Posts Tagged ‘ஐடி’

B.P.O.அடிமை.காம்-பகுதி 5 – அடிமைகளின் ஆசை மொழி

மார்ச் 25, 2009

B.P.O.அடிமை.காம்-பகுதி 5

அடிமைகளின் ஆசை மொழி

part5

வழக்கம் போலவே காலையில் பஸ்ஸை பிடித்து ரயில்வே ஸ்டேசன் வந்து அப்புறம் சைதாப் பேட்டையில் இறங்கி பிறகு 19 Bக்காக காத்திருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் பஸ் வரவில்லை. பக்கத்தில் ஒருவர் கேட்டார்.19 B வரலியா? “பரதேசி நாய்ங்க எங்க பஸ்ஸ உடறானுங்க? வாரம் ஆனா அத்தன பஸ் உட்டோம் இத்தன பஸ் உட்டோம்ன்னு சொல்லுறானுங்க இந்த ரூட் பஸ் மட்டும் அப்படியே இருக்குதே” என புலம்ப ஆரம்பித்தேன்.அவரும் சில கெட்ட வார்த்தைகளோடு ஆரம்பித்தார் முடிப்பதற்குள் வந்துவிட்டது

பஸ் எங்கேயிருந்துதான் அவ்வளவு கூட்டமோ சட சடவெனெ ஏறினார்கள் . எனக்கு பத்திரமாக நிற்பதற்கு இடம் கிடைத்தது. மெதுவாக மாட்டு வண்டிபோல இயங்க ஆரம்பித்தது . ஒரு நான்கு ஸ்டாப்தான்சென்றிருக்கும் மத்தியகைலாசத்துக்கு சற்று முன் வண்டியை நிறுத்திவிட்டார்கள். நடத்துனர் மெதுவாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.ஆளாளுக்கு கத்திக்கொண்டிருந்தோம்.எதையும் காதில் போடவில்லை.15 நிமிட இடைவேளைக்கு பிறகு கிளம்பியது. கொஞ்ச நேர பயணம். நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இறங்கினேன். வெயிலோ பட்டய கிளப்ப தலையில் கர்ச்சீப்பை கவிழ்த்துக்கொண்டு ஓடினேன்.

செய்ய வேண்டிய சம்பிரதாய வேலைகளை செய்து விட்டு அலுவலகம் உள்ளே சென்றிருந்தேன். ரொம்ப நாள் கழித்து டே ஷிப்ட்-ல் வந்திருந்தேன். எல்லோரையும் விசாரித்து விட்டு அமர்ந்தேன். என்னுடைய டீமைச்சேர்ந்த பெண் வந்து அமர்ந்தார்.அவரிடம் ஏதோ ஒரு மாற்றம். தெரிந்து விட்டது கண்ணாடியை மாற்றிவிட்டு லென்ஸ் போட்டிருந்தார். வேண்டுமென்றே கேட்டேன்” என்னங்க மூஞ்செல்லாம் வீங்கியிருக்கு வரவழியில விழுந்துட்டீங்களா? இல்ல உடம்பு சரியில்லயா?” “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே. லென்ஸ் போடிருக்கேன் ” என்றபடியே அவர் வார்த்தையில் ஒரு பெருமிதம். எனக்கு ஒரு சந்தேகம்” எதுக்காக லென்ஸ் போட்டிருப்பார்?”.

அடுத்த இரு நாட்கள் முழுவதும் வேறு வேலைகளில் மூழ்கிப்போனதால் அதைப்பற்றி என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆனால் வந்து அப்பெண்ணிடம் பேச இதை ஒரு சாக்காக வைத்து கொண்டு “இது நல்லாயிருக்கு”ஏன் மாத்தீட்டீங்க” என்ற பலரின் கேள்விகள் என் காதில் விழுந்து கொண்டே இருந்தன.

அன்று மாலை வேலை முடிந்து செல்லும் போது கேட்டேன் “எதுக்குங்க லென்ஸ் போட்டீங்க?”. “கண்ணாடி போட்டிருக்கிற்து அன் ஈஸியா இருந்துச்சு அதான்” தய்வு செய்து தப்பா எடுத்துக்காதீங்க அன் ஈஸின்னா கொஞ்சம் புரியல சொல்லுங்க”. “வேல செய்ய கஸ்டமா இருக்கு.” “அப்புடியா ஆமா நீங்க என்ன வேல செய்யுறீங்க” என்றேன். ஏன் தெரியாதா என்றபடி பேரைச் சொன்னார். “வேல செய்ய அந்தக்கண்ணாடி என்ன தொந்தரவா இருந்துச்சு நீங்க என்ன மரம் ஏறப்போறீங்களா? இல்ல ஒட்டப்பந்தய வீராங்கனையா? உங்க வேலைக்கு எந்தவிதத்துல அது தடயா இருந்துச்சு? ஒரு விசயத்த செய்யுறீங்கன்னா எதுக்குன்னே தெரியாமவே செய்யுறீங்களே எப்புடீங்க?”என்றேன்.

“அப்படி எப்படி சொல்லுறீங்க பத்து வருசம் முன்னாடி கிஷ்கிந்தா போனோம் அப்ப கண்ணாடி கீழ விழுந்துச்சு ,அப்புறம் எங்க அண்ணன் கூட சொன்னான் அதான் மாத்துனேன்”.    “அப்ப உங்க தேவைக்கு மாத்துல உங்க அண்ணன் தேவைக்காக மாத்துனீங்களா?இல்ல பத்து வருசமா அந்த விசயத்த நினச்சுகிட்டேயிருந்து லென்ஸ் போட்டீங்களா? பதில் சொல்லுங்க” என்றேன் அதற்கு பதில் இல்லை.

அறிவியலின் எந்த கண்டுபிடிப்பிற்கும் நான் எதிரா பேசலை அறிவியல் தான் கம்யூனிசம் . தன்னுடைய தேவை என்பதை மீறி மற்றவர்களின் தேவைக்காக தன்னை மாற்றிகொள்வது அப்படீங்குற விசயத்துல தான் எல்லோரும் தீவிரமா இருக்காங்க” ஏன் ஒரு விசயத்த செஞ்சீங்கன்னு கூட அதுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்ககுறீங்களே அதுதான் முதலாளித்துவத்தோட வெற்றி”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்னோட தேவைக்குதான் நான் வாழறேன்” என்ற படி கிளம்பினார். அவ்வாரம் முழுவதும் வேலைப்பளு காரணமாக அவ்விசயத்தப்பற்றி பேசமுடியவில்லை.

அவ்வாரம் முடிந்து அடுத்த வாரம் நைட் ஷிப்ட்ல் இருந்தேன். எல்லோருக்கும் மெயில் வந்திருந்தது. அலுவலகத்தில் பெண்கள் எல்லோரும் பெண்கள் தின கொண்டாட்டத்தை கொண்டாடிவிட்டார்களாம்.அந்த புகைப்படங்கள் மெயின் சர்வரில் போட்டிருந்தார்கள். விபி,மேனேஜர் ஹெச்.ஆர்.மற்ற பெண் தொழிலாளர்கள் உட்பட சமமாய் உட்கார்ந்து போஸ் கொடுத்திருதார்கள்.இன்னொரு போட்டோவில் கேக் சாப்பிட்டுக்கொண்டிருதார்கள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர் நோக்கினேன்.

எதிர்பார்த்த வாரமும் வர நேரமும் கைகூட நான் ஆரம்பித்தேன்” போட்டோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன அவ்வளவு ஜாலியா இருந்தீங்க, எல்லோரும் புடவைக்கட்டீருக்கீங்களே? எப்புடி முன்னாடியே சொன்னாங்களா?” ஆமா முன்னாடி நாள் எல்லோரையும் ஹெச் ஆர் கூப்பிட்டு சொன்னாங்க”.

“அப்புடியா சொன்ன வுடனே புடவைய கட்டீட்டு வந்துட்டீங்களா பெண்கள் தினம்னா என்னன்னு தெரியுமா ? அமெரிக்காவுல பெண்கள் தன்னோட கொத்தடிமைத்தனத்த எதிர்த்து போராடினாங்க ஆனா நீங்க எல்லாம் நவீன கொத்தடிமை பீபிஓவில அடிக்கவோ திட்டவோ வேண்டாம் சொன்னாவே செஞ்சுடுறீங்க இல்லயா?”.

” புடவை கட்டுறது என்ன தப்பு ?. “புடவை கட்டுறதப்பத்தி பேசல உங்களுக்கு எது தேவையோ அதை உடுத்த உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா மற்றவங்களோட கட்டளைய இன்பமா ஏற்று அடிமையா வாழறீங்கன்னுதான் சொல்லுறேன்,

அதாவது நீங்க உழைக்குற உழைப்புக்கு இங்க சம்பளம் இருக்கா இல்ல, காலையில வந்துட்டு தினமும் குறஞ்சது ரெண்டு மணி நேரம் ஓ.டி பாக்குறீங்களே அதுக்கு ஏதாவது அலவன்ஸ் தராங்களா? இல்ல நீங்க ஒரு பெண் அப்புடீங்கறதால எத்தன பிரச்சினய சந்திச்சு இருப்பீங்க அதப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா?இல்ல நவீன கொத்தடிமையா மாறிக்கிட்டு வர நமக்கு மகளிர் தினம் நாளைக்கு சேலை கட்டிட்டு வான்னு சொன்னா எதுக்கு வரணும் என்ன அவசியம்?

சுரண்டுகிற வி.பியும், ஹெச்.ஆரும். சுரண்டப்படுகிற எங்களோட எப்புடி மகளிர் தினம் கொண்டாடமுடியும்ன்னு ஏன் பேசல?”…………………….

சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன் ” அதே சீனியர் ஹெஆர் பசங்கள கூப்பிட்டு ஏப்பா எல்லோரும் வேட்டி கட்டிட்டு வாங்கன்னு சொன்னா எல்லோரும் கட்டிட்டு வருவாங்களா என்ன? ஆனா புடவை கட்டிட்டு வான்னு பெண்கள்கிட்ட சொன்னா உடனே தன்னோட தேசியக்கடமையா செய்யுறீங்க ஆனா ……………….”என்றேன்

அதற்குள் அவர் இடை மறித்தார் ” உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்களே எனக்கு பிடிச்சுருக்கு அதான் போட்டேன், எனக்கு பிடிச்சதான் நான் செய்யுறேன்.மத்தவங்களுக்காக வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” .

சரிங்க ” என்ன சைக்கிள் வச்சுருக்கீங்க?” .”லேடிபேர்ட்”என்றார். “ஏன் ஹீரோ சைக்கிள் வாங்கல அது லேடி பேர்ட விட தாங்கும் விலையும் குறைவுதான”. “எனக்கு பிடிக்கல” என்றார்.” எனக்கு பிடிக்குது பிடிக்கல என்பத யார் தீர்மானிக்குறா நீங்களா இல்ல அந்த சைக்கிள் கம்பெனிக்காரனா? ஏன்னா முதலாளி தீர்மானிக்குறான் இதுக்கு இப்படியெல்லாம் விளம்பரம் கொடுத்தா இப்படி வியாபாரம் ஆகும் என்று.

ஒரு காலத்துல கண்ணாடிக்குன்னு அத்தன விளம்பரம் வந்துச்சு மருத்துவமனைகள் மூலமா ஆனா இப்ப அதே மருத்துவ மனைகள் என்ன சொல்லுது கண்ணாடி போடுறது கண்ணுக்கு விலங்கு மாட்டுறது போலவாம். லென்ஸ் போடுங்க லேசர் சிகிச்சை செய்யுங்க என்று இப்ப சொல்லுங்க நீங்க உண்மையாகவே உங்க நல்லதுக்குதான் லென்ஸ் போட்டீங்களா? “

“நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக்குறோம் இந்த சைக்கிள் தான் வாங்கணும் ஏன்னா அது லேடிஸ்க்குன்னு உருவானது, என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன கண்ணாடின்னு கூப்புடுறாங்க ,டூர்க்கு போனப்ப என் பிரண்ட் சொன்னா ஏன் இன்னும் கண்ணாடி போட்டிருக்க லென்ஸ் போடலியான்னு?.இது மட்டுமல்ல பேர் அண்ட் லவ்லியில இருந்து அடிக்குற செண்ட் வரைக்கும் மனிதனை ஒரு பொருளா மாத்தி இருக்கு . கருப்பா இருந்தா தன்னம்பிக்கை போயிடும், வாழ்க்கையே நாசமாபோயிடும் பேர் அண்ட் லவ்லி போடுன்னு சொல்லுறான்.அந்த விளம்பரம் புடிக்குதோ இல்லையோ ஏதாவது கிரீமை வாங்கி பூசிக்கிறது.”

“இப்படி ஒண்ணு ரெண்டு இல்ல வாழ்க்கயில எல்லா விசயத்தையும் ஏன் வாழ்க்கையையே மத்தவங்களுக்காகத்தான் வாழறோம். உங்களுக்காக உண்மையிலே ஒண்ணு பண்ணனுன்னு நினச்சீங்கன்னா போராடுங்க , பெண்கள் அடக்கப்படும் போது, உழைக்கிற மக்கள் பாதிக்கப்படும்போது ஏன் நீங்க பாதிக்கப்படும்போதும் போராடுங்க.ஆனா பலரும் அதப்பத்தி பேசவே தயாராயில்லை அப்படீங்கற்துதான் உண்மை. நல்லா  யோசிச்சுப்பாருங்க தியேட்டர் வாசல்ல கால்கடுக்க நிக்கத்தெரியுது,

கல்ச்சுரல் புரோகிராம்ல ஆடத்தெரியுது,ஆனா மக்களோட நம்மளோட பிரச்சனயப்பத்தி ஏன் பேச முடியல எது தடுக்குது ?.எது உங்கள மக்களை பத்தி பேசவிடாம தடுக்குதோ அதுதான் உங்கள தியேட்டர் வாசலில நிக்கவும் , உங்க முன்னாடியே கூட வேல செய்யுறவன் ஒரு பெண்ணை பத்தி கிண்டலடிச்சு பேசுனா அமைதியா இருக்கவும் செய்யுது. யோசிச்சு பாருங்க யாருக்காகத்தான் நீங்க வாழறீங்க?அது ஒண்ணுதான் விடுதலையை பெற்றுத்தரும்.அதில்லாம நீங்க செய்யுற எந்த வேலையும் உங்களை அடிமையாக நீடிக்கவே உதவும்.”

அப்பெண் அப்போது பேசவில்லை.பின்வரும் நாட்களில் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.இது நடந்து எப்படியும் ஒன்றரையாண்டுகள் இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன் பேச நேர்ந்த போது கூட அந்த அடிமைத்தனத்தின் சாயல் அவரிடமிருந்து துளியும் விலகவில்லை என்பதனை அவரின் மவுனமே காட்டிக்கொடுத்தது.

ஒரு வேளை மவுனங்கள் தான் அடிமைகளின் ஆசைமொழியோ என்னவோ?

காதல் – ஏகாதிபத்தியமும் ஆணாதிக்க பார்ப்பனீயமும்

பிப்ரவரி 13, 2009

kaathal-copya2வழக்கம் போலவே வந்துவிட்டது காதலர் தினம் பெப்ரவரி 14கையில் ரோசாக்களோடு பச்சை நிற உடைகளில் அலைந்து கொண்டிருப்போரை அலுவலகம், ரயில் நிலையங்கள்,பேருந்துகளில் என எங்கும் காணலாம்.பன்னாட்டு மூலதனத்தின் வரவால் இறக்குமதியான கலாச்சார சீரழிவுகள் காதலை தேடச்சொல்கின்றன படுக்கையறையில்.

தன் துணையை தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட காதல் தற்போது பாலுறவுத்தேவையை தீர்க்கும் நோக்கோடு புதைகுழிக்கு அனுப்பபடுகிறது. காதல் பாசம் நட்பு என அனைத்தையும் நுகர்பொருளாக்கிவிட்ட உலகமயம் அது உருவாக்கப்பட்ட உருவான நோக்கத்தை திட்டமிட்டே மறைக்கின்றன.அதிலும் குறிப்பாக காதல் என்பது அதன் தன்மையை இழந்து மிக வேக மாக விபச்சார நிலைக்கு தள்ளப்படுகின்றது.

இச்சமுதாயத்தின் உருவாக்கத்தில் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது,பெண்ணினம் தான் தன்னையும் வளர்த்து இந்த சமுதாயத்தையும் வளர்த்து உருவாக்கியது. தாய் வழி சமூகமாக இருந்த மனித இனம் படிப்படியாக தந்தை வழி சமூகமாக மாற்றப்பட்டது,.ஒன்றாகவே வேட்டைக்கு சென்று வந்த மனித இனத்தில் தாய்மை பெண்ணை தங்குமிடத்தில் இருக்க வைத்தது. அது வரை உடல் பலம் உள்ளிட்ட அனைத்திலும் சமமாக இருந்த பெண் உணவுக்காக ஆணை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றார்,ஆண் தன் பசிக்குப்போக மீதத்தையே பெண்ணுக்கு தந்தான்.

ஓய்வு நேரங்களில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டறிந்தனர்,வழக்கம் போலவே அங்கிருந்த பெண்ணின் ஆளுமை அகற்றப்பட்டு ஆணுடைய ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. தந்தை வழி மாற்றத்துக்குப்பின் பெண் ஆணின் சொத்தாகவே மதிக்கப்படுகின்றார்,அதன் உரிமையாளர் தந்தை,சகோதரன் காதலன் கணவன் மகன் என பல்வேறு அவதாரங்கள் எடுத்துஆணாதிக்கம் தனது பெருமையை நிலை நாட்டுகிறது.

வரைமுறையற்ற பாலுறவினை தனிச்சொத்துரிமையே தகர்த்து ஒருத்திக்கு ஒருவன்(கவனிக்க ஒருவனுக்கு ஒருத்தி அல்ல) என்ற கோட்பாட்டை வைத்து பெண்ணின் மீது வரைமுறையற்ற சுரண்டலை ஏற்படுத்துகிறது.அதை மறுத்து இருவரும் பரஸ்பரம் அன்புடன் வாழும் காதலை பெண்தான் ஏற்படுத்துகிறார்.காதல் உருவானதே ஆணாதிக்கத்திலிருந்து தனது உரிமையை பெற்றுக்கொள்வதற்காகவே,அதற்கான போராட்டமே. காதலில் பெண் தைச்சொத்தாக மதிக்கப்படுவதில்லை,இருவரும் ஒருவை ஒருவரை மதித்து அனுசரித்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது.

இப்படி தனது துணையை தெரிவு செய்வதற்காக உருவான காதல் ஆனாதிக்கத்தாலும் உலகமயத்தாலும் தன் தன்மையை இழந்து விபச்சாரத்தை நோக்கிய பாதையில் தள்ளப்படுகிறது.

ஒரு ஆணாதிக்க ஆண் தனக்கு மட்டுமே காதலிக்க உரிமை இருப்பதாகவும் அதை பெண் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்பவராகத்தானிருக்க வேண்டுமென எண்ணுகிறான்.அப்பெண் காதலை ஏற்க மறுக்கும் பட்சத்தில் அப்பெண்னை குற்றவாளியாக்குகிறான் ,தான் விருப்பபட்டதால் அப்பொருள் தனக்கே கிடைக்கவேண்டுமென வாதாடுகிறான்.

திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களோ ஆணாதிக்க காதலையே நியாயப்படுத்துகின்றன. மேலும் எறும்பு ஊற கல்லையும் தேய்க்க ஊடகங்கள் சொல்லித்தருகின்றன . முதலில் மாயைகள் சொல்வது போல் காதல் என்பது ஒரு முறை தான் பூக்குமா?காதல் என்பது நிலையானதா? காதலித்து மணந்த கனவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு அல்லது சமுதாயத்தின் பல கீழ்த்த்ரமான செயல்களில் ஈடுபடுகிறான் எனில் அக்காதல் தொடர்ந்து நீடிக்க முடியுமா ? அப்படி நீடித்தால் அது காதலா அல்லது அடிமைத்த்னமா .

ஒரு பெண்ணுக்கு எப்படி துணையை தெரிவு செய்ய உரிமை உல்ளதோ அவ்வாறே தன் உரிமைகள் பாதிக்கப்படும் போது தூக்கிஎறியவும் உரிமை வேண்டும். இப்போது காதலர்கள் எப்படி இருக்கிறார்கள் ? காதலிக்கும் வரை ஒரு மாதிரியும்(பெண்ணை மதிப்பதும்) கல்யாணத்துக்கு பிறகு மற்ற பெண்களைப்போல் அடிமையாய் இருப்பதும் தான் இருக்கிறது.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ விரும்பிய யாராவது இறந்து விட்டால் உடனே சாக வேண்டும்.இளவயதில் கணவன் செத்தால் கூட இறுதிவரை காதலுக்கு பெண் கல்லறை கட்டி அதில் விளக்கு பிடிக்கவும் வேண்டும் ,ஆனால் ஆணுக்கு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லை .உரிமைக்கான முதல் படியாக இருந்த காதலை ஆனாதிக்கம் தனக்கேற்றாற்போல் வளைத்து அதனையே அடிமையாக்கி விட்டது

ஏகாதிபத்திய காதலோ தலை கீழ் அதற்கு பேர்தான் காதலே தவிர அது ஒட்டு மொத்த விபச்சாரம் அதற்கு ஒரு பேர் வேண்டும் அது காதலாக சொல்லப்படுகிறது. ஊர் மேய்வதற்கு ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்கிறார்கள் . உண்மையில் ஐடி பீபிஓக்களின் சரிவால் ஊர்மேஞ்சி காதலர்களின் எண்ணிக்கை கண்டிப்பாய் குறையும்.

 

 

———————————————————————————– ————————–

சிறீ ராம் சேனா ,இந்து முன்னணி போன்ற பண்டார பார்ப்பனீயங்கள் மற்றும் மூற்போக்கு பா.ம.க காதலர் தினத்தை எதிர்ப்பதாக கூறுகின்றன,இவர்கள் எதிர்ப்பது ஏகாதிபத்திய காதல்களைஅல்ல .காதலால் வர்ணாசிரமத்தில் சிதைவு ஏற்படும் என்பதே இவர்களின் கவலை.

அந்தகவலை தான் வெறியாக வெளிப்படுகின்றது. நேற்று தின மணியில் வந்த கார்டூனைப்பாருங்கள் இரு கல்லூரிபெண்கள் பேசிக்கொள்கிறார்கள்”எனக்கு யார் காஸ்ட்லியான பரிசு தராங்களோ அவனத்தான் நான் காதலிப்பேன்” விபச்சாரத்தியே காதலாக பார்ப்பன மீடியாக்கள் வர்ணிக்கின்றன.

தெருவில் பெண் ஆனோடு திரிந்தால் கல்யாணம் செய்து வைக்க போவதாய் அறிக்கைவிடும் காலிகள் தான் காதலித்ததால் கல்யாணம் செய்ததால் தீயை வைத்தார்கள் விசத்தை கொடுத்தார்கள், இந்த நாட்டு மக்களுக்கு மறுகாலனியும் பார்ப்பனீயமும் முக்கிய எதிரி என்றால் காதலுக்கும் அதுதான் எதிரி.பார்ப்பனீயமோ பெண்ணை கட்டற்ற வரைமுறையற்ற சுரண்டலுக்கான பொருளாக பெண்ணை மாறக்கோருகிறது ,அதையேத்தான் மறுகாலனியும் கூறுகிறது,இது காதலில் மட்டுமல்ல எந்த ஒரு உரிமைக்கும் சரி பிரச்சினைக்கும் சரி பார்ப்பனீயமும் உலகமயமும் ஒன்றையேதான் கூறுகிறார்கள் . ஏனெனில் உரிமைகளை பெற வேண்டுமெனில் இவை இரண்டையும் எதிர்க்காது தீர்வு இல்லை. காதலர்களே காதலை உரிமையாக கருதுவீர்களானால் போரிடுங்கள் நீங்களும் மக்கள் தானே

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

ஜனவரி 21, 2009

ndlfmeet2

சனவரி 25, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநாடு,கலைநிகழ்ச்சிகளில் ஏன் பங்கேற்க வேண்டும்?

உலகமயமாக்கலினால்  தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்,ஐடி,பி.பீ.ஒ,ஏனைய தொழிற்சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக பிடுங்கி எறியப்படுகின்றார்கள்.முதலாளி தன் தேவைக்காக நம்மை எப்படியெல்லாம் பயன் படுத்தினான் தற்போதோ நம் உழைப்பு தேவை இல்லை என்பதால் தூக்கிஎறிந்து விட்டான்.பல்லாயிரக்கணக்கான ஐடி பி.பீ.ஒ ஊழியர்கள் இது வரை நீக்கப்பட்டுள்ளனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.குரங்குகளை போல மரம் விட்டு மரம் அதாவது கம்பெனி விட்டு  கம்பெனி தாவுகிறோம்.நூற்று கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலை செய்து என்ன பயன் நமக்காக நமது உரிமைக்காக சங்கத்தை கட்டினோமா என்றால் அது இல்லை.முதலாளிகள் நம்மை வைத்து சம்பாதித்த போது நமது உரிமைகளை அவன் காலடியில் வைத்து விட்டு அவனின் எலும்பு துண்டுக்கு ஏங்கினோம் என்பது தான் உண்மை.
ஏன் இங்கு ஓடி ,பிரச்சினை இல்லையா? நாயைப் போல் கேவலமாக நடத்த்ப்படுவது இல்லையா?பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படுவது தான் இல்லையா? இத்தனை பிரச்சினைகளையும் இவ்வளவு நாள்  ஒதுக்கி வைத்து விட்டோம். இனி எப்படி போராடுவது  எப்படி போராடுவது என கற்போம்.வேறு எங்கு வேலைக்கு போனாலும் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,இன்னும் ஆறு மாதத்தில் 50000பேர் ஐடி,பிபீஓ வில் மட்டும்  பணிநீக்கம் செய்யப்படப்போகின்றனர், இப்படிப்பட்ட நிலைக்கு தான் நம்மை இக்கம்பெனிகள் தள்ளிவிட்டன,நம் திறமைகள் முதலாளியின் தேவைக்காக குழிதோண்டி  தோண்டி புதைக்கப்பட்டன .இப்போது அவனின் தேவைக்காக வெளியேற்றப்பட்டிருக்கின்றோம். தொழிலாளர்களை முடியாக நினைத்து வதைத்த ஜேப்பியாரின் கொட்டத்தை ஒரு சங்கம் கட்டியதாலேயே அடக்க முடிந்தது.அங்கு வெற்றியை வரலாறாக்கிகாட்டிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இம் மாநாட்டில் திரளாய் பங்கேற்போம்..நம்முடைய பிரச்சினக்காக இனியும் போராடாது இருந்தால் வருங்காலம் தற்கொலை பாதைக்கு ஒப்பானதே.
தொழிலாளியாக நாம் இருக்கும் வரை தற்கொலை நமக்கானதல்ல சங்கமாய் ஒன்றிணைவோம் பாட்டாளியாய் போராடுவோம்.தொழிற்சங்க வாதத்தில் மூழ்கி இருக்கும் போலிகளை விரட்டியடிப்போம்.
——————————————————————————————————————-

என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……

வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..

தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……

இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.

————————————————————————————————————————————————————————————————-

முதலாளித்துவ பயங்கரவாதத்தினை பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்) நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

———————————————————————————-

இம்மாநாடு போலிகளுக்கு சாவு மணிஅடிக்க வாழ்த்துகிறோம்

கலகம்