.

    ஒரே ஒரு கேள்வி

    கருவளையம் இருப்பது அழகு அல்ல, லென்ஸ் போடுவதுதான் அழகு என்ற சிந்தனையை படித்த உங்களைப்போன்றவரிடம் கூட இந்த வியாபர யுக்தி உருவாக்கியிருப்பது சரியா தவறா?

நொந்தகுமார் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி