Posts Tagged ‘பெண்’

சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு – ஆணாதிக்கத்தின் உச்சம் இல்லை இல்லை அதுதான் ஆரம்பம்

ஒக்ரோபர் 12, 2010

சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு

ஆணாதிக்கத்தின் உச்சம்  இல்லை  இல்லை அதுதான் ஆரம்பம்

அதோ அந்தக்குழந்தை சிரித்துக்கொண்டிருக்கிறது பாருங்கள்!. அதோ அக்குழந்தையைத்தான் அங்கு அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார்கள். உறவினர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். ஏதாவது விசேசமா? ஆம் விசேசம் தான் அக்குழந்தை இன்று முதல் பெண்ணாகப்போகிறாள். அக்குழந்தையின் தாய் அந்த அறைக்குள் அக்குழந்தையை அழைத்துக்கொண்டு செல்கிறாள். அக்குழந்தைக்கு விபரீதம் நேரப்போவது புரிந்து கத்துகிறது, வீறிட்டு அலறுகிறது.

இதோ இன்னமும் இருவர் வந்து விட்டார்கள். அக்குழந்தையின் ஆடைகளை கழட்டி அதை பென்ணுறுப்பை கையிலிருந்த பழைய பிளேடால் அறுத்து எடுக்கிறார்கள். அப்புறம் ஊசியில் நூல் கோர்க்கப்பட்டு அக்குழந்தையின் உறுப்பு தைக்கப்படுகிறது. பல மடங்கு ரத்தம் வெளியேறிவிட்டது. அக்குழந்தையால் அழ முடியவில்லை. இப்போது கால்கள் கட்டப்படுகின்றன. சில நாட்கள் இப்படித்தான் வைத்திருக்க வேண்டும். வெளியே மகிழ்ச்சி உறவினர்களிடையே பரவுகிறது “ஆயிஷா பெண்ணாகிவிட்டாள்”. குடி கும்மாளம் கரை புரண்டோடுகிறது. கேளிக்கைச்சத்தங்களில் பென்ணின் விம்மல் சத்தம் மெல்ல மெல்ல அடங்கிப்போகிறது.

——————————

—————————————————————————————————————————————

அநேகமாக ஓராண்டுக்கு மேல் இருக்கும் ஒரு புத்தகத்தைப்படித்து, அது காலச்சுவடா அல்லது உயிமெய் இதழா என்று மறந்து விட்டது. அவ்விதழை பத்திரமாய் வைத்திருந்தேன் இருந்தும் தொலைந்துவிட்டது. அவ்விதழைத்தேடி பல இடங்களில் அலைந்துக்கொண்டிருக்கிறேன். என் மனதில் கொஞ்ச நஞ்சமல்ல ஏகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திச்சென்றது. அக்கட்டுரைக்கதையை படிக்கும் பலருக்கும் கண்களில் கன்ணீரை முட்ட வைத்த  அந்த மாடலின் பெயர் கூட மறந்து விட்டது.

ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் ஒரு செயல் நடைபெறுவதை அப்போதுதான் முதல் முதலாகப் படித்தேன். அவர் ஒரு புகழ்பெற்ற  விளம்பர மாடல், அவருக்கு மிகச்சிறிய வயதில் அவருடைய பாலுறுப்பினை சிதைத்து அதில் தையலைப்போடும் நிகழ்ச்சி நடந்து விட்டது. அன்று முதல் சிறுநீர் கழிப்பதென்பது அவருக்கு நரகம்.

எல்லோரும் ஒரு கணம் தற்போது சிறு நீர் கழிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். ச்சீசீ ! என்று யாராவது முகத்தை சுழிப்பீர்களாயின் , அதைப்பற்றி பிறகு பேசலாம்.  பலமணி நேரமாய் அடக்கி வைத்திருக்கிறீர்கள் உங்கள் சிறு நீரை, இப்போது சிறு நீரைக்கழித்து விட்டு வரும் போது உங்கள் முகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கும்?

ஆனால் அதற்கு பதில் சிறு நீர் கழிக்கும் போது  குத்தி குத்தி வலிக்கிறதெனில், சிறு நீர் பாய்வதற்கு சிறு துளை மட்டுமே இருக்கிறதெனில், சிறு நீர் பாய்ந்து வரும் கணங்களில் எரிச்சலோடு அய்யோ அம்மா என்று கதற வேண்டியத்தேவை இருக்கிறதெனில் யாராவது சிறு நீர் கழிப்பதை நினைத்துப்பார்ப்போமா என்ன? நாம் நினைத்துப்பார்க்கவே தயங்கும் அந்த சம்பவம் அந்த கதறல் ஆப்பிரிக்க பெண்களுக்கு சொந்தமானவை என்பதை நாம் அறிவோமா? இதோ இன்று நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பாலுறுப்பினை சிதைத்து கட்டி விட்டார்கள். நாளை  என்று போய்க்கொண்டே இருக்கிறது.

சிறு நீர் கழிப்பதே நரக வேதனையாக, தாங்க முடியாத வலியோடு, அதுவும் சொட்டு சொட்டாகத்தான் இருக்க வேண்டுமென்றால் அதை நினைத்துப்பார்க்க முடிகிறதா நம்மால்? ஆனால்  அப்படித்தான்  ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் பல கோடிக்கணக்கான ஆப்பிரிக்க பெண்கள். ஆங்கிலத்தில்  Female Genitial Multilation என்றழைக்கப்படும் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் நிகழ்ச்சி ஆப்பிரிக்க நாடுகளில் புனித சடங்காக பெண்களின் மீது ஏவப்படுகிறது.

பெண்ணின் பாலுறுறுப்பை வெட்டியெடுப்பது மூன்று வகைகளில் நடத்தப்படுகிறது.

1. பாலுணர்வினைத்தூண்டும் பெண்ணுறுப்பின் ஒரு பகுதியை வெட்டியெடுப்பது
2. பென்ணுறுப்பின் பெற்புறத்தை வெட்டி எடுப்பது
3.ஒட்டு மொத்த பெண்ணுறுப்பினையே வெட்டி யெடுத்து விட்டு சிறு துளையை மட்டும் விட்டு விட்டு நூல் மூலம் தையல் போடுவது.

ஏன் பாலுறுப்பு சிதைக்கப்படுகிறது?

“பெண்கள் சைத்தானின் வடிவங்கள், அவர்களைப்பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும் . அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள், ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் /  குறைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாயிருப்பார்கள்.”

ஒரு பெண் தான்  ஒழுக்கத்தோடு வாழ்வதற்கு தன் உறுப்புக்களை இழந்து ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆணாதிக்கம் பெண்ணுறுப்பின் மீதான சிதைப்பை சரி என்கிறது. தான் பிறந்து வந்து அந்த பாதை  மூடப்பட்டிருக்கும் வலியை ஒரு மனிதனால் உணர முடியாதா என்ன?

பாலுறுப்பு சிதைப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த என்னுடைய நண்பர் ஒருவர் “தயவு செய்து முடியவில்லை, நிறுத்துங்க” என்றார். அவர் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.இனி ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் இந்த நினைவுதான் வருமென்று சிலர் கவலைப்படலாம். நினைவுகளை
சுமப்பதற்கே கவலைப்படும் நாம் அந்த நினைவுகளை நடத்திக்கொண்டிருக்கும் அப்பெண்களின் உணர்வை புரிந்து கொண்டால் கண்டிப்பாய் இது கடினமாய் இராது.

———————————————————————————————————————————————————————–

ஆயிஷாவுக்கு இப்போது பருவ வயதாகி விட்டது. தினமும் சிறு நீர்கழிக்கும் துக்க காரியத்தை செய்து முடிக்கும்
வேதனையோடு காலத்தை கழித்துவிட்டாள். அவளின் தாய் அடிக்கடி சொல்லுவாள் “கல்யாணம் ஆனால் சரியாகிடும்”. அவளின் திருமணத்தின் பின்னர் பெண்ணுறுப்பின் மீதான் தையல் பிரிக்கப்பட்டது, மாப்பிள்ளைக்கென்றே புதிய சரக்கு அன்று படைக்கப்பட்டது. இனி அவளால் முன்னைப்போல அல்ல சற்று வலி குறைவாக சிறு நீர்கழிக்கலாம், ஆனால் வலி, வலிதானே! ஊனம் ஊனம்தானே. பிறந்த அவளின் செல்ல மகளின் பெண்ணுறுப்பை ஆவலாய் பார்க்கிறாள். தன் பெண்ணுறுப்பினை அவளுக்கு பார்த்ததாய்  நினைவே இல்லை, “நம்முடைய உறுப்பும் இப்படித்தான் இருந்திருக்குமோ?”

—————————————————————————————————————————————————————————

வலைத்தளங்களில் “போர்னோ”ஈஸ்வரனை அன்றாடும் தரிசிக்கும் இளவட்டங்கள், இதோ இந்த பெண்ணுறுப்பினை பார்க்கத்துணிவார்களா? இந்த வீடியோக்களை 18+ என்றோ வயது வந்தவர்களுக்கென்றோ மிகவும் உங்கள் மனதை பாதிக்குமென்றோ  குறிக்கப்பட போவதில்லை. காரணம் பாதிக்கட்டும் உங்கள் மனம் /  நம் மனம்.

என்ன சிறு நீர் கழிக்கப்போகிறீர்களா? அதற்கு முன் இந்த வீடியோக்களையும் பார்த்து விடுங்கள்.

இங்கே தொடுப்பிற்காக தோழர் தமிழச்சியின் கட்டுரை உள்ளது. ஈராண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கட்டுரை அது.  நான் தேடி களைத்த நிலையில் பல சிரமங்களுக்கு  மத்தியில் கேட்டவுடன் அக்கட்டுரைத்தொடுப்பை தந்த அவருக்கு நன்றி!!!

ஆண் என்ன? பெண் என்ன?

நவம்பர் 23, 2009

ஆண் என்ன? பெண் என்ன?

இன்றைக்கு ஒரு மீட்டிங் அசோக் நகர்ல இருக்கு வரீங்களா என்றேன் அலுவலகத்தில். ஆளாளுக்கு ஒரு சாக்கை சொன்னார்கள். அதில் ஒருவர் “உங்களால முடியுது பாருங்க எப்படித்தான் எப்படி மேனேஜ் பண்றீங்களோ”. “என்னங்க நான் என்னவோ சாகசம் பண்ணப்போறமாதிரி பேசறீங்க. மக்களோட பிரச்சினை சம்பந்தமா ஒரு மீட்டிங் அதை பாக்கறதுக்கோ அல்லது கேக்கறதுக்கோ தயராயில்லை அப்படித்தானே. உங்களோட நிகழ் கால பிரச்சினைகளை முகமுடி போட்டுகிட்டுதான் பாக்குறீங்க அது எத்தனை நாள் தாங்கும்?”

நான்  பர்மிசனை வாங்கிவிட்டு கிளம்பினேன், வருகிறேன் என்றவர்களை போய்க்கேட்டேன். “என்னபண்றது ஜாப் இருக்குல்ல”என்றார்கள். அன்று ஜாப் வரத்து குறைவு என்று எனக்கும் தெரியும். கார்டை ஸ்வைப் செய்து விட்டு லிப்டில் ஏறினேன். அதில் என்னுடன் பணி புரியும்  ஒரு பெண், ஒரு ஆண் வந்திருந்தார்கள். அவன் “என்னப்பா சீக்கிரம் கிளம்பிட்டே”என்க,
“ஒரு வேளை அவசரமா இருக்கு” என்றேன். ஏய் ஏதாவது டேட்டிங்கா வித்……… என்று இழுக்க எனக்கு சுளீரென்று கோபம் வந்தது. அருகில் வந்த பெண்ணோ சாதாரணமாக நின்று கொண்டு வந்தார். அவருக்கு கோபம் வந்த மாதிரி தெரியவில்லை.

நேரம் இப்பவே  ஆகிவிட்டது. இவனிடம் அதிகம் பேசிக்கொண்டிருக்க முடியாது, சுருக்கமாய் சொன்னேன் “டேட்டிங் இல்லப்பா மீட்டிங்க அங்க இப்படி எவனாவது பேசினா பீட்டிங்” . அவன் சிரித்தான். அடித்து பிடித்துக்கொண்டு கூட்டத்துக்கு போய்விட்டு வந்தேன். அடுத்தநாள் அப்பெண்ணிடம் கேட்டேன் “ஏங்க அவன் டேட்டிங் போறியான்னு என்னை கேக்குறான் உங்களுக்கு கோவமே வரலீயா?  டேட்டிங் அப்படிங்குற பேர்ல ஊர்மேயப்போறீயாங்குறான் பெண்களை இழிவுபடுத்துறான்  உங்களுக்கு ஏன் கோவம் வரல ?” அவர் அமைதியாய் இருந்தார்.

