Posts Tagged ‘இந்தியா’

Incredible India ! – பெருமைப்படு இந்தியனே !

செப்ரெம்பர் 9, 2010

Incredible India ! – பெருமைப்படு இந்தியனே !

தொலைக்காட்சியில் விளம்பரங்கள் பலவகை வருவதுண்டு. ஒவ்வொன்றும் ஓவ்வொரு தினுசாக, பல விளம்பரங்கள் மக்களை மடையர்களாக நிலைநிறுத்தும், குறிப்பாக பெண்ணடிமைத்தனத்தை தூக்கி நிறுத்தும் சாதனங்களாகவே இருக்கின்றன. முக்கியமாக ஒரு விளம்பரம்  அனைத்து ஊடகங்களிலும் வருகின்றது, அதுதான்  Incredible india. “இந்தியாவுக்கு வாருங்கள், அதன் அழகை ரசியுங்கள் ” என்று
வெளிநாட்டினரை அழைப்பதை மட்டுமல்ல அவர்கள் வரத்தை மக்கள் அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டுமென்று கூறுகிறது.

1. இரு வெளிநாட்டு பெண்மணிகள் இந்தியாவுக்கு வருகின்றார்கள், அவர்கள் பொருட்கள் வாங்குமிடத்தில் இந்திய ரவுடிகள் பிரச்சினை செய்ய ஆமீர்கான் வந்து  “இவங்களால தான் உங்க பாக்கெட் நிறையுது, அவங்க நம்மளப்பத்தி தப்பா சொன்னா யாரும் வரமாட்டாங்க, நம்ம விருந்தாளிங்கள கேவலப்படுத்தறாங்க நீங்க என்னய்யா வேடிக்கை பார்க்குறீங்க?” என கீதை ஓதுகிறார் உடனே பின்னர் மக்களுக்கு
ஞானம் பிறந்து இந்திய ரவுடிகள் அடித்து விரட்ட வெள்ளைக்காரப்பெண்மணிகள் நன்றி சொல்கின்றனர்.

2.ஆமீர்கான் தலைப்பிலேயே வருகிறார் ” நம்ம நாடு வளர்ந்துகிட்டு இருக்கு, மத்த நாடுகள் பார்க்குது, நம்ம நாட்டை நாமளே கேவலப்படுத்தலாமா?” ஆரம்பிக்கிறது விளம்பரம். வெள்ளைக்கார ஜோடி விமான நிலையத்திலிருந்து இறங்குகிறது, இறங்கியவுடன் ஒருவன்  பாக்குபோட்டு எச்சிலை கீழே துப்புகின்றான், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம். அப்புறம் அந்தஜோடி இந்திய வானுயர்ந்த கட்டிடங்களை
படம் எடுக்க முனையும் போது ஒரு இந்தியக்காரி தின்று விட்டு வாழைத்தோலை வீசுகிறாள்,  அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . அப்புறம் அவர்கள் காரில் பயணம் செய்யும் போது ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கிறான் அதை பார்த்து அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . மறுபடியும் நம்ம  ஹீரோ ஆமீர் வந்து ” நம்ம மானத்தை நாமதான் காப்பாத்தணும் என்கிறார்”


இன்கிரெடிபிள் இந்தியாவின் அனைத்து விளம்பரங்களிலும் ஒரு சுலோகன் இருக்கிறது அதுதான் “அதிதி தேவோ பவ” அதாவது விருந்தினர்கள் கடவுளைப்போன்றவர்கள் என்பதே அதன் அர்த்தம். அம்மொழி சமஸ்கிருதம் என்பதால் பார்ப்பனர்கள் ஆதிகாலத்தில் வந்தேறிகளாக குடியேறும் போதும் திராவிடர்கள் எதிர்த்து போராடும் போது நாங்கள் உங்கள் விருந்தாளிகள், நாங்கள்தான் கடவுள் என்று பீலாவோடு ஆரம்பித்திருக்கலாம் தங்கள் புரூடாக்களை, அவ்வாக்கியத்தையே இன்னமும் தொடரச்சொல்கிறார்கள்.  அதற்காக இப்போது ஊர்
சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினரெல்லாம் ஆக்கிரமிக்க வந்திருக்கிறார்களா? என்பதல்ல .


Incredible India – இந்தியனென்பதில் பெருமை கொள்

Incredible India என்பதற்கு அகராதியில் hard to believe, unbelievable, absurd, inconceivable என பல அர்த்தங்கள் வருகின்றன, நாம் சுருக்கமாக ” வியத்தகு இந்தியா “ என எடுத்துக்கொள்ளலாம். வியக்கத்தக்க வகையில் என்ன இருக்கிறது  இந்தியாவில் ? “வெளிநாட்டினரால்தான் நாடு முன்னேறுகிறது,  அவர்கள் சுற்றிப்பார்க்க வருவதால் பெரும் வருவாய் நாட்டிற்கு கிடைக்கிறது, அதனால் அவர்கள் நமது கடவுளைப்போன்றவர்கள்” . இந்தியா என்பது நாடே அல்ல , அது பல்தேசிய  இனங்களின் சிறைக்கூடம் சில அறிவிலிகள்
அறிந்ததே, பல அறிவாளிகளுக்கு தெரியாததே.

ஒரு நாட்டிற்கு எதனால் வருவாய் வரவேண்டும்? குறிப்பாக இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு வேளாண்மை முக்கியம்.அடுத்தாக ஆலைத்தொழில்கள் மூலமாக வருவாய் வரவேண்டும். வேளாண்மையை லாபகரமான  தொழிலாக மாற்றுவதனூடாகவே விவசாயிகள் வாழமுடியும். அதற்கு விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பது விவசாயியாக இருக்கும் நிலை தேவை. எண்ணை முதல் சிமெண்ட் வரை எல்லாப்பொருளுக்கும் முதலாளியால் விலை நிர்ணயிக்கப்படும் இந்தியாவில் தானியத்தை விளைவிப்பவன் அதற்கு விலையை நிர்ணயம் செய்யமுடியாது. இது வியக்கத்தக்கசெயல் அல்லவா?

இந்த பாரதநாட்டில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆலைகள் இழுத்து மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் உதிரிகளாக திரிந்து கொண்டிருக்கிறர்கள். அடுத்த நாள் சோற்றுக்கு உத்திரவாதமின்றி நாளை வேலை கிடைத்தால்தான் சோறு நிச்சயம் என்ற அளவில் தொழிலாளி சென்று கொண்டிருக்கிறான். முதலாளித்துவ பயங்கரவாதத்தால் தொழிலாளிகள் வேலையை
விட்டு நீக்கப்படுகிறார்கள், அதற்கெதிராக போராடினால் போலீசு மண்டையை உடைக்கிறது. சென்னையில் உள்ள நோக்கியாவில் பணி புரியும் பல தொழிலாளிகள் நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்ட போது, அவர்கள் ஆடிவிரதம் இருந்ததால்தான் மயக்கமடைந்தார்கள் என நோக்கியா தனது கூற்றை உலகத்திற்கு பறைசாற்றியதை காணும் போது நமக்குத்தோன்றுகிறது  , உண்மையிலேயே  இது வியக்கத்தக்க இந்தியாவே!

பட்டினிக்கொடுமையில் இந்த லோகத்திலேயே முதலிடமும் நம்ம இந்தியத் திருநாட்டுக்கே (இதுலயாவது நெம்பர் 1 ஆச்சுன்னு சந்தோசப்படவேண்டியதுதான்). பசியினால் நஞ்சானது தெரியாமல் மாங்கொட்டைகளை தின்று செத்துப்போன பழங்குடிகள் ஏராளம். அதற்கு அரசு சொன்னது “மாங்கொட்டையில் சத்து அதிகம்” இப்படி ஒரு கருத்தை வியக்கத்தக்க நாட்டில்தானே தெரிவிக்க முடியும். இன்னும் எத்தனையோ வியக்கத்தக்க விசயங்கள் இருக்கின்றன இந்தியாவில். கனிமவளங்களை சூறையாடுவதற்காக, அதை பன்னாட்டு
நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொண்டு கொல்ல எத்தனிக்கும் இந்த வியத்தகு இந்தியாவில் பிறக்க இந்தியர்கள் பெருமைப்பட்டுத்தானே ஆக வேண்டும்.

