Posts Tagged ‘மக்கள்’

போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை

மார்ச் 14, 2009
raja-copy1தூரிகைகளின் துயரப்பதிவுகள்
கண்டது முதல்
என்னிடம் சொல்வதற்கு
ஏதுமில்லை
மக்களின் மவுனம் என்னை கொல்லுகின்றது….
ஓட்டுப்பொறுக்கிகளின் சிரிப்புக்கள்
மகிந்தாவின் சிரிப்போடு
ஒத்துப்போய் சிரிப்புக்கள்
பெருஞ்சிரிப்பாகி விட்டன
அலைகளெல்லாம் ஒன்றாய் சேர்ந்து
சுனாமியானது போல்
எங்களின் துயரங்கள்
அவர்களின் சிரிப்புக்கள்
சந்தோசங்கள், ஆர்ப்பரிப்புக்கள்
சச்சின் சிக்ஸர் அடித்த வேளையில்
மகிந்தாவோ பிணங்களின் சதங்களை
எண்ணிக்கொண்டிருக்கின்றான்……………

கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது
மனமோ தட்டி தட்டி
தடுக்கிறது

மனிதனின்
உடல்கள் பாஸ்பரசு குண்டுகளால்
எரிந்து கொண்டிருக்க
இரவு பத்து மணிக்கு மேல்
டாஸ்மாக்கை ஒரு கும்பல்
தட்டிக்கொண்டிருக்கிறது…..

என்னைப்போலவே பலரிடமும்
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை

ஆம் உண்மைதான்
சொல்வதற்கு வார்த்தைகள்
இல்லை
இருக்கின்ற வார்த்தைகள்
எல்லாம்
சொல்லுகின்றன
திமுக அதிமுக பாமக
பாஜக காங்கிரஸ்,கலைஞர் ,
செயா,ரஜினி,விஜய்,அஜீத்,
சில்க்,நமீதா………
வார்த்தைகள் அடமானம்
வைக்கப்பட்டிருக்கின்றன
உலக வங்கியில் அல்ல
உள்ளூர் தேசியத்தில்……
உன்னில் தூங்கி கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப
இன்னும் எத்தனை பேர்
கருகிப்போகவேண்டும்……

வேறு வழியே இல்லை
இன்று ஈழம்
நாளை உன் இல்லம்
கண்டிப்பாய் நீயும்
கருக்கத்தான் படப்போகிறாய்

போராட்டத்தை தவிர வேறு
வழி இல்லை இல்லவே இல்லை

இனியும்
குப்புறப்படுத்து கிரிக்கெட்
ஸ்கோருக்காக நீ காத்திருந்தால்
நாங்கள் காத்திருக்கப்போவதில்லை
இந்தியத்தை முறியடிக்க
கூடவே உன்னையும் சேர்த்து.