“பேசாம இருக்காதீங்க பேசுங்க” “அவர் சாதாரணமாத்தான சொன்னாரு அதை ஏன்?…….” “என்னது சாதாரணமா சொன்னானா? சரி அவனோ இல்லை வேற யாராவது பசங்க  ஒரு பெண்ணைப்பத்தி உங்க கிட்ட கிண்டலடிச்சா என்ன பண்ணுவீங்க? ” ” அவர் அமைதியாய் இருந்தார். “எவனுமே இது வரைக்கும் நான் அவளைபார்த்தேன் மூஞ்சு அப்படி இருந்துச்சு உங்ககிட்ட சொல்லி ஜோக் அடிச்சதே இல்லையா? அப்ப என்ன பண்ணுவீங்க?” “நான் எதுவுமே பேசமாட்டேன் அமைதியாயிருப்பேன் என்னால என்ன பண்ண முடியும்?” “என்ன பண்ண முடியுமா உங்க பாலியல்இனத்தை சேர்ந்த ஒருவரை ஒருத்தன் கேவலப்படுத்துறான் உங்களுக்கு அது ஏன் உரைக்கல? எனக்கு இருக்குற தன் மான உணர்ச்சி உங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது? சரி திட்டத்தான் தைரியம் இல்லை அங்க எந்த வெங்காயத்துக்கு இருக்குறீங்க குறைந்தபட்சம் அடுத்து வர நாட்களில அவன் கிட்ட பேசாம இருக்கவாவது முயற்சி செஞ்சுஇருக்கீங்களா என்ன?”

“எல்லாரும் உங்கள மாதிரி இருக்க முடியாது?  நீங்க வாழ்ந்துவந்த சூழல் அப்படி”  “தெளிவா சொல்லுங்க நான் சொல்றதே தப்பு அப்படிங்குறீங்களா? ஊர் மேயக்கூடாது ஆனால் அது தப்புன்னு ஊர்மேயரவனை  விமர்சிக்கவும் மாட்டேன். இது தான் உங்க கொள்கையா? அருமைங்க”  “என்ன பண்ண சொல்லுறீங்க?”
“உங்க பதில் நான் உங்களை கட்டாயப்படுத்துற மாதிரி இருக்குது. எப்படி வேணுமினாலும் வாழலாம் அது உங்க விருப்பம், ஒரு மனிதன் இப்படித்தான் வாழணுமின்னு கிடையாது அதுக்காக எது சுதந்திரம் எது விபச்சாரம்ன்னு கூடவா தெரியாது.

அதை விடுங்க போன மாசம் ஒரு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் வரேன் சொல்லிட்டு கடைசியில போனை எடுக்க வே இல்லை. புரிஞ்சுக்கோங்க உங்க கலாச்சாரம் எதையுமே வெளிப்படையா முன்வைக்காத ஒரு நபரா உங்களை மாத்தியிருக்கு, கேட்டதுக்கு சினிமாவுக்கு போய்ட்டேன்னீங்க. அவசராவசரமா அடிச்சு புடிச்சு தியேட்டருல சீட் வாங்கி சினிமா பார்க்கத்தெரியுது ஆனா உங்களோட பிரச்சினையப்பத்தி மக்கள் பிரச்சினையப்பத்தி பேசத்தோணமாட்டேங்குது இல்லையா? அதுக்குப்பேர் என்னங்க எதுக்காக வாழறோம்ன்னு கூடத்தெரியாம வாழ்க்கைய ஓட்டிக்கிடு இருக்கமா இல்லையா? டிரஸ்ல இருந்து செருப்பு வரைக்கும் மேட்சிங்கா போடத்தெரியுற உங்களால டிரெஸ்ஸே இல்லாம இருக்குறவங்களப்பத்தி ஏன் சிந்திக்க முடியல?”