டெள கெமிக்கல் நிறுவனம் அமெரிக்காவில் எண்ணை எடுக்கும் போது நடந்த விபத்தில் செத்துப்போன நீர் நாய்களுக்கு நட்ட ஈடாக கொடுக்கப்பட்ட தொகையானது,  டெள கெமிக்கல் நச்சுவாயுவால் பல்லாயிரக்கணக்கில் செத்துப்போன போபால் மக்களுக்கு தூக்கியெறியப்பட்ட நட்டஈடைப்போல இருமடங்காகும். கோக், பெப்சி போன்ற குளிர்பான கம்பெனிகள் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குளிர்பானத்தின் மீது எவ்வளவு சதம் பூச்சிக்கொல்லியை கலந்திருக்கிறோம் என குறிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும்
தங்கள் குளிர்பானங்களில் குறிக்கவேண்டிய அவசியமில்லை என்று பதில் சொல்ல முடிகிறது. இப்படி ஒரு பதிலை, இப்படி ஒரு கேவலத்தை , இப்படி ஒரு அடிமைத்தனத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது ஆனால் ராமர் பிறந்த புண்ணிய பூமி ஏற்றுக்கொண்டிருக்கிறதெனில் இது வியக்கத்தக்க இந்தியா இல்லையா ? ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணானோரை கொன்று அவர்கள் ரத்தத்தை நக்கிக்குடிப்பதும் இந்தியாதான்.
நேபாளத்தில் மக்களாட்சி மலருவதற்கெதிராக தன் பார்ப்பன நரித்தனத்தை நிகழ்த்துவதும் இந்தியாதான்.

இந்தியாவில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா?

பச்சைப்பசேலெசன்ற காடுகள், அகன்ற புல்வெளிகள், புலிகள் விளையாடும் சுந்தரவனக்காடுகள், எது கானல் எது உண்மை எனத்திணறவைக்கும் பாலைவனங்ங்கள், இடி போல் தலையில் கொட்டும் அருவிகள், சிலுசிலுவென வீசும் தென்றல், கற்களை முகங்களாய் கொண்ட மலைகள், மலைகளின் சுனைகள் , சுனைகளில் இருக்கும் இனிக்கும் தண்ணீர்…………………..

………….. இது மட்டுமா?

நாம் அடிக்கும் விசிலுக்கு பதில் குரல் கொடுக்கும் குருவிகள், “காட்டுமிராண்டிப்பயலுங்க” என  நம்மை வேடிக்கைப்பார்க்கும் குரங்குகள், வேலையே செய்யாத ஆண் சிங்கங்கள், கூட இருக்கும் பாவத்திற்காக இரையை தேடிவரும் பெண்சிங்கங்கள்,  தன் குட்டியை யாராவது புகைப்படம் எடுப்பது தெரிந்தால் கூட அவர்களை பல கிலோமீட்டர் ஓட விரட்டும் யானைகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், சண்டையிடும்
கிளைமான்கள், விரட்டினால் மிடுக்காய் நிற்கும் கடத்திகள் ……………………………… எல்லாம் இருக்கிறது இந்தியாவில்,

ஆனால் இந்தியர்களுக்கு இருக்கிறதா? இல்லை எல்லாம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. காத்துக்கொண்டிருக்கிறார்கள் பன்னாட்டு முதலைகள்.

காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்படும் இந்தியாவின் காட்டாட்சி  அதனூடாக  ராணுவம் செய்யும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் நாசவேலைகளை எதிர்த்து போராடும் மக்களின் போர்க்குணம், நியாம்கிரி மலையின் ஒரு கல்லைக்கூட பெயர்க்க விடமாட்டோம் என போரிடும் தண்டகாரண்ய பழங்குடியின மக்கள் , அவர்களுடன் இணைந்து போரிடும் மாவோயிஸ்டுகள், இந்தியா முழுக்க மக்களுக்காக போரிடும் போராளிகள் என அனைத்தும்  உண்மையிலே வியக்கத்தக்கது மட்டுமல்ல பெருமைப்படத்தக்கது . நாட்டை சுற்றிப்பார்க்க வரும் வெள்ளையினத்தவர்கள் இம்மக்களை பார்க்க முடியாது.

வெள்ளையினத்தவர்களின் வருகைக்காக, அன்னிய மூலதனத்தின் வருகைக்காக மக்கள் அழிக்கப்படவிருக்கிறார்கள். ஆனால் போராடும் மக்கள், போராளிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், அவர்கள் ராவணனின் வாரிசுகள். ஒவ்வொரு துளி ரத்தம் கீழே விழும் போதும் ஆயிரம் போராளிகள் பிறப்பார்கள்.

“அதிதி தேவோ பவ” – வெளி நாட்டு விருந்தினர்களே! வாருங்கள் சுற்றிப்பாருங்கள், இந்திய அரசின் கோரமுகங்களை உலகிற்கு எடுத்துக்கூறுங்கள். இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாய் களத்திலிறங்குங்கள் இல்லையெனில் உங்கள் நாட்டு முதலாளிகளை பத்திரமாக இருக்கச்சொல்லுங்கள். அவர்கள் ஆடும் ஆட்டத்தைப்பார்க்கும் போது நீங்கள் அடுத்த முறை வரும் போது அவர்களின் பிணங்களுக்கு
மலர்ச்செண்டு வரக்கூட நேரலாம்.

ஆகத்து 15

ஓகஸ்ட் 15, 2009

aug15இந்திய சுதந்திரத்திற்கு
பிறந்த நாளாம்
இந்தியாவே
நீ பிறந்த நாள்தான்
எம் மக்களுக்கு துக்க நாள்…..

இந்தியர்களின் ரத்தம்
கொதிக்கலாம் இன்னும்
எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
கொதிக்கட்டும் மானத்தை
இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
எரிவதை பிடுங்கினால்
கொதிப்பது அடங்குமாம்
ஆனால் இங்கு
நடப்பதே வேறு
மனிதத்தை,சுயமரியாதையை
பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
கொதிக்கிறதோ இந்தியம் ….

ஆயிரம் செண்ட் அடித்தாலும்
துரோகத்தின் ரத்த கவுச்சி
போவதில்லை – உழைக்கும் மக்களின்
ரத்தத்தை நக்கிக்கொண்டே
உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..
பிறந்த நாள் சரி
பிறக்காமலே இறந்து
போன கதை தெரியுமா?

ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
நாளை வெளியுலகம்
பார்க்க ஆவலாயிருந்ததாம்
கரு
மருத்துவச்சியாய் ஆட்லெறி
குண்டுகள் மாற
தாயும் சிசுவும் பரந்த வெளியில்
சிதிலங்களாய்
பிணதிண்ணியாய்
இந்திய மேலாதிக்கம்…..
ஆகத்து 15

எம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்
எம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்

ஈழத்தில் பிறந்த நாளை
இறந்த நாளாய் திருத்தம் செய்யும்
சித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்
அன்று தான் பிறந்த நாள்

அவன் கதை முடிக்க
ஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க
பறையடித்து சொல்லுவோம்
ஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

மார்ச் 19, 2009

தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

maruthaiyan-copy1
” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?

” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால்  ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும்  உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை  செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,

வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த  உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
அப்படியானால்  என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”

“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய  சிங்கூர் விவசாயிகளையும்  சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும்  இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது

“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”

“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது  கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு  நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”

“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”

“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம்  கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ  20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”

“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள்  என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!

இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம்  ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”

“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்

வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “

தோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்

 

http://vinavu.wordpress.com/2009/03/31/elec0903/