Posts Tagged ‘போராட்டம்’

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

பிப்ரவரி 28, 2011

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !

போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு ”

23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும். ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது.  ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள்  திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு(preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத்தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது,ரத்தக்கணக்குச்  சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.

அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் ,  என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.

இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.

இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.

ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.

———————————————————————————————————————————————————–

ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் ” எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம்  பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம்  யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்?  நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு  நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம்  கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?

ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை  பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.

உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி  கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.

இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.

மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.  ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.

மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.

இதோ !!!!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?

பு.மா.இ.மு

சென்னை

Incredible India ! – பெருமைப்படு இந்தியனே !

செப்ரெம்பர் 9, 2010

Incredible India ! – பெருமைப்படு இந்தியனே !

தொலைக்காட்சியில் விளம்பரங்கள் பலவகை வருவதுண்டு. ஒவ்வொன்றும் ஓவ்வொரு தினுசாக, பல விளம்பரங்கள் மக்களை மடையர்களாக நிலைநிறுத்தும், குறிப்பாக பெண்ணடிமைத்தனத்தை தூக்கி நிறுத்தும் சாதனங்களாகவே இருக்கின்றன. முக்கியமாக ஒரு விளம்பரம்  அனைத்து ஊடகங்களிலும் வருகின்றது, அதுதான்  Incredible india. “இந்தியாவுக்கு வாருங்கள், அதன் அழகை ரசியுங்கள் ” என்று
வெளிநாட்டினரை அழைப்பதை மட்டுமல்ல அவர்கள் வரத்தை மக்கள் அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டுமென்று கூறுகிறது.

1. இரு வெளிநாட்டு பெண்மணிகள் இந்தியாவுக்கு வருகின்றார்கள், அவர்கள் பொருட்கள் வாங்குமிடத்தில் இந்திய ரவுடிகள் பிரச்சினை செய்ய ஆமீர்கான் வந்து  “இவங்களால தான் உங்க பாக்கெட் நிறையுது, அவங்க நம்மளப்பத்தி தப்பா சொன்னா யாரும் வரமாட்டாங்க, நம்ம விருந்தாளிங்கள கேவலப்படுத்தறாங்க நீங்க என்னய்யா வேடிக்கை பார்க்குறீங்க?” என கீதை ஓதுகிறார் உடனே பின்னர் மக்களுக்கு
ஞானம் பிறந்து இந்திய ரவுடிகள் அடித்து விரட்ட வெள்ளைக்காரப்பெண்மணிகள் நன்றி சொல்கின்றனர்.

2.ஆமீர்கான் தலைப்பிலேயே வருகிறார் ” நம்ம நாடு வளர்ந்துகிட்டு இருக்கு, மத்த நாடுகள் பார்க்குது, நம்ம நாட்டை நாமளே கேவலப்படுத்தலாமா?” ஆரம்பிக்கிறது விளம்பரம். வெள்ளைக்கார ஜோடி விமான நிலையத்திலிருந்து இறங்குகிறது, இறங்கியவுடன் ஒருவன்  பாக்குபோட்டு எச்சிலை கீழே துப்புகின்றான், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம். அப்புறம் அந்தஜோடி இந்திய வானுயர்ந்த கட்டிடங்களை
படம் எடுக்க முனையும் போது ஒரு இந்தியக்காரி தின்று விட்டு வாழைத்தோலை வீசுகிறாள்,  அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . அப்புறம் அவர்கள் காரில் பயணம் செய்யும் போது ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கிறான் அதை பார்த்து அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . மறுபடியும் நம்ம  ஹீரோ ஆமீர் வந்து ” நம்ம மானத்தை நாமதான் காப்பாத்தணும் என்கிறார்”


இன்கிரெடிபிள் இந்தியாவின் அனைத்து விளம்பரங்களிலும் ஒரு சுலோகன் இருக்கிறது அதுதான் “அதிதி தேவோ பவ” அதாவது விருந்தினர்கள் கடவுளைப்போன்றவர்கள் என்பதே அதன் அர்த்தம். அம்மொழி சமஸ்கிருதம் என்பதால் பார்ப்பனர்கள் ஆதிகாலத்தில் வந்தேறிகளாக குடியேறும் போதும் திராவிடர்கள் எதிர்த்து போராடும் போது நாங்கள் உங்கள் விருந்தாளிகள், நாங்கள்தான் கடவுள் என்று பீலாவோடு ஆரம்பித்திருக்கலாம் தங்கள் புரூடாக்களை, அவ்வாக்கியத்தையே இன்னமும் தொடரச்சொல்கிறார்கள்.  அதற்காக இப்போது ஊர்
சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினரெல்லாம் ஆக்கிரமிக்க வந்திருக்கிறார்களா? என்பதல்ல .


Incredible India – இந்தியனென்பதில் பெருமை கொள்

Incredible India என்பதற்கு அகராதியில் hard to believe, unbelievable, absurd, inconceivable என பல அர்த்தங்கள் வருகின்றன, நாம் சுருக்கமாக ” வியத்தகு இந்தியா “ என எடுத்துக்கொள்ளலாம். வியக்கத்தக்க வகையில் என்ன இருக்கிறது  இந்தியாவில் ? “வெளிநாட்டினரால்தான் நாடு முன்னேறுகிறது,  அவர்கள் சுற்றிப்பார்க்க வருவதால் பெரும் வருவாய் நாட்டிற்கு கிடைக்கிறது, அதனால் அவர்கள் நமது கடவுளைப்போன்றவர்கள்” . இந்தியா என்பது நாடே அல்ல , அது பல்தேசிய  இனங்களின் சிறைக்கூடம் சில அறிவிலிகள்
அறிந்ததே, பல அறிவாளிகளுக்கு தெரியாததே.

ஒரு நாட்டிற்கு எதனால் வருவாய் வரவேண்டும்? குறிப்பாக இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு வேளாண்மை முக்கியம்.அடுத்தாக ஆலைத்தொழில்கள் மூலமாக வருவாய் வரவேண்டும். வேளாண்மையை லாபகரமான  தொழிலாக மாற்றுவதனூடாகவே விவசாயிகள் வாழமுடியும். அதற்கு விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பது விவசாயியாக இருக்கும் நிலை தேவை. எண்ணை முதல் சிமெண்ட் வரை எல்லாப்பொருளுக்கும் முதலாளியால் விலை நிர்ணயிக்கப்படும் இந்தியாவில் தானியத்தை விளைவிப்பவன் அதற்கு விலையை நிர்ணயம் செய்யமுடியாது. இது வியக்கத்தக்கசெயல் அல்லவா?

இந்த பாரதநாட்டில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆலைகள் இழுத்து மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் உதிரிகளாக திரிந்து கொண்டிருக்கிறர்கள். அடுத்த நாள் சோற்றுக்கு உத்திரவாதமின்றி நாளை வேலை கிடைத்தால்தான் சோறு நிச்சயம் என்ற அளவில் தொழிலாளி சென்று கொண்டிருக்கிறான். முதலாளித்துவ பயங்கரவாதத்தால் தொழிலாளிகள் வேலையை
விட்டு நீக்கப்படுகிறார்கள், அதற்கெதிராக போராடினால் போலீசு மண்டையை உடைக்கிறது. சென்னையில் உள்ள நோக்கியாவில் பணி புரியும் பல தொழிலாளிகள் நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்ட போது, அவர்கள் ஆடிவிரதம் இருந்ததால்தான் மயக்கமடைந்தார்கள் என நோக்கியா தனது கூற்றை உலகத்திற்கு பறைசாற்றியதை காணும் போது நமக்குத்தோன்றுகிறது  , உண்மையிலேயே  இது வியக்கத்தக்க இந்தியாவே!

பட்டினிக்கொடுமையில் இந்த லோகத்திலேயே முதலிடமும் நம்ம இந்தியத் திருநாட்டுக்கே (இதுலயாவது நெம்பர் 1 ஆச்சுன்னு சந்தோசப்படவேண்டியதுதான்). பசியினால் நஞ்சானது தெரியாமல் மாங்கொட்டைகளை தின்று செத்துப்போன பழங்குடிகள் ஏராளம். அதற்கு அரசு சொன்னது “மாங்கொட்டையில் சத்து அதிகம்” இப்படி ஒரு கருத்தை வியக்கத்தக்க நாட்டில்தானே தெரிவிக்க முடியும். இன்னும் எத்தனையோ வியக்கத்தக்க விசயங்கள் இருக்கின்றன இந்தியாவில். கனிமவளங்களை சூறையாடுவதற்காக, அதை பன்னாட்டு
நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொண்டு கொல்ல எத்தனிக்கும் இந்த வியத்தகு இந்தியாவில் பிறக்க இந்தியர்கள் பெருமைப்பட்டுத்தானே ஆக வேண்டும்.

டெள கெமிக்கல் நிறுவனம் அமெரிக்காவில் எண்ணை எடுக்கும் போது நடந்த விபத்தில் செத்துப்போன நீர் நாய்களுக்கு நட்ட ஈடாக கொடுக்கப்பட்ட தொகையானது,  டெள கெமிக்கல் நச்சுவாயுவால் பல்லாயிரக்கணக்கில் செத்துப்போன போபால் மக்களுக்கு தூக்கியெறியப்பட்ட நட்டஈடைப்போல இருமடங்காகும். கோக், பெப்சி போன்ற குளிர்பான கம்பெனிகள் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குளிர்பானத்தின் மீது எவ்வளவு சதம் பூச்சிக்கொல்லியை கலந்திருக்கிறோம் என குறிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும்
தங்கள் குளிர்பானங்களில் குறிக்கவேண்டிய அவசியமில்லை என்று பதில் சொல்ல முடிகிறது. இப்படி ஒரு பதிலை, இப்படி ஒரு கேவலத்தை , இப்படி ஒரு அடிமைத்தனத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது ஆனால் ராமர் பிறந்த புண்ணிய பூமி ஏற்றுக்கொண்டிருக்கிறதெனில் இது வியக்கத்தக்க இந்தியா இல்லையா ? ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணானோரை கொன்று அவர்கள் ரத்தத்தை நக்கிக்குடிப்பதும் இந்தியாதான்.
நேபாளத்தில் மக்களாட்சி மலருவதற்கெதிராக தன் பார்ப்பன நரித்தனத்தை நிகழ்த்துவதும் இந்தியாதான்.

இந்தியாவில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா?

பச்சைப்பசேலெசன்ற காடுகள், அகன்ற புல்வெளிகள், புலிகள் விளையாடும் சுந்தரவனக்காடுகள், எது கானல் எது உண்மை எனத்திணறவைக்கும் பாலைவனங்ங்கள், இடி போல் தலையில் கொட்டும் அருவிகள், சிலுசிலுவென வீசும் தென்றல், கற்களை முகங்களாய் கொண்ட மலைகள், மலைகளின் சுனைகள் , சுனைகளில் இருக்கும் இனிக்கும் தண்ணீர்…………………..

………….. இது மட்டுமா?

நாம் அடிக்கும் விசிலுக்கு பதில் குரல் கொடுக்கும் குருவிகள், “காட்டுமிராண்டிப்பயலுங்க” என  நம்மை வேடிக்கைப்பார்க்கும் குரங்குகள், வேலையே செய்யாத ஆண் சிங்கங்கள், கூட இருக்கும் பாவத்திற்காக இரையை தேடிவரும் பெண்சிங்கங்கள்,  தன் குட்டியை யாராவது புகைப்படம் எடுப்பது தெரிந்தால் கூட அவர்களை பல கிலோமீட்டர் ஓட விரட்டும் யானைகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், சண்டையிடும்
கிளைமான்கள், விரட்டினால் மிடுக்காய் நிற்கும் கடத்திகள் ……………………………… எல்லாம் இருக்கிறது இந்தியாவில்,

ஆனால் இந்தியர்களுக்கு இருக்கிறதா? இல்லை எல்லாம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. காத்துக்கொண்டிருக்கிறார்கள் பன்னாட்டு முதலைகள்.

காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்படும் இந்தியாவின் காட்டாட்சி  அதனூடாக  ராணுவம் செய்யும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் நாசவேலைகளை எதிர்த்து போராடும் மக்களின் போர்க்குணம், நியாம்கிரி மலையின் ஒரு கல்லைக்கூட பெயர்க்க விடமாட்டோம் என போரிடும் தண்டகாரண்ய பழங்குடியின மக்கள் , அவர்களுடன் இணைந்து போரிடும் மாவோயிஸ்டுகள், இந்தியா முழுக்க மக்களுக்காக போரிடும் போராளிகள் என அனைத்தும்  உண்மையிலே வியக்கத்தக்கது மட்டுமல்ல பெருமைப்படத்தக்கது . நாட்டை சுற்றிப்பார்க்க வரும் வெள்ளையினத்தவர்கள் இம்மக்களை பார்க்க முடியாது.

வெள்ளையினத்தவர்களின் வருகைக்காக, அன்னிய மூலதனத்தின் வருகைக்காக மக்கள் அழிக்கப்படவிருக்கிறார்கள். ஆனால் போராடும் மக்கள், போராளிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், அவர்கள் ராவணனின் வாரிசுகள். ஒவ்வொரு துளி ரத்தம் கீழே விழும் போதும் ஆயிரம் போராளிகள் பிறப்பார்கள்.

“அதிதி தேவோ பவ” – வெளி நாட்டு விருந்தினர்களே! வாருங்கள் சுற்றிப்பாருங்கள், இந்திய அரசின் கோரமுகங்களை உலகிற்கு எடுத்துக்கூறுங்கள். இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாய் களத்திலிறங்குங்கள் இல்லையெனில் உங்கள் நாட்டு முதலாளிகளை பத்திரமாக இருக்கச்சொல்லுங்கள். அவர்கள் ஆடும் ஆட்டத்தைப்பார்க்கும் போது நீங்கள் அடுத்த முறை வரும் போது அவர்களின் பிணங்களுக்கு
மலர்ச்செண்டு வரக்கூட நேரலாம்.

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡ – சும்மா அதிருதுல்ல

ஜூலை 21, 2010

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

அது மிகப்பெரிய தொழில் நகரம். தொழிற்சாலைகள்  வரிசையாய் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போல் அழகாக  தொடர்ச்சியாக அமைந்திருந்தன. அந்த நிறுவனம் கொஞ்சம் பெரியதுதான், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. சுமர் 2000 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.  தொழிற்சாலை என்றாலே தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்றாலே சச்சரவு என்றிருக்கும் பல
லட்சக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இதுவொன்றும் விதிவிலக்கல்ல. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலைக்கு செல்லும் ரோடு அது வளைந்து வளைந்து பார்ப்பதற்கு அரிவாள் போலவே இருக்கும்.

இந்த தொழிற்சாலையில் பெரிய சங்கம் என்றால்  அது சிஐடியூ(மத்திய சங்கம்) சங்கம் தான். தொழிலாளர்களின் பிரச்சினை என்றாலே மத்திய சங்கம் தான் முன் வந்து பைசல் செய்யும். ஏதாவது பிரச்சினை அதிகமென்றால் போதும் “தொழில் அமைதியை கெடுக்காதே” மத்திய சங்கத்தால் போஸ்டர்
ஒட்டப்படும். அவ்வளவுதான் முதலாளிகள் “ஆடி”ப்போய் விடுவார்கள். சங்கத்தின் தலைவர் அடிக்கடி சொல்லுவார் நம்ம சங்கம் இங்க வலுவா இருக்குறதால தான் நமக்கும் முதலாளிக்கும் அதிகமா பிரச்சினை வரதே இல்லை”.

தீபாவளி காலங்களில் போஸ்டர்கள் மத்திய சங்கத்தால் ஒட்டப்படும்.  வர்க்கமாய் தொழிலாளர்களை அணிதிரட்டச்சொல்லி அழைப்பு விடுக்கும். கடந்த முறை கூட போனஸ் பேச்சு வார்த்தையின் போது  நம்ம தோலர் தானே சிறப்பாக செய்து முடித்தார். ஓவ்வொருமுறையும் பண்டிகைகளின் போதுபோனஸ் கோரி  தோலர்களின் பணி சிறப்பாக இருக்கும். நான் கூட இந்த சங்கத்துல தான் இருக்கேன்.எனக்கு வயது 30 தான்
ஆகுது. நான் கேட்பேன் மத்திய சங்க தோலர்கள் கிட்ட “வித்யாசமா போராட்டம் பண்ணக்கூடாதா?” அதுக்கு பொறுப்புத்தோலர் சொல்வார் ” தோழர் உங்க வயசுதான் என்னோட அனுபவம், எதுக்கும் அவசரப்படக்கூடாது”.

கடந்த முறை போனஸ் பிரச்சினையின் போது சுமுகமாய் முடித்து விட்டு வந்த போது என்னிடம் சொன்னார் “அவசரப்பட்டா வெற்றிய சாதிச்சு இருக்க முடியுமா?” எப்பவாவது வேலை நிறுத்தம் என்று மத்திய சங்கம்
சொன்னால் கூட சிஐடியூ-ன் பல தோலர்கள் தவறாமல் வேலைக்கு வந்து விடுவார்கள்.  ஆரம்பத்தில் நான் எல்லா போராட்டங்களில் கலந்து கொள்வேன். மற்ற தோலர்களின் வர்க்க உணர்வு எல்லைக்குள் இருப்பதை அறிந்து நானும் அளவோடு இருக்கிறேன். “எதுவா இருந்தாலும் அளவோடுதான்ன்னு சும்மாவா சொன்னாங்க?”

அன்னைக்குகூட பேருந்தில் நானும் சங்கத்தோலரும் பயணித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நிறுத்தத்தில்ரெண்டு பசங்க ஏறினார்கள் பேருந்தில் கையில் புத்தகங்களோடு.”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………..” என ஆரம்பித்த அந்த ஒல்லியான, கருத்தப்பையன் உலக நடப்பு, இந்துமதம், போலி கம்யூனிசம் என்று எனக்கு புரியாத பலவற்றையும் பேசிக்கொண்டே போனான் கடைசியாக புதிய ஜனநாயகம்ன்னு ஒரு புத்தகம் அதையும் வித்தாங்க. அந்தப்பபையன் என்கிட்ட கேட்ட போது நான் 7 ரூவா கொடுத்து அப்புத்தகத்தை வாங்கினேன்.

பேருந்து நகர்ந்தது. என்னவோ தோலர் செமக்கடுப்பில் இருந்தார். நான் கேட்டதுக்கெல்லாம் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தார். புத்தகத்தின் தலைப்பில் போலிக்கம்யூனிஸ்டுகளின் துரோகம் என்று போட்டிருந்தது. அட நம்ம தோலர்(அச்சுதானந்ந்தன்) படம் போட்டிருந்தது. நான் தோலரிடம் கேட்டேன்”தோலர் அவங்க யாரை போலி கம்யூனிஸ்டுன்னு சொல்றாங்க?” “தெரியலை ” என்றார். “என்னா தோலர் இப்புடி சொல்றீங்க? நம்ம அச்சு தோலர் போட்டோவை போட்டுருக்காங்களே”

” நீங்க மொதல்ல  எதுக்கு அந்த புக்க வாங்குனீங்க, அவங்க நக்சலைட்ஸ், அவங்க கருத்த ஏன் நீங்க புடிச்சுகிட்டு தொங்கறீங்க?”,

“தீவிரவாதிங்க எல்லாம் பகிரங்கமா பேசுறாங்களா, போலீசு இவங்கள பிடிக்காம இருக்கு, அவன் சொல்றபடி பார்த்தால் கேரளாவில அச்சு தோலர் இனவெறி பிடிச்ச நபரா?,ஈழப்பிரச்சினையில  இந்திய போலி சனநாயகத்தை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் கூட பண்ணல” நான் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனேன்.

மிகவும் குழப்பமான தோலர் சொன்னார் “முதல்ல சங்கத்த மதிக்க பழகுங்க, ஏதோ ரெண்டு தீவிரவாதிங்க கொடுக்கற புத்தகத்த வச்சு பேசாதீங்க? நீங்க ஈழத்துக்கு ஆதரவா என்ன பண்ண முடியும்? அதுக்கு நம்ம கட்சி சீபீஎம் இருக்கு. அவங்களுக்குத் தெரியாததா உங்களுக்கு தெரியும்? “. இந்த ஜனநாயகத்தில நம்பிக்கையில்லாதவங்க அவங்க, லால்கரில கூட மாவோயிஸ்டுங்க மக்களை பகடைக்காயா பயன் படுத்துனாங்களே, தெரியாதா? என்ன?”

“போன வாரம் ஒரு பையன் பஸ்ஸில சொல்லிக்கிட்டு இருந்தான் “மார்க்சிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களை கொன்று  நிலங்களை இந்தோனேஷியாவின் சலீம் குழுமத்திற்கு கொடுக்க நினைக்கிறது, மக்கள் போராட்டத்தை பாசிசமாய் அடக்குகிறது……………….

நான் முடிப்பதற்குள் அவர் சொன்னார் “முதல்ல  இதுமுதலாளித்துவ நாடு சோசலிச நாடு அல்ல, இதுக்கேத்தபடி தான் வாழ வேண்டும், உங்களுக்கு போனஸ் வாங்கி கொடுத்தது யார் அந்த மாவோயிஸ்டா ,சங்கமா?,” அவர் கடைசியாய் கேட்ட கேள்வி என் வாயை அடைத்தது.அப்புறம் தோலரிடம் அது சம்பந்தமாக எதுவும் கேட்பதில்லை.

ஆனால் இப்போது அந்த தீவிரவாத புத்தகங்களை அதிகமாய் என்னோடு வேலை செய்யும் ராஜா படித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகமாய் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வேறு சிலர் சொன்னார்கள். என்னிடம் கூட பலமுறை கேள்வி கேட்டிருக்கிறான். நான் உட்பட பலரும் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டோம். அவன் இப்போது தனியாளாக ஆலை நுழைவாயிலில் புத்தகமெல்லாம் விற்கிறான். சிலர் வாங்குவார்கள். பொறுப்புத்தோலருக்கு அவனைப்பார்த்தாலே செம எரிச்சலாக இருக்கும் அவனை பற்றி  எங்களிடம் திட்டிவிட்டுதான் வருவார். ஆனால் மற்ற சங்கங்களின் தலைவர்களோடு நம்ம தோலர் நெருக்கமாக இருப்பார். ஏன் பி.எம்.எஸ் (bharathiya masthur union) சங்க  மாநாட்டுக்கு தோலர்தான்
வாழ்த்துரை சொன்னார்.

திடீரென்று எங்கள் ஆலையில்   ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். சுமார் 60 பேர் வரை தூக்கி விட்டனர், அந்த ராஜாவுக்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.அதில் நம்ம தோலருக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால்  மத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எல்லா சங்க நிர்வாகிகளும் கூடினார்கள். வழக்கம் போல இதற்கும் மத்திய சங்கம் தலைமை வகிக்க, அல்லும் பகலும் என்ன வகையான போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. வந்திருந்த ஒருவர் சொன்னார்

ஓசூர்- ல யாரோ துடைப்பக்கட்டை, செருப்பு எடுத்துக்கிட்டு போராடுனாங்களாமே அப்புடி பண்ணுவமா தோலர்”

பொறுப்புத்தோலர் சொன்னார்”சட்டம் ஒழுங்க பாதிக்குற மாதிரி எதுவும் செய்யக்கூடாது, என்ன செய்தால் முதலாளி பயப்படுவானோ அப்படி போராடணும். நான் எதுக்கும் சீபீஎம் மாவட்டச்செயலாளர் கிட்ட கலந்து
ஆலோசனை பண்ணிக்குறேன்”. என்றபடி கிளம்பியவர் சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்.

” நாளைக்கு நாம நடத்துற போராட்டம்,இந்த முதலாளிக்கு மட்டுமில்ல, உலக முதலாளித்துவத்துக்கே குலை நடுங்கும், அகில உலக பாட்டாளி வர்க்கமே பெருமைப்படுற மாதிரி ஒரு சிறப்பான போராட்டத்தை நாளைக்கு முன்னெடுக்கப்போறோம். இப்ப நான் சொன்னா முதலாளிக்கு தெரிஞ்சுடும், தோலர்களே நீங்க நாளைக்கு தயாரா வாங்க எதுக்கும் ” நான் எப்போதுமே தோலரின் கண்களில் அப்படி ஒரு நெருப்பைபார்த்ததில்லை”

சின்னதாய் கவிதை தோன்றியதெனக்கு

உன் கண்கள்
நாளை வெடிக்கும் எரிமலை
உடைபடட்டும்  முதலாளித்துவ பணமலை
தொழில் அமைதியே தொழிலாளர் நலன்

உயர்த்துவோம் செங்கொடி
சுத்தியலறிவாள் நட்சத்திரத்தோடு
ஆண்டவனே கருணைக்காட்டு
அழிந்து போகட்டும் அடக்குமுறைகள்

எனக்குத்தூக்கம் வரவில்லை, நாளைக்கு என்ன வகையான போராட்டம் நடக்கும்” ஒரு வேளை ஆலையை இழுத்து மூடுவாரா தோலர்? இல்லை முதலாளிக்கு அடிவிழுமா? ச்சே ச்சே அவர் அப்படி சட்டத்துக்குவிரோதமாக செய்ய மாட்டார். யோசனையிலேயே தூங்கிப்போனேன்.  காலையில் பூஜை புணஸ்காரங்களை முடித்தபடி மனைவியிடம் சொன்னேன். அவளோ “பாத்துங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு தள்ளி நின்னுக்கோங்க, போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணுனா  நான் பஸ்ஸ¤க்கு வந்தேன்னு பொய் சொல்லுங்க,

அரெஸ்ட் ஆயிடாதீங்க, யார் எப்புடி நாசமா போனா நமக்கென்ன? சொல்றத நல்லா புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லிக்கொண்டிருக்க என் மனமோ தோலரின் வித்யாசமான போராட்டத்தைப்பற்றியே லயித்துப்போனது.

பேருந்திலிருந்து இறங்கினேன், ஆலைக்கு செல்லும் வழியெங்கும் போஸ்டர்கள் முளைத்திருந்தன. அதில் நூதன போராட்டம் என்று இருந்தது. நான் நினைத்தேன் “நம்ம தோலர் உஷார் தான் எதிலேயும்”.

போராட்டத்தை ஆரம்பித்து வைப்பவர் என்று சீபீஎம் மாவட்டச்செயலாளர் பெயர் போட்டிருந்தது. “சரி இன்னைக்கு எப்படியோ போர்க்களமாகிவிடும்”
ஆலையை நெருங்கினேன், போராட்டம் இன்னும் அரை மணி நேரத்தில் துவங்கப்போவாதாய் பொறுப்புத்தோலர் சொன்னார்.  எனக்கு கொஞ்சம் நடுக்கமாய் இருந்தது. அவர் என்னிடம் வந்து “இங்க பாருங்க தோழர், இது முதல் கட்டப்போராட்டம் தான் இதிலே மொத்தம் 30 பேர் மட்டும் தான்
கலந்துக்கப்போறோம், அதில நீங்களும் ஒண்ணு” எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

நான் மறுப்புச்சொல்ல வாயெடுத்தேன் . “மறுக்காதீங்க தோழர், இப்படி மறுத்தா எப்படி புரட்சி வரும் , இப்படி தயங்குனா எப்படி ரஷ்யாவில லெனின் புரட்சிய நடத்திக்காட்டி இருப்பார்? நாம் தொழிலாளர் வர்க்கம் என்ற படி அவர்
மைக்கில் 30 பேர் பேரையும் அறிவித்து விட்டார்.எங்கள் 30 பேருக்கும் மாலைகள் போடப்பட்டன. நாங்கள் பந்தலின் முன்னே வந்து கோஷங்கள் போட்டோம்.

மாவட்டசெயலாளர் கட்சி அவருக்கு ஒதுக்கியிருக்கும் சுமோவில் வந்தார். எங்களை பெருமிதத்தோடு பார்த்துவிட்டு ரஷ்யாவில் நடந்த புரட்சிகர நடடிக்கைகளைப்பற்றி கனல் தெறிக்க பேசிவிட்டு கடைசியாய் சொன்னார்”இப்போராட்டம் உலக முதலாளித்துவத்துக்கு மரணத்தைப் பரிசாய்
தரும்”நாங்கள் 30 பேரையும் சுற்றி கோஷம் போட்டபடி  இருந்தார்கள். முதலில் நான் தான் நின்றுகொண்டிருந்தேன். நான் என் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவேன், ஜெயிலுக்கு போய் விட்டால் என்ன செய்வது?

சீபீஎம் மாசெ வந்தார் என்னிடம் “பரவாயில்லையே தோழர் சின்ன வயசில ரொம்ப துணிச்சலான முடிவு” என்றபடி கையில் சிறிய கத்தியை எடுத்தார். என் தலைக்கருகில் கொண்டு வந்தார்.அய்யோ என்ன நடக்கப்போகிறதெனக்கு? ஒருவேளை ரத்தம் சிந்தபோகிறேனா? இல்லை என் ரத்தத்தை  அவர் வெற்றித்திலகமாக இட்டுக்கொள்ளப்போகிறாரா? இல்லை கையை கிழித்துக்கொள்ளும் போராட்டமா?

அய்யோ எனக்கு பயம் அதிகமாகி நடுங்கினேன், கண்களை இறுக்கி மூடினேன். அவ்வளவு தான் இவ்வுலகத்தைகடைசியாய் பார்க்கிறேன் என நினைத்துக்கொண்டேன். மாசெ தோலர் என் தலையின் கையை வைத்தார். தலையில் தன்ணீர் தெளிக்கப்பட்டது. “அய்யோ என்ன நடக்கபோகிறது”

மாசெ தோலர் சிறிய கத்தியால் என்  தலையில்………………………………………… …….எடுத்தார். கண்ணைத்திறந்தேன். ரத்தத்துளிகள் கத்தியில் இருந்தது.  எனக்கு டெட்டால் வைத்தார்கள்.முழக்கங்கள் திமிறின,  பொறுப்புத்தோலர் பேசினார்”இதோ இந்த முதலாளித்துவத்துக்கெதிராக புரட்சிகரமான முறையில்  நமது தோழர்கள்………………….. போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்கு இந்த ஆலை நிர்வாகம்

அசையாவிட்டால் நாளை இந்த உலகமே அதிரும் படி இன்னொரு போராட்டம் நடக்கும்” ஒளிந்திருந்து முதலாளியின் ஆட்களும் போலீசும் பயத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது.

முடிந்து வேலைக்கு சென்றோம்.எல்லோரும் கை கொடுத்தார்கள், யோசித்தேன், புரட்சி அது சீபீஎம் கட்சியால் மட்டும்தான் நடத்தும். அதற்கு மட்டுமே தகுதி இருக்கிறது.

————————————————————————————————————————

வேலை முடிந்து வீட்டிற்கு போனேன். பக்கத்து வீட்டு குழந்தை அலறி அடித்துக்கொண்டு ஓடியது, என்மனைவி பார்த்தாள் என்னை “என்னங்க இப்புடி மொட்டை அடிச்சுகிட்டு வந்திருக்கீங்க?” காலையின்
புரட்சிகர போராட்டத்தை அவளுக்கு விளக்கினேன். கடைசியாய் சொன்னேன் . “போராட்டம்ன்னா யாருக்கும் பாதகம் இல்லாம இருக்கணும்? இந்த பு ஜ தொ மு காரனுங்க மாதிரி சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, தொழில் அமைதியை பாதுகாக்க வேணும் “. கடைசி வாக்கியத்தை எனக்கு அருகில்
வசிக்கும் ராஜாவின் காதில் விழுமாறு உரக்கக்கூறினேன். ” நாளைக்கு என்ன போராட்டம் தெரியுமா?

கோவணத்தோடு கையில் சட்டி வச்சிருக்குற போராட்டம்”

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

——————————————————————

மாபெரும் தோலர் கோவிந்துக்குட்டி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை ஒட்டி இக்கதை பலமாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தாலும் இப்போது பதிப்பிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி

சாயம் வெளுத்துப் போன போலிகள்

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் – CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்

செப்ரெம்பர் 13, 2009

வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்

மாதங்கள்
உருண்டோடிவிட்டன
ரணங்களை  இன்னும்
அழிக்கமுடியவில்லை என்னால் ……
ealam_b
கர்ப்பிணி பெண்களின் வயிற்றினை
கிழித்து சூக்குமம் தேடின
குண்டுகள்
செத்த தமிழரின்
உடலையும் துளைத்தன சிங்கள
வெறி வண்டுகள்….
தலையில் கட்டு போட்டபடி
அம்மாவும் மகளும்
அழுது கொண்டிருந்த
அக்காட்சி போய்விட்டதா மனதில்
ealam_c
பிணத்தோடு பிணமாய்
பிணமாவதற்கு தயாராகிக்
கொண்டிருக்கும் அவரின்
கண்களில் கேள்விகள் தெறிக்கின்றன
என்ன பாவம் செய்தோம்…..
அவர் வருவார், இல்லையில்லை
இவர் வருவார் ஒரே நாளில்
அதிசயம் நடக்கும் – கனவுகள்
தான்  நடப்பதில்லையே
வந்த படங்களைவிட வராதபடங்கள்
வராதவையாகவே இருக்கட்டும்
இருபதினாயிரம் பேர்
இன்னும் ஐம்பதாயிரம் பேர்
எண்ணிக்கைகளுக்கு
எண்ணத்தெரியவில்லை……
அப்பன், மாமன், மனைவி, கணவன்,
மச்சான் எல்லோரையும் இழந்து
விசத்தை கேட்கும் அந்த மனம் இனி
யாரை நம்பும்,
நம்பிக்கையாய்
இருக்க என்ன செய்தோம்
ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்பதைத்தவிர…..
கம்பிதாண்டி போனவர்கள்
கருகிப்போய் கிடக்கிறார்கள்
வாழ்க்கையில் உதிக்காது
சோத்துக்கு நிற்கயில்
உள்ளங்காலில் சூரியன் தகிக்க
அதை விட சுடுமா
துப்பாக்கியின் ரவைகள்….
ealam_e
விடுதலையின் வெப்பம்
குறைந்திடுமா என்ன
தெறிக்கும் ரத்தத்தில்
மரண சத்தத்தில்
ஜீவிப்பார்கள் நாளைய புதல்வர்கள்

இது என்ன ஜோசியமா
இல்லை-வரலாறு
ஆம் ஜாலியன் வாலாபாக்
பகத்சிங்கை பெற்றெடுத்தது
பூங்காவில் சுற்றிவளைக்க
பரங்கியர் தலையுடைத்து சரித்திரம்
சொன்னான் எங்கள் தோழன் ஆசாத்…..

தேடுதல் வேட்டைகள் தேடத்தேட
விழுந்த பிணங்களோ ஆயிரமாயிரம்
தியாகம் அள்ள அள்ள வற்றாத நதி
எங்கள் நக்சல் பரி

பாரிஸ் புரட்சி தோல்வி தான்
ஆனால் முடிந்து விட்டதா
போராட்டம் ?
செத்த பின்னும்
பிணங்களை கண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறது
ஆளும் வர்க்கம் –  இன்று வரை
அது  பயந்தோடுகின்ற
சொல் எது  தெரியுமா?
மக்கள்………ealam_d

ஆம்
கைகோர்ப்போம் இங்கு
வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும் !
கண்ணீரைதுடைத்து
கட்டியமைப்போம் மக்கட் படைகளை
உரத்து முழங்குவோம்
ஏகாதிபத்தியம் ஒழிக !
இந்திய மேலாதிக்கம் ஒழிக ! !
சிங்களபேரினவாதம் ஒழிக ! ! !
சிவப்பு பயங்கரவாதத்தில்
மூழ்கிப்போகட்டும் பேரினவாதம்,
சின்னாபின்னமாகட்டும் மேலாதிக்கம்
ஏகாதிபத்தியத்தை பிணமாய்
ஏற்றுமதி செய்வோம்….french_revolt
சிவப்பு அது பட்டு போகாது
சுத்தியலும் அரிவாளும்
இனி அறுவை சிகிச்சையின்
கருவிகளாகட்டும்.