“ஏதோ என்னால முடிஞ்ச உதவியை நான் பன்ணிட்டுதான் வரேன்” “என்ன உதவி?” “பிச்சைக்காரங்களுக்கு காசு போடுவேன் அப்புறம்……..” “பிச்சைகாரனுக்கு காசு போடுறதால நம்ம நாடு அடிமைத்தனத்துல இருந்து மாறிடுமா? விவசாயத்தை திட்டமிட்டு அழிச்சாங்களே அது கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணுனா மாறிடுமா?பெண்களை கிண்டலடிக்குறவனெல்லாம் திருந்திவானா என்ன?”

“புதுசா சினிமாபோட்டா போகத்தெரியுது? இது ஏங்க தெரியமாட்டேங்குது?, தெரியாம இல்லைங்க எல்லாம் தெரியும் தான் சாவறதப்பத்தி தெரிஞ்சுக்கக்கூடாதுன்னு நினைக்குறீங்க, நீங்க பாதிக்கப்படுறதப்பத்தி பேச ஆரம்பிச்சா உங்க நண்பர்கள் வட்டாரம் குறஞ்சுபோயிடும் அப்புறம் சினிமாவுக்கு அல்லது ஊர் சுத்தவோ போகமுடியாது இதுதான உங்க கவலை. மத்தப்பொண்ணுங்களைபத்தி கிண்டலடிச்சா அங்க சிரிச்சுக்கிட்டு நிக்குறது அப்புறம் அவனே நம்மகிட்ட தப்பா நடந்துகிட முயற்சி பண்ணுனா அவன் கிட்ட மட்டும் பேசாம மத்தபடி அதே பேச்சு அதேவகை மத்தவங்களோட தொடங்குறது. நாமும் சேப்டியா இருக்கணும் மத்தபடி ஊர் சுத்தியும் ஆகணும் இல்லையா?

வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. மற்றவன் சாவும் போது அதைபத்தி பேசாதவனுடைய சாவை பாரும் பேசப்போறதில்லை. எவ்வளவோ பேசுறீங்க அந்தப்படம் நல்லா இருந்துச்சு ஏய் உன் டிரஸ் நல்லா இருக்கு இந்த சுடி எங்க தைச்ச எவ்வளவோ விவாதம் பன்ணுறீங்க வெட்டியா ஜோதிகாவுக்கு கல்யாணம் நடக்குமான்னு தொடங்கி சிம்புவோட காதலி வரைக்கும், என்னைக்காவது உங்களப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா? ஒரு பெண்ணுக்குரிய,மனிதனுக்குரிய சுயமரியாதையோட வாழ்ந்து இருக்கீங்களா? ஆணாதிக்கத்தைப்பத்தி, சாதீயத்தைபத்தி, உங்களை நாயிலும்கீழா நினைக்குறானே இந்த கம்பெனி அவனைப்பத்தி,பாதிக்கப்பட்ட  பெண்ணைப்பத்தி பேசியிருக்கீங்களா?

“அப்படி பேசவிடாம எது தடுக்குது உங்க அடிமைத்தனத்தை தவிர, எதுக்கெடுத்தாலும் சொல்லுறீங்க  நான் அடிமை இல்லை எனக்காகத்தான் வாழறேன் எனக்கென்னவோ அப்படித்தெரியலையே உங்க உரிமைக்காகவே பேசாத நீங்க மத்தவங்களுக்காகவா பேசப்போறீங்க ” அவர் அமைதியாகவே இருந்தார் “உங்க அமைதி உங்களுக்கு எப்போதும்  நல்லது இல்லை, அதுதான் உங்களை கேவலப்படுத்தும் போதும் உங்களை அடங்கிப்போக வைக்குது” அவர் மீண்டும் அமைதியாகவே இருந்தார். “உங்களுக்கு இந்த மானங்கெட்ட கலாச்சாரத்தோடு  நுகர்வியலும் தேவை உங்களையும் பாதுகாத்துக்கணும், உங்க வாழ்க்கையை நீங்க தீர்மானிச்சுட்டீங்க ஆத்துல ஒருகால் சேத்துல ஒருகால்ன்னு கண்டிப்பா ஒருநாள் மூஞ்சில சேறு பூசி நிக்கப்போறீங்க. ஒண்ணும் மட்டும் உண்மைங்க அடிமையில ஆண் என்ன பெண் என்ன?”