Posts Tagged ‘B.P.O.’

B.P.O.அடிமை.காம்-பகுதி 5 – அடிமைகளின் ஆசை மொழி

மார்ச் 25, 2009

B.P.O.அடிமை.காம்-பகுதி 5

அடிமைகளின் ஆசை மொழி

part5

வழக்கம் போலவே காலையில் பஸ்ஸை பிடித்து ரயில்வே ஸ்டேசன் வந்து அப்புறம் சைதாப் பேட்டையில் இறங்கி பிறகு 19 Bக்காக காத்திருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் பஸ் வரவில்லை. பக்கத்தில் ஒருவர் கேட்டார்.19 B வரலியா? “பரதேசி நாய்ங்க எங்க பஸ்ஸ உடறானுங்க? வாரம் ஆனா அத்தன பஸ் உட்டோம் இத்தன பஸ் உட்டோம்ன்னு சொல்லுறானுங்க இந்த ரூட் பஸ் மட்டும் அப்படியே இருக்குதே” என புலம்ப ஆரம்பித்தேன்.அவரும் சில கெட்ட வார்த்தைகளோடு ஆரம்பித்தார் முடிப்பதற்குள் வந்துவிட்டது

பஸ் எங்கேயிருந்துதான் அவ்வளவு கூட்டமோ சட சடவெனெ ஏறினார்கள் . எனக்கு பத்திரமாக நிற்பதற்கு இடம் கிடைத்தது. மெதுவாக மாட்டு வண்டிபோல இயங்க ஆரம்பித்தது . ஒரு நான்கு ஸ்டாப்தான்சென்றிருக்கும் மத்தியகைலாசத்துக்கு சற்று முன் வண்டியை நிறுத்திவிட்டார்கள். நடத்துனர் மெதுவாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.ஆளாளுக்கு கத்திக்கொண்டிருந்தோம்.எதையும் காதில் போடவில்லை.15 நிமிட இடைவேளைக்கு பிறகு கிளம்பியது. கொஞ்ச நேர பயணம். நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இறங்கினேன். வெயிலோ பட்டய கிளப்ப தலையில் கர்ச்சீப்பை கவிழ்த்துக்கொண்டு ஓடினேன்.

செய்ய வேண்டிய சம்பிரதாய வேலைகளை செய்து விட்டு அலுவலகம் உள்ளே சென்றிருந்தேன். ரொம்ப நாள் கழித்து டே ஷிப்ட்-ல் வந்திருந்தேன். எல்லோரையும் விசாரித்து விட்டு அமர்ந்தேன். என்னுடைய டீமைச்சேர்ந்த பெண் வந்து அமர்ந்தார்.அவரிடம் ஏதோ ஒரு மாற்றம். தெரிந்து விட்டது கண்ணாடியை மாற்றிவிட்டு லென்ஸ் போட்டிருந்தார். வேண்டுமென்றே கேட்டேன்” என்னங்க மூஞ்செல்லாம் வீங்கியிருக்கு வரவழியில விழுந்துட்டீங்களா? இல்ல உடம்பு சரியில்லயா?” “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே. லென்ஸ் போடிருக்கேன் ” என்றபடியே அவர் வார்த்தையில் ஒரு பெருமிதம். எனக்கு ஒரு சந்தேகம்” எதுக்காக லென்ஸ் போட்டிருப்பார்?”.

அடுத்த இரு நாட்கள் முழுவதும் வேறு வேலைகளில் மூழ்கிப்போனதால் அதைப்பற்றி என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆனால் வந்து அப்பெண்ணிடம் பேச இதை ஒரு சாக்காக வைத்து கொண்டு “இது நல்லாயிருக்கு”ஏன் மாத்தீட்டீங்க” என்ற பலரின் கேள்விகள் என் காதில் விழுந்து கொண்டே இருந்தன.

அன்று மாலை வேலை முடிந்து செல்லும் போது கேட்டேன் “எதுக்குங்க லென்ஸ் போட்டீங்க?”. “கண்ணாடி போட்டிருக்கிற்து அன் ஈஸியா இருந்துச்சு அதான்” தய்வு செய்து தப்பா எடுத்துக்காதீங்க அன் ஈஸின்னா கொஞ்சம் புரியல சொல்லுங்க”. “வேல செய்ய கஸ்டமா இருக்கு.” “அப்புடியா ஆமா நீங்க என்ன வேல செய்யுறீங்க” என்றேன். ஏன் தெரியாதா என்றபடி பேரைச் சொன்னார். “வேல செய்ய அந்தக்கண்ணாடி என்ன தொந்தரவா இருந்துச்சு நீங்க என்ன மரம் ஏறப்போறீங்களா? இல்ல ஒட்டