Posts Tagged ‘தற்கொலை’

Incredible India ! – பெருமைப்படு இந்தியனே !

செப்ரெம்பர் 9, 2010

Incredible India ! – பெருமைப்படு இந்தியனே !

தொலைக்காட்சியில் விளம்பரங்கள் பலவகை வருவதுண்டு. ஒவ்வொன்றும் ஓவ்வொரு தினுசாக, பல விளம்பரங்கள் மக்களை மடையர்களாக நிலைநிறுத்தும், குறிப்பாக பெண்ணடிமைத்தனத்தை தூக்கி நிறுத்தும் சாதனங்களாகவே இருக்கின்றன. முக்கியமாக ஒரு விளம்பரம்  அனைத்து ஊடகங்களிலும் வருகின்றது, அதுதான்  Incredible india. “இந்தியாவுக்கு வாருங்கள், அதன் அழகை ரசியுங்கள் ” என்று
வெளிநாட்டினரை அழைப்பதை மட்டுமல்ல அவர்கள் வரத்தை மக்கள் அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டுமென்று கூறுகிறது.

1. இரு வெளிநாட்டு பெண்மணிகள் இந்தியாவுக்கு வருகின்றார்கள், அவர்கள் பொருட்கள் வாங்குமிடத்தில் இந்திய ரவுடிகள் பிரச்சினை செய்ய ஆமீர்கான் வந்து  “இவங்களால தான் உங்க பாக்கெட் நிறையுது, அவங்க நம்மளப்பத்தி தப்பா சொன்னா யாரும் வரமாட்டாங்க, நம்ம விருந்தாளிங்கள கேவலப்படுத்தறாங்க நீங்க என்னய்யா வேடிக்கை பார்க்குறீங்க?” என கீதை ஓதுகிறார் உடனே பின்னர் மக்களுக்கு
ஞானம் பிறந்து இந்திய ரவுடிகள் அடித்து விரட்ட வெள்ளைக்காரப்பெண்மணிகள் நன்றி சொல்கின்றனர்.

2.ஆமீர்கான் தலைப்பிலேயே வருகிறார் ” நம்ம நாடு வளர்ந்துகிட்டு இருக்கு, மத்த நாடுகள் பார்க்குது, நம்ம நாட்டை நாமளே கேவலப்படுத்தலாமா?” ஆரம்பிக்கிறது விளம்பரம். வெள்ளைக்கார ஜோடி விமான நிலையத்திலிருந்து இறங்குகிறது, இறங்கியவுடன் ஒருவன்  பாக்குபோட்டு எச்சிலை கீழே துப்புகின்றான், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம். அப்புறம் அந்தஜோடி இந்திய வானுயர்ந்த கட்டிடங்களை
படம் எடுக்க முனையும் போது ஒரு இந்தியக்காரி தின்று விட்டு வாழைத்தோலை வீசுகிறாள்,  அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . அப்புறம் அவர்கள் காரில் பயணம் செய்யும் போது ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கிறான் அதை பார்த்து அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . மறுபடியும் நம்ம  ஹீரோ ஆமீர் வந்து ” நம்ம மானத்தை நாமதான் காப்பாத்தணும் என்கிறார்”


இன்கிரெடிபிள் இந்தியாவின் அனைத்து விளம்பரங்களிலும் ஒரு சுலோகன் இருக்கிறது அதுதான் “அதிதி தேவோ பவ” அதாவது விருந்தினர்கள் கடவுளைப்போன்றவர்கள் என்பதே அதன் அர்த்தம். அம்மொழி சமஸ்கிருதம் என்பதால் பார்ப்பனர்கள் ஆதிகாலத்தில் வந்தேறிகளாக குடியேறும் போதும் திராவிடர்கள் எதிர்த்து போராடும் போது நாங்கள் உங்கள் விருந்தாளிகள், நாங்கள்தான் கடவுள் என்று பீலாவோடு ஆரம்பித்திருக்கலாம் தங்கள் புரூடாக்களை, அவ்வாக்கியத்தையே இன்னமும் தொடரச்சொல்கிறார்கள்.  அதற்காக இப்போது ஊர்
சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினரெல்லாம் ஆக்கிரமிக்க வந்திருக்கிறார்களா? என்பதல்ல .


Incredible India – இந்தியனென்பதில் பெருமை கொள்

Incredible India என்பதற்கு அகராதியில் hard to believe, unbelievable, absurd, inconceivable என பல அர்த்தங்கள் வருகின்றன, நாம் சுருக்கமாக ” வியத்தகு இந்தியா “ என எடுத்துக்கொள்ளலாம். வியக்கத்தக்க வகையில் என்ன இருக்கிறது  இந்தியாவில் ? “வெளிநாட்டினரால்தான் நாடு முன்னேறுகிறது,  அவர்கள் சுற்றிப்பார்க்க வருவதால் பெரும் வருவாய் நாட்டிற்கு கிடைக்கிறது, அதனால் அவர்கள் நமது கடவுளைப்போன்றவர்கள்” . இந்தியா என்பது நாடே அல்ல , அது பல்தேசிய  இனங்களின் சிறைக்கூடம் சில அறிவிலிகள்
அறிந்ததே, பல அறிவாளிகளுக்கு தெரியாததே.

ஒரு நாட்டிற்கு எதனால் வருவாய் வரவேண்டும்? குறிப்பாக இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு வேளாண்மை முக்கியம்.அடுத்தாக ஆலைத்தொழில்கள் மூலமாக வருவாய் வரவேண்டும். வேளாண்மையை லாபகரமான  தொழிலாக மாற்றுவதனூடாகவே விவசாயிகள் வாழமுடியும். அதற்கு விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பது விவசாயியாக இருக்கும் நிலை தேவை. எண்ணை முதல் சிமெண்ட் வரை எல்லாப்பொருளுக்கும் முதலாளியால் விலை நிர்ணயிக்கப்படும் இந்தியாவில் தானியத்தை விளைவிப்பவன் அதற்கு விலையை நிர்ணயம் செய்யமுடியாது. இது வியக்கத்தக்கசெயல் அல்லவா?

இந்த பாரதநாட்டில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆலைகள் இழுத்து மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் உதிரிகளாக திரிந்து கொண்டிருக்கிறர்கள். அடுத்த நாள் சோற்றுக்கு உத்திரவாதமின்றி நாளை வேலை கிடைத்தால்தான் சோறு நிச்சயம் என்ற அளவில் தொழிலாளி சென்று கொண்டிருக்கிறான். முதலாளித்துவ பயங்கரவாதத்தால் தொழிலாளிகள் வேலையை
விட்டு நீக்கப்படுகிறார்கள், அதற்கெதிராக போராடினால் போலீசு மண்டையை உடைக்கிறது. சென்னையில் உள்ள நோக்கியாவில் பணி புரியும் பல தொழிலாளிகள் நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்ட போது, அவர்கள் ஆடிவிரதம் இருந்ததால்தான் மயக்கமடைந்தார்கள் என நோக்கியா தனது கூற்றை உலகத்திற்கு பறைசாற்றியதை காணும் போது நமக்குத்தோன்றுகிறது  , உண்மையிலேயே  இது வியக்கத்தக்க இந்தியாவே!

பட்டினிக்கொடுமையில் இந்த லோகத்திலேயே முதலிடமும் நம்ம இந்தியத் திருநாட்டுக்கே (இதுலயாவது நெம்பர் 1 ஆச்சுன்னு சந்தோசப்படவேண்டியதுதான்). பசியினால் நஞ்சானது தெரியாமல் மாங்கொட்டைகளை தின்று செத்துப்போன பழங்குடிகள் ஏராளம். அதற்கு அரசு சொன்னது “மாங்கொட்டையில் சத்து அதிகம்” இப்படி ஒரு கருத்தை வியக்கத்தக்க நாட்டில்தானே தெரிவிக்க முடியும். இன்னும் எத்தனையோ வியக்கத்தக்க விசயங்கள் இருக்கின்றன இந்தியாவில். கனிமவளங்களை சூறையாடுவதற்காக, அதை பன்னாட்டு
நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொண்டு கொல்ல எத்தனிக்கும் இந்த வியத்தகு இந்தியாவில் பிறக்க இந்தியர்கள் பெருமைப்பட்டுத்தானே ஆக வேண்டும்.

டெள கெமிக்கல் நிறுவனம் அமெரிக்காவில் எண்ணை எடுக்கும் போது நடந்த விபத்தில் செத்துப்போன நீர் நாய்களுக்கு நட்ட ஈடாக கொடுக்கப்பட்ட தொகையானது,  டெள கெமிக்கல் நச்சுவாயுவால் பல்லாயிரக்கணக்கில் செத்துப்போன போபால் மக்களுக்கு தூக்கியெறியப்பட்ட நட்டஈடைப்போல இருமடங்காகும். கோக், பெப்சி போன்ற குளிர்பான கம்பெனிகள் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குளிர்பானத்தின் மீது எவ்வளவு சதம் பூச்சிக்கொல்லியை கலந்திருக்கிறோம் என குறிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும்
தங்கள் குளிர்பானங்களில் குறிக்கவேண்டிய அவசியமில்லை என்று பதில் சொல்ல முடிகிறது. இப்படி ஒரு பதிலை, இப்படி ஒரு கேவலத்தை , இப்படி ஒரு அடிமைத்தனத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது ஆனால் ராமர் பிறந்த புண்ணிய பூமி ஏற்றுக்கொண்டிருக்கிறதெனில் இது வியக்கத்தக்க இந்தியா இல்லையா ? ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணானோரை கொன்று அவர்கள் ரத்தத்தை நக்கிக்குடிப்பதும் இந்தியாதான்.
நேபாளத்தில் மக்களாட்சி மலருவதற்கெதிராக தன் பார்ப்பன நரித்தனத்தை நிகழ்த்துவதும் இந்தியாதான்.

இந்தியாவில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா?

பச்சைப்பசேலெசன்ற காடுகள், அகன்ற புல்வெளிகள், புலிகள் விளையாடும் சுந்தரவனக்காடுகள், எது கானல் எது உண்மை எனத்திணறவைக்கும் பாலைவனங்ங்கள், இடி போல் தலையில் கொட்டும் அருவிகள், சிலுசிலுவென வீசும் தென்றல், கற்களை முகங்களாய் கொண்ட மலைகள், மலைகளின் சுனைகள் , சுனைகளில் இருக்கும் இனிக்கும் தண்ணீர்…………………..

………….. இது மட்டுமா?

நாம் அடிக்கும் விசிலுக்கு பதில் குரல் கொடுக்கும் குருவிகள், “காட்டுமிராண்டிப்பயலுங்க” என  நம்மை வேடிக்கைப்பார்க்கும் குரங்குகள், வேலையே செய்யாத ஆண் சிங்கங்கள், கூட இருக்கும் பாவத்திற்காக இரையை தேடிவரும் பெண்சிங்கங்கள்,  தன் குட்டியை யாராவது புகைப்படம் எடுப்பது தெரிந்தால் கூட அவர்களை பல கிலோமீட்டர் ஓட விரட்டும் யானைகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், சண்டையிடும்
கிளைமான்கள், விரட்டினால் மிடுக்காய் நிற்கும் கடத்திகள் ……………………………… எல்லாம் இருக்கிறது இந்தியாவில்,

ஆனால் இந்தியர்களுக்கு இருக்கிறதா? இல்லை எல்லாம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. காத்துக்கொண்டிருக்கிறார்கள் பன்னாட்டு முதலைகள்.

காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்படும் இந்தியாவின் காட்டாட்சி  அதனூடாக  ராணுவம் செய்யும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் நாசவேலைகளை எதிர்த்து போராடும் மக்களின் போர்க்குணம், நியாம்கிரி மலையின் ஒரு கல்லைக்கூட பெயர்க்க விடமாட்டோம் என போரிடும் தண்டகாரண்ய பழங்குடியின மக்கள் , அவர்களுடன் இணைந்து போரிடும் மாவோயிஸ்டுகள், இந்தியா முழுக்க மக்களுக்காக போரிடும் போராளிகள் என அனைத்தும்  உண்மையிலே வியக்கத்தக்கது மட்டுமல்ல பெருமைப்படத்தக்கது . நாட்டை சுற்றிப்பார்க்க வரும் வெள்ளையினத்தவர்கள் இம்மக்களை பார்க்க முடியாது.

வெள்ளையினத்தவர்களின் வருகைக்காக, அன்னிய மூலதனத்தின் வருகைக்காக மக்கள் அழிக்கப்படவிருக்கிறார்கள். ஆனால் போராடும் மக்கள், போராளிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், அவர்கள் ராவணனின் வாரிசுகள். ஒவ்வொரு துளி ரத்தம் கீழே விழும் போதும் ஆயிரம் போராளிகள் பிறப்பார்கள்.

“அதிதி தேவோ பவ” – வெளி நாட்டு விருந்தினர்களே! வாருங்கள் சுற்றிப்பாருங்கள், இந்திய அரசின் கோரமுகங்களை உலகிற்கு எடுத்துக்கூறுங்கள். இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாய் களத்திலிறங்குங்கள் இல்லையெனில் உங்கள் நாட்டு முதலாளிகளை பத்திரமாக இருக்கச்சொல்லுங்கள். அவர்கள் ஆடும் ஆட்டத்தைப்பார்க்கும் போது நீங்கள் அடுத்த முறை வரும் போது அவர்களின் பிணங்களுக்கு
மலர்ச்செண்டு வரக்கூட நேரலாம்.

பிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் – ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும்

ஜூலை 23, 2009

பிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும்

ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை பார்த்தேன். அப்போதே சேமித்து விட்டு பிறகு அதன் பிறகு இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.

மாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது:

நடிகை அமலா “ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள்.

அந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. நான் சினிமாவில் இருந்து விலகிய பிறகு விலங்கு வதைக்கு எதிரான அமைப்புகளில் சேர்ந்து சேவை செய்து வருகிறேன். வீதிகளில் உயிருக்கு போராடும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளிக்கிறேன்”……….

உழவுக்கு மாடுகளை பயன் படுத்தக்கூடாது. இது அமலாவின் கோரிக்கை, விலங்குவதைகளை தடுத்து காக்க வேண்டு இது மேனகாகாந்தியுடைய கொள்கை, இன்னும் சிலர் வெறி நாய்க்கடியான ரேபீஸ்க்கு மருந்து ஆட்டின் மூளையிலிருந்து எடுப்பதால். அவற்றைகொல்லக்கூடாது.

 இவ்வளவு அபிமானமா விலங்குகள் மீது. இந்த விலங்கின அன்பர்கள் மீது தவறா ? அமலாவுக்கு மாட்டின் மீது காதல் வந்து மாட்டை அடிக்கக்கூடாது , உழவுக்கு பயன் படுத்தக்கூடது என்கிறார். தெருவில் விலங்குகள் அடிபட்டுகிடக்கின்றன யாருக்குமே விலங்கின் மீது பாசம் இல்லையா என கதறி சட்டையை பிடிக்கிறார் மேனகா காந்தி. இன்னும் சிலர் விலங்குகளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என ஊளையிடுகிறார்கள்.

அப்படி அமலா ஊளையிட்ட இடம் எது தெரியுமா ஆந்திராவில் கர்னூல்…. அமலாவுக்கு மாட்டை உழவுக்கு பயன் படுத்தக்கூடாது எனச்சொல்லத்தெரியும் ஆனால் ஆந்திராவுக்கு அருகில் உள்ள மகாராட்டிர மாநிலம் விதர்பாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் செத்ததை, செத்துக்கொண்டிருப்பதை பற்றித்தெரியுமா ? ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பேர் தற்கொலை செய்து கொண்டது பற்றித்தெரியுமா என்ன?  மாட்டை பற்றி தெருவில் அடிபடும் நாயைப்பற்றி பேசலாம் கேள்விகேட்க ஒரு நாயும் இல்லை இன்னொரு விசயம் அந்த நாய்க்கோ, ஏனைய விலங்குகளுக்கோ வாயும் இல்லை. ஆனால் வாயுள்ள இந்த மனிதனைப்பற்றி பேசுவார்களா இந்த நாய்கள்( நாயைத்தான் ரொம்ப மதிக்குறாங்களே ).

கண்டிப்பாய் பேசமாட்டார்கள் பேசுவதற்கான அடித்தளம் என்ன இருக்கிறது? விலங்குகளை பாவம் என்பவர்கள் மனிதர்களை என்ன சொல்கிறார்கள்? நாடு முழுக்க பரவி விரவிக்கிடக்கும் இந்த விலங்கினங்கள் மற்ற விலங்குகளை பற்றி கவலைப்படுகிறார்களே ஒழிய. மனிதர்கள்? அவர்களைப்பற்றி கவலைப்பட்டால் நேரடியாக அரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவசாயம் நசிந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி எதனால் அம்முடிவை எடுத்தார்.

முதல் குற்றவாளியாய் அரசு அங்கு வந்து நிற்கிறது. வெள்ளிப்பட்டறை தொழிலாளி கடன் சுமைதாங்காது சயனைட் தின்று குடும்பத்தோடு மாண்டு போகிறார். இங்கு எதுதான் காரணம்? உலகமயம் எந்திரங்கள் மூலம் ஆபரண நகைகளை குவிக்கிறது. வேலை செய்த தொழிலாளிக்கு வேலைஇல்லை. முன்னர் செய்து வந்த வேலையும் இல்லை . இங்கு யார் குற்றவாளி . உலகமயம், அதை அனுமதித்த அரசு.

பூனைக்கு கால்வலிக்க மேனாகாவுக்கோ அதுதான் இதய வலி. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று தின்று ரத்தம் குடித்த பாஜக எம்.பி, RSS -ன் சகாவுக்கு நாயின் மேல்பாசமாம்!!!! இதை எப்படி நம்புவது ? கண்டிப்பாய் நம்பித்தான் ஆகவேண்டும். வருண்காந்தி முசுலீம்களை வெட்டுவேன் என கழிவறை வாயால் கொட்டியதை கையில் எடுத்து தொட்டுப்பாருங்கள். அஹிம்சையெல்லாம் என் மகனுக்கு தெரியாதென வாலாட்டியவராயிற்றே. தெரிந்தோ தெரியாமலோ காந்தியின் வாரிசாய் மிளிரும் ஆத்தாளும் மகனும் மனிதாபிமானத்தையே குத்தகை எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

பையனுக்கு இந்து மனிதாபிமானம், ஆத்தாளுக்கு இந்து மனிதாபிமானம்+விலங்குகளின் மீது பாசம். இவர்கள் மட்டுமல்ல ஏறக்குறைய விலங்குகளின் காதலர்கள் பலரும் மனிதர்களின் வாழ்வினைப் பார்ப்பாதில்லை என்பதை விட பார்க்க மறுக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காது எப்படி மக்களை சார்ந்து வாழும் விலங்குகளை பற்றி சிந்திக்கமுடிகிறது?. ஏனெனில் அவர்களைப்பொறுத்தவரை வறுமையில் உழலும் விவசாயி, தொழிலாளி, வேலையில்லா இளைஞன் ,உழைக்கும் மனிதன், என யாருமே இன்னும் விலங்குகளுக்கு ஒப்பாகவில்லை.

வெடித்துப்போன வயல்வெளிகள், ஒட்டிப்போன மார்பகங்கள், சுருங்கிப்போன தசைகள் என எல்லாவற்றையும் தாண்டி அந்த மாடு எலும்பாய் இருக்கிறதே? அது தெரிகிறதா. தனக்கு சோறில்லைஎன்றால் கூட இருக்கும் காசுக்கு மாட்டுக்கு தீவனம் வாங்கிப்போடுவான் விவசாயி. தன் உழவுக்கு பல்லாண்டாய் உழைத்து செத்துப்போன மாடுகளுக்காக கண்ணீர்விட்டு கதறியழும் விவசாயிக்கு கண்டிப்பாய் விலங்கினநேசத்தினைப்பற்றி தெரியாது.

 

வளர்ப்புபிராணிகளை தன் வீட்டின் பிள்ளையாக கருதி வளர்க்கும் உழைக்கும் மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் “ஏய்!!! விலங்கினை வதைக்காதே” விலங்கினை வதைப்பது இருக்கட்டும் எங்களை வதைக்கும் இந்த தனியார்மயத்துக்கும், தாராளமயத்துக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள்? பிராணிகளுக்கு துடிக்கும் வாய்கள் மக்கள் பிணமாவதினை பேச மறுக்கிறது.

ரேபீஸ் தடுப்பு மருந்து ஆட்டுமூளையிலிருந்து எடுக்கப்படுவதை எதிர்க்கும் யோக்கிய சிகாமணிகள், வெறி நாயைக்கொல்லக்கூடாது அவற்றை பத்திரமாக அரசே பராமரிக்க வேண்டும் என கதறுபவர்கள்தான் உலகெங்கும் வறுமையால் மக்கள், குறிப்பாக ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பாசிச பேயாட்டம் போட்டு மக்களை வதை முகாமில் சிறையிலிட்டு கொன்று குவிக்கும் போது கூடநாயைப்பற்றியே பேசச்சொல்கிறார்கள்.

 

விலங்குகளைபற்றி பேசவே வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் மனிதாபிமானம் வேசம் போடும் இந்த பிணந்தின்னிகள் உண்மையாகத்தான் பாசம் வைத்திருக்கிறார்களா அந்த விலங்குகள் மீது? இல்லை என்பதுதான் உண்மை. ஆடுகளை வனப்பகுதியில் மேயவிட்டால் குற்றம் என அறிவித்தது அரசு. அதன் விளைவு வெள்ளாடு வளர்ப்பு முற்றிலுமாக அழிந்துபோனது. ஒரே சட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆடுகளின் வாழ்வினைப்பறித்தது யார் ? விவசாயத்தை நொடித்து மாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பியது யார் ? புதிய வகை உற்பத்தி எனக்கூறி பிராய்லர்களை திட்டமிட்டு உருவாக்கி நாட்டுக்கோழியினத்தை முற்றிலும் உடைத்தெறிந்தது யார்?

உழைக்கும் மக்களா? இந்த அரசு, உலகமயம் ,தாராளமயத்தின் விளைவா? பேசித்தான் பாருங்களேன் கொஞ்சம் இதைப்பற்றியும், ஏன் உங்கள் வாய்கள் பேசமறுக்கின்றன? பேச மறுக்கிறது என்பதனை இன்னொருவிதமாக சொல்லலாம். எப்படி பேசும்? மக்களை கொன்று அவர்களின் வாழ்வுக்கான உரிமையை பிடுங்கி மொத்தமாய் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ள வர்க்கம் எப்படி பேசும் மக்களுக்காக?

இப்படி ஒரு தெரு நாயை காப்பாற்றப்போவதாய் பல வெறி நாய்கள் வந்துவிட்டன. அவைகளால் மனிதனுக்குமட்டுமல்ல….பாவம் அந்த நாய்க்கும்தான் ஆபத்து. ஒருபக்கம் மக்களை தின்பது மறுபக்கம் விலங்குகளுக்காக ஒப்பாரி வைப்பது? என அதிக நாள் இந்த டபுள் ரோல் நீடிக்காது. மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் ஆளும் வர்க்கம் தகர்க்கப்படும் போது இந்த நாய்கள் பேய்களாகியிருக்கும்.

சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்

ஜனவரி 30, 2009

சுடாத  நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்

neru-copy

நேற்று காலை சுமார் 11 மணியளவில்  முத்துக்குமார் எனும் இளைஞர் தன் உடலில் தானே தீயை வைத்துகொண்டார்.ஈழத்திலே கொத்து கொத்தாய் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் போது தன்னால் மட்டும் எப்படி இவ்வுயிரை கையில்  வைத்திருக்க முடியும்  என்ற படி செத்து விட்டார் அவ்விளைஞர், அவர் நமக்கு கோடிட்டு காட்டிய செய்தி ஈழத்தமிழர்  தினமும் சிங்கள ஓநாய்களால் கொல்லப்படுகிறார்கள் என்பதும் ,செம்மணி புதையல் போல பல புதையல் கள் வெளிவர இருக்கின்றன என்பது மட்டுமல்ல,வேறொரு முக்கிய செய்தியும் இருக்கிறது.”ஆமா இலங்கையில குண்டு போட்டுட்டாங்க என்ன பணறது  நேரமாச்சு  \கோலங்கள் வையுடா” என  பூச்சாண்டிகள் பலருக்கும் தான் செத்தாலாவது மானம் வருமா என உயிரை விட்டார் முத்துக்குமார், ஆனால் மானம் வந்த பாடில்லை.

ஒரு மனிதன் தனது கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காக,தமிழர்களுக்கு சொரணை கொடுப்பதற்காக தன் உயிரை கொடுத்தாக வேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறான்.உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன,இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ  வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன .டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில்  சுற்றிபார்க்க வருபவர்களும்,தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும்  குறையவில்லை.தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.

செத்துப்போன முத்துக்குமார் மட்டுமல்ல தாளமுத்து நடராசன் போன்றோரும் சும்மா சாகவில்லை,சும்மா தான் செத்துப்போனதாக இன்றைய பொடுசுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன, முத்துக்குமாரின் மரண வாக்கு மூலத்தை படித்துப்பாருங்கள்.எவ்வளவு சிந்திருத்திருந்தால் அப்படி ஒரு கடிததை எழுத முடியும்.பலரு சொல்வதுண்டு தற்கொலை ஒரு முட்டாள் தனம் .

ஆனால் ஒரு தற்கொலை ஒட்டு மொத்த தமிழகத்தை அவமானத்தால் கூனிகுறுக வைத்திருக்கிறது,அமைப்புகள் நடத்தும் கூட்டத்துக்கு  10,20 என நன்கொடை வழங்கிவிட்டு நானும் ஈழத்தமிழனின் துக்கத்தில் பங்கு கொண்டேன் என கண்ணை கசக்குவதால் கிடைத்திடுமா விடுதலை,ஈழத்தமிழனின் சாவுச்செய்திகளோடு நடிகையின் படுக்க்யறை செய்திகளைகலந்து தந்த பத்திரிக்கைகள் எவ்வித இடையூருமிலாமல் தனது சர்க்குலேசனை உயர்த்திக்கொண்டே போகின்றன . ஈழத்தமிழன் இப்போது பிணமாகிவிட்டான் அவன் விற்பனைக்கு ஒரு நாளுக்கு மேல் உதவமாட்டான்.தனது தன் மானத்தை இழந்து வாழும் மானங்கெட்ட தமிழர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க.

செங்கல் பட்டு சட்டகலூரி,சேலம் சட்டகல்லூரி மாணவர்கள் என சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.மாணவர்களோ தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்,ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழரை காப்பாற்று என முழங்கியாயிற்று..ஆனால் இது ஏன் நடைமுறைக்கு வரவில்லை? இலங்கைக்கு சென்ற பிரணாபோ தனது முழு ஆதரவை தெரிவித்து விட்டார்.கருணவோ முதுகுவலி என்று குப்புறக்கிடக்கிறார்,மத்திய அரசோ மிக வருத்தத்துடன்  கவனிக்கிறது,னம் செஇதிகளை வருத்ததுடன் கவனிக்கும்  அதே கண்கள் தான் சிங்கள வெறியன்  ஈழத்தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் போதும் ரசிக்கின்றன.

இந்த நிலையில் நம்முடைய போராட்டங்கள் எப்படி இருக்கின்றன.இன்னும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் அதுவும் “இந்திய அரசே தலையிடு”. வெங்கட்ராமன் செத்துப்போனதற்கு ஒரு வாரம் துக்கம்  கொண்ட மத்திய அரசு  கொத்து கொத்தாய்  கொல்லப்படும் தமிழர்களின் பிணங்களை பார்த்து முகத்தை திருப்பிக்கொள்கிறது.நமது போராட்டங்கள் பலனளிக்காததற்கு காரணமே ஈழப்போரின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தாதே..இந்திய அர்சு ஈழத்தில் தலையிட்டு போரினை நடத்திக்கொண்டிருப்பதால் தால் சிங்களன் கொலைவெறியாட்டம் போட முடிகிறது.
இந்திய அரசை எதிர்க்காத நமது போராட்டங்கள்  ஈழத்தமிழனுக்கு வாய்க்கரிசியாகவே மாறும்.
எந்த ஓட்டு கட்சியும் இந்தியத்தை அம்பலப்படுத்த மாட்டார்கள் ஏனெனில் இவர்கள் தான் இந்த அரசை தூக்கி தாங்கி பிடிப்பவர்கள்,

முன்னரே சொன்னது போல முத்துக்குமார் சொல்லாத முக்கிய செய்தி  எது தெரியுமா ?. இனியும் கெஞ்சி கொண்டிருப்பதால் இந்திய அரசு கேட்காது,காது கேட்காதவன் அல்ல அப்படி நடிப்பவன் அவனுக்கு செவுளில் அறைந்து தான் மருத்துவம் கொடுக்க வேண்டும்.1965 களில் தீவிரமான மக்கள் போராட்டமே இந்தியை செருப்பால் அடித்து துரத்தியது.மத்திய அரசினை உண்ணாவிரதத்துக்கும் ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் கவனத்தை திருப்ப முடியாது.எப்போது பாதிக்கப்படுகிறானோ அப்போது தான் அவனும் திரும்புவான் .மத்திய அரசு பாதிக்கப்படுமாறு எவ்வித போராட்டமும் இன்னும் துவக்கப்படவில்லை.அப்படி துவக்கப்படுமெனில் அது போராட்டமாகயிராது,போராக மாறும்.

ஆம் போர்
தான் தேவை இப்போது இந்தியை எதிக்க பெரியார் செய்தாரே கிளர்ச்சி  அப்படிப்பட்ட   கலகம் தான் தேவைதானே தவிர கண்ணீர் துளிகளுக்கு இங்கு இடமில்லை.போர் இந்திய தேசியத்துக்கு மட்டமல்ல இன்னும் கிரிக்கெட்ட் பார்த்து பல்லைகாட்டுபவனுக்கும்,தியேட்டர் வாசலில் கால் கடுக்க நிற்பவனுக்கும்,டாஸ்மாக்கில் முதல் ஆளாய் போணி செய்பவர்களுக்கும்,இன்னமும் “மேச ராசி நேயர்களே” என ஊளையிடுபவர்களுக்கும் எதிராகத்தான் தொடங்க வேண்டும்.போரை நம்மிடமிருந்தே தொடங்குவோம். முடிவாய் தெரிவியுங்கள் நீங்கள் யார் பங்காளியா? பகையாளியா?