செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்

செம்மொழி மாநாடும்   நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்

அவசர அவசரமாய் பேருந்து நிலையத்திற்குள் சென்றேன். முந்தைய நாள் பயணக்களைப்பின் காரணமாக  தாமதமாகிவிட்டது.  பேருந்துகள் வரிசையாய் கோயம்புத்தூருக்கு  நின்றிருந்தன.  நான் நோட்டம் விட்டேன். மூன்று பேருந்துகள் கழித்து “உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு பேருந்து ” ஒன்று   மிக மிக பரிதாபமாய் நின்று கொண்டிருக்க, அதில் ஏறி உட்கார்ந்தேன். செம்மொழி மாநாட்டிற்கு பயணக்கட்டணம் 5 ரூபாய் என்றும் அருகிலிருந்தவர் சொன்னார். சரி 23 ரூபாய் மிச்சம் என்றபடி அந்த டப்பாவில் ஏறி அமர்ந்தேன். என்ன செய்வது 23 ரூபாய் சம்பாதிப்பது சாதாரண விசயமா என்ன?

நடத்துனர் வந்தார் ” கோவை மட்டும் உட்காரு, கோவை மட்டும் உட்காரு”” ஒரு பயணி   கேட்டார் ” மாநாட்டுக்கு போவுங்களா ?, எத்தனை மணிக்கு போவும்?”  ” எனக்கு எதுவும் தெரியாது, வண்டியை எடுக்க சொன்னா எடுப்பேன் ,  அவ்வளவு தான், உன்ன மாதிரிதான் நானும்”  பிறகு யாரும் அவரிடம் கேட்க வில்லை. என்னருகில் அமர்ந்திருந்த பயணி முணுமுணுத்தார் “திமிர்பிடிச்சவன்”.

பேருந்து கிளம்பியது,  பயணச்சீட்டுக்காக ரூ 28 வசூலிக்கப்பட்டது. நடத்துனரிடம் கேட்ட போது  ” எனக்குத் தெரியாது” அதே பழைய பல்லவியை பாடினார் . ஒருவர்ர் சொன்னார்  “நான் மட்டும் தான் இளிச்சவாயன்னு நெனச்சேன், எல்லாரும் துணைக்கு இருக்காங்க நெம்ப சந்தோசம் “ நாங்கள் சேர்ந்து இளித்தோம், இளிச்சவாயர்களல்லவா.
கடைசி நாளில் எல்லா பேருந்திலும் அதே அளவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களிடம் பேருந்துக்கட்டணம் குறைவு என்று சொல்லி கூட்டம் கூட்டுவது , பின்னர் வண்டி புறப்பட்டபின் விலையைச் சொல்வதென  திட்டமிட்ட பிராடு வேலை நடந்திருக்கிறது. இன்னொருவர் சொன்னார் “அங்க எல்லா பஸ்ஸூக்கும்  1 ரூபாயாம் ”

பேருந்து அநியாயத்திற்கு ஊர்ந்து சென்றது, சரி 2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய நாம் அரை மணி நேரம் அதிகமாகுமென நினைத்தேன்.  அவினாசியிலிருந்து ஒவ்வொரு 1/4 கி.மீட்டருக்கும் போலீசு படையாக  இருந்தது.  செல்லும் வழியயல்லாம் திமுகவினர் தங்கள் சொந்த விழாவினை சிறப்பித்து டிஜிட்டல் தட்டிகளால் நிரப்பியிருந்தார்கள். இப்பகுதியில் அழகிரிக்கு இடமில்லை போலும். காலையில் 9.20க்கு எடுக்கப்பட்ட பேருந்து எப்படியோ தட்டு தடுமாறி 11.30 க்கு கருமத்தம்பட்டியை அடைந்தது. எனக்கு ஒரு சந்தோசம் ” இன்னும் அரை மணி நேரம் தானே, நாம கணக்கு போட்ட மாதிரியே அரை மணிநேரம் தாமதம்”. ஆனால் நாம் ஒரு கணக்கைப்போட்டால் ஆண்டுகொண்டிருப்பவன் வேறொரு கணக்கைப் போட்டு விட்டார்.

திடீரென பேருந்துகள் கருமத்தம்பட்டிக்குள் திருப்பிவிடப்பட்டன, அன்னூர் சாலையில் பயணித்த பேருந்து  சிறிது தூரம் சென் பின் வாகராயம்பாளைம் வழியாக புகுந்தது. அது சரியாக 10 அடி ரோடு, எதிரில் வண்டி வந்தார் சாலையை விட்டு இறக்கிதான் வைக்க வேண்டும். ஆனால் பிரச்சினை இல்லை கடைசி வரை எந்த நான்கு சக்கர மற்றும் பேருந்துகளோ அவ்வழியே வரவில்லை.  நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் வழியே தெரியவில்லை. அப்பகுதியிலிருந்த மக்கள் போய் சேரும் வரை வழியைச் சொன்னார்கள். அருகிலிருந்த பயணி சொன்னார் “கண்டக்டர் அப்பலேர்ந்து சரித்தானுங் சொன்னாரு, எனக்குத்தெரியாது , எனக்குத்தெரியாதுன்னு , நமக்குத்தானுங் புத்தி சுவமில்ல” எல்லாரும் சிரித்தோம்.

பேருந்து செல்லும் வழியியல்லாலம் மக்கள் இந்த நேரத்தில் பேருந்துகள் இவ்வழியே செல்வதை ஆச்சரியமாகப்பார்த்தார்கள் .  குழந்தைகள் ஆர்வமாய் கைகாட்டின.  வழியெங்கும் வறண்டு போன பூமி பரிதாபமாய் காட்சியளித்தது.  காடுகள் பிளந்து வறண்டு கிடந்தன. கோவை மாநகரம் வெள்ளையடிக்கப்பட்டு இருப்பதாய் பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கைகள், ஒரு எட்டு இப்பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்.

வாகராயம்பாளையத்தில் பொதுமக்கள்  குறிப்பாக பெண்கள் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நின்றிருந்தார்கள்.  பேருந்து செல்வதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள், பேசிக்கொண்டிருந்தார்கள். செல்லும் வழியெல்லாம்  செப்பனிடப்படாத சாலைகளும், வறண்டு போன பூமியுமாய் இருந்தது. ஒரு மணி நேரம் சுற்றிய பின் சத்தியமங்கலம் சாலைக்கு பேருந்து வந்தது. கோவைக்கு 15 கி.மீ எனப்பல்லைக் காட்டியது பலகை. சிவானந்தா, கணபதி வழியாக பேருந்து செல்ல,  வழியெங்கும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருக்க, கோவை மாநகரமே மானமிழந்து அசிங்கமாக
வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது
. நான்கு நாட்களாய் முடக்கப்பட்டிருக்கின்றது கோவை மாவட்டத்தின் தொழில்கள் அனைத்தும், இருந்தாலும் பொய்யாய் மினுக்கியது, வறுமை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்பு பார்த்த கிராமங்களோ போலியாக அல்லாது வறுமையின் அழகை அழகாய் எடுத்தியம்பின.

முழுதாய் 3.30 மணிநேரம் தின்ற பின்னர் ஒரு வழியாக காந்திபுரத்தில் இறங்கினேன்.  அங்கிருந்து கொடீசியா செல்லும் பேருந்தொன்றை தேடிப்பிடித்தேன். அது ஒரு டீலக்ஸ் பேருந்து பயணச்சீட்டு 7.00 ரூபாய்(பத்திரிக்கைளில் 1 ரூபாய் தானென படித்ததாக  ஒரு நபர் கூறினார்).கொடீசியாவில் இறக்காமல் 2 கி.மீ தள்ளி பாலத்திற்கருகில் இறக்கி விட்டார்கள்.  ஆயிரக்கணக்காணோருடன் நானும் பயணித்தேன். காவல்துறை “அங்க போங்க, இங்க போங்க” என்று கத்திக்கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் எங்கு போகிறோம் என்று  தெரியவில்லை . ஒரு போலீசுக்காரர் மக்களைப்பார்த்து ” போங்கடா போங்கடா”  பாத்துப்போங்கடா”” என்றார். இன்னொரு போலீசுக்காரர் ஒருவரை அடிக்க லத்தியைத் தூக்கிகொண்டு ஓடி வந்தார்.

நான் நினைத்தேன் “ ஒருத்தன் வாங்கடா வாங்கடாங்குறான் இவன் போங்கடா போங்கடாங்குறான்”. சில போலீசெல்லாம் பல்லைக்கடித்தபடியே  “சார் போங்க ” என்றார்கள். ஓ இதுதான் இன்முகத்துடன் வரவேற்கிறதா!!!!!!. சுற்றி சுற்றி சென்றோம், ஆங்காங்கு போலீசார் வழி காண்பித்தார்கள(சுற்றி சுற்றி அலையவிட்டார்கள் 20 நிமிடம் நடக்க வேண்டிய தூரமெனில் 40 நிமிடம் பாதுகாப்பு கருதி அலையவிட்டார்கள் ). மாநாட்டுக்கு வரவேற்பு பந்தல் வரவேற்றது. அதில் “செம்மொழியாரே வருக” என்றிருந்தது.  உள்ளே கும்பலோடு சென்றவுடன் அது தனியாக முக்கால் கி.மீட்டர்  இருக்கும். உணவகம், பொருட்காட்சி  எங்கும் கூட்டமாக இருந்தது. மக்களுக்கு சுற்றிப்பார்க்க ஒரு இடம் கிடைத்தது போல சாரைசாரையாக வந்திருந்தார்கள்.

மாநாட்டுப்பந்தலை நெருங்கினேன். ஆடுமாடுகளை பட்டியில் அடைத்தது போல தடுத்து வைத்திருந்தார்கள். ஒரு நுழைவாயிலில் கூட்டமாக நானும் நிற்கஆரம்பித்ததேன்.  சுமார் 15 நிமிடங்களுக்குப்பிறகு பட்டியை திறந்தார்கள். ஒவ்வொருவரும் பரிசோதனை செய்யப்பட்டார்கள். உள்ளே நுழைந்தேன். திருச்சி செல்வேந்திரன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் நடிகர் சிவக்குமார் விழாவினை முடித்து வைத்துக்கிளம்பினார். முன்மேடையை நோக்கி பலரோடு நானும் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். காவல்துறையினர் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என்று வழிகாட்டிக்கொண்டு இருந்தனர். வளைந்து வளைந்து சென்றோம். கடைசியாய் மாநாட்டிற்கு வெளியில் வந்து விட்டேன்.

மறுபடியும் உள்ளே செல்லவேண்டுமென்றால் அரை கி.மீ நடக்க வேண்டுமே!. சரி நாய் வேசம் போட்டால் குரைச்ச்தான ஆக வேண்டும்.  வேறு ஏதோ வரிசை ஒன்றிருக்க அது எங்கே ஆரம்பிக்கிறதென்று சென்றால் அது ஒரு கி.மீ ஆனது, போகும் வழியில் இஸ்கான் கோயில் இருந்தது. அவர்களுக்கு கூட்டம் ஒரு வாய்ப்பாகி விட்டது. வரிசையில் நின்றவர்களிடம் பகவத்கீதையை பண்டாரங்கள் விற்றுக்கொண்டிருந்தன, அவர்களில் 99% மலையாளப்பார்ப்பனர்கள்.   நானே நால் வர்ணத்தையும் உருவாக்கினேன் என்ற  பார்ப்பன கொடுங்கோன்மையின் மொத்த குத்தகையான பகவத்கீதை விற்க அனுமதி இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் தோழர்கள் போஸ்டர் ஒட்டினால் கைது செய்யப்படுகிறார்கள்.

பார்ப்பன வெறியை நிலைநிறுத்துவோருக்கு இடமுண்டு சாதியை எதிர்ப்போருக்கு இடமில்லை அல்லவா. இதல்லவா பகுத்தறிவு.  வாழும் வள்ளுவராம், நல்ல வேளை வள்ளுவர் உயிரோடு இல்லை. மணி 2.30 ஆகி விட்டது. உணவு எங்கே வாங்கலாமென்று திரிந்து கொண்டிருந்தேன். அங்கும் பகவத்கீதை கடை போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். விற்பவர் “ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய புனிதம்” என்றார், உடனே திமுக குலக்கொழுந்துகள் பவ்யமாய் வாங்கின. குடிநீருக்காக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பெரிய தொட்டியில் அருகில் அரசு மானியத்துடனான மிகக்குறைவான உணவு என்று போட்டிருக்க,
“ஹோட்டல் வஸந்தபவனின்” அந்த வண்டியில் 30 ரூபாய் கொடுத்து உணவை வாங்கினேன். மீண்டும் அரைமணி நேரம் கழித்து பரிசோதனைக்குப்பின் மாநாட்டு வளாகத்திற்குள் சென்றேன். உள்ளே கரகாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். முன்பு வரும் போது கூட்டம் அவ்வளவாக இல்லை, கலை நிகழ்ச்சிக்கு அதிக அளவில் கூட்டம் மொய்த்தது.

அடித்துப்பிடித்து ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.வாங்கிய உணவுப்பொட்டலத்தை பிரித்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஒரு சிறிய டப்பாவில் புளிசோறு,  ஒரு சிறிய டப்பாவில்  எலுமிச்சை, கின்லே தண்ணீர்,குர்குரே, சின்னீஸ் ஊறுகாய். சோறு மொத்தமாய் 5 ரூபாய்க்கூட போகாத அளவுக்கு கேவலம். கின்லேவையும் குர்குரேவையும் தூக்கி வீசினேன். மொத்தமாய் கணக்குப்போட்டால் 30 ரூபாய் கூட போகாத இதற்கு எதற்கு மானியம்?  அதற்கு எத்தனை கோடிகள் அமுக்கினார்களோ தெரியவில்லை. மக்களின் பணத்தை வாரியிறைக்கப்படும் இவ்விழாவில் முடிந்த அளவுக்கு கொள்ளை நடந்திருப்பதற்கு  சாட்சி இந்த உணவே போதும்.

கலைநிகழ்ச்சி முடிந்து சுமார் 30 நிமிடம்  ஒன்றும் இல்லை, சரியார் 3.52 க்கு கருணாநிதி வந்தார். வந்தவுடன் அவருக்கு வாழ்த்துப்பா பாடினார்கள். ஆகவேண்டிதெல்லாம் ஆனது. கருணா பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அளவில் கலை நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்த்த பலர் கிளம்பினார்கள். 6.00 மணிக்கு விழா முடிந்தது. இது திமுக விழா அல்ல என்றார் கருணாநிதி, எனக்குத்தெரிந்து வந்திருந்தவர்களில் திமுவினர்தான் மிக அதிகப்பங்கு. போலீசு பொதுமக்களை திட்டிக்கொண்டிருந்தது.திமுவி

னரோ போலீசைத்திட்டிக்கொண்டிருந்தார்கள். மாநாட்டிற்கு வெளியே திமுக சம்பந்தமான புத்தகங்கள், படங்கள், கேசட்டுகள்  அழகிரியின் படங்கள் குறிப்பாக விற்பனை செய்யப்பட்டன. வேறு கட்சிப்புழுக்கையைகூட காணமுடியவில்லை.

மக்கள் கூட்டம் என்பது திட்டமிட்டு  நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது, உள்ளே வரும் கூட்டத்தை வெளியே அனுப்பி மீண்டும் உள்ளே வரவைத்துக்கொள்ளப்பட்டது.  உள்ளே செல்வதற்கு மிகக்குறைந்த அளவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வளவு கெடுபிடி இல்லையயன்றால் கண்டிப்பாக இவ்வளவு கூட்டம் உள்ளே இருந்திருக்க வாய்ப்பில்லை,. முத்தமிழறிஞரின் பேச்சைக்கேட்காமல் ஓடிய தமிழ்க்கூட்டத்தை பார்த்த போது இது மெய்யயன்றானது.  மாநாட்டு வளாகத்திலிருந்து வெளியே வந்தேன் , பல்லாயிரக்கணக்கானேரோடு நடந்தேன், நடந்து கொண்டே இருந்தேன். கொடீசியாவிலிருந்து காந்திபுரத்திற்கு பேருந்து இல்லை.

விஐபிக்களுக்காக முடக்கப்பட்டிருந்தது சாலை  நடந்து செல்ல மக்களுக்கு மிகக்குறைவான இடம் ஒதுக்கியது காவல்துறை  மக்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். அவர்களோடு நானும் நடந்தேன்.  நடக்க ஆரம்பித்தபோது காந்திபுரம் 7 கி.மீ என்றிருந்த பலகை இப்போது 1.கி.மீ என்றாகிவிட்டது. நான் மட்டுமே நடந்து கொண்டிருந்தேன், அப்படியே பேருந்து நிலையம் சென்று கிளம்பினேன். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 3 பேருந்துகள் மட்டுமே என்னைக்கடந்தன அதுவும் கடுங்கூட்டத்தோடு ,காலையிலிருந்த அளவுக்கு மாலை வெளியூர்களுக்கோ உள்ளுரூக்கோ பேருந்து வசதி இல்லை. மக்கள் பிதுங்கிக்கொண்டு பயணித்தார்கள், விழாவிற்கு வந்த பின்னர் அம்போவென விட்டுவிட்டார் கருணாநிதி. இந்நிலையில் கருணாவை கடலில் கட்டுமரமாக பயன்படுத்தினால் அவ்வளவுதான். செம்மொழி மாநாட்டிற்கு வந்ததற்கு என் கால்கள் வெம்பிப்போனதுதான் மிச்சம்.

வறண்டு போன கவிதை

தமிழகத்தின் கிராமங்களின் அதே நிலை, மறைக்கமுடியாத வறுமை, செம்மொழித்தமிழனுக்கு வாழவே வழியில்லை, மாநாட்டுக்கு 500 கோடி

ஈழத்தின் பிணநாற்றம் போவதற்குள் மக்களின் பணத்தில் கச்சேரி, சாவு வீட்டில் ரகுமானின் பாப் மியூசிக்

வெளியே பார்ப்பன பாகவதம் , உள்ளே பணக்கார பாகவதம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் யார் அந்த ஒருவன் ? சிறீமன்மத பாகவதத்தை பக்தியோடு மொய்த்த கழககண்மணிகள்

மலிவு விலையில் மானிய சோறு கொள்ளைஅடிக்க புது டெக்னிக்

30 ரூபாயில் 10 ரூபாய் கின்லே 5 ரூ குர்குரே செம்மொழித்தமிழனின் வாழ்வை அழித்த கோககோல கம்பெனியின் கின்லே, செம்மொழி மாநாட்டுக்கு தமிழனுக்கு தரப்பட்ட பாலிடாயில்

பன்னாட்டு பாகாசுரக்கம்பெனிக்கு வரவேற்பு, வறுமைத்தமிழனுக்கு குர்குரே தரும் கொடூரம், பெப்ஸியால் வேலை இழக்கவைக்கப்பட்ட மக்களுக்கு அதையே தந்து கொள்ளையடிக்கும் அற்புதம்


குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

13 பதில்கள் to “செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்”

  1. P.Kandaswamy Says:

    நல்லா சொல்லீருக்கீங்க.

  2. mugil Says:

    இன்னும் உங்களைபோன்றோர் தைரியமாக எழுதுவதை
    பார்கையில் மனது சந்தோசமாக இருக்கிறது அய்யா.
    வாழ்த்துக்கள் அய்யா .முகிலன் .

  3. அசோக் Says:

    போக வேண்டாம் போக வேண்டாம் ந்னு சொன்ன கேட்ட தானே! நல்ல வேலை எழுதிவிட்டீர்கள். ‘வரலாற்று’ சிறப்பு மிக்க நிகழ்வை பார்க்க தவறி விட்டோமோ என்ற் மனக்குறை தீர்ந்தது. கண்ட கண்ட ‘மாநாட்டு’ க்கு போயி காலை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

  4. துளசி கோபால் Says:

    எதுக்கு கின்லேவைத் தூக்கிப்போட்டீங்க? தவிச்ச வாய்க்குத் தண்ணீர் வேணாமா?

  5. நொந்தகுமாரன் Says:

    மாநாடு செய்திகள் இன்னும் விரிவாக‌ செய்தி எதிர்பார்த்தேன். இருப்பினும் பதிவு நன்றாக இருந்தது

  6. the flex belt Says:

    You are a very smart person!

  7. செங்கொடி Says:

    புகைப்படங்கள் அருமை தோழர்.
    கோவைச்சுற்றிய இடங்கள் வரண்டு ஆனால் மாநாட்டில் செயற்கைப் பூங்கா என்று ஒப்பீடு செய்வது போல் இரட்டைப் படங்களாக பதிவிட்டிருந்தால் நெத்தியடியாக இருந்திருக்கும்.

  8. செங்கொடி Says:

    புகைப்படங்கள் அருமை தோழர்.

    கோவைச்சுற்றிய இடங்கள் வரண்டு ஆனால் மாநாட்டில் செயற்கைப் பூங்கா என்று ஒப்பீடு செய்வது போல் இரட்டைப் படங்களாக பதிவிட்டிருந்தால் நெத்தியடியாக இருந்திருக்கும்.

  9. Pointer Men's Basketball Says:

    Best you could edit the post title செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள் கலகம் to something more suited for your blog post you create. I loved the post even sononetheless.

  10. ஊரான் Says:

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    தோழமையுடன்

    ஊரான்.

  11. கும்மி Says:

    விருது வென்றமைக்கு வாழ்த்துகள் தோழர்.

  12. ஜோதிஜி Says:

    விருது உண்மையிலேயே இந்த ஆதங்கத்தை தீர்த்து இருக்கும்.

  13. kalagam Says:

    தோழர்களே, நண்பர்களே
    வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கும், வாக்களித்தமைக்கும் , தெரிவு செய்தமைக்கும்
    மிக்க நன்றி

    தோழமையுடன்

    கலகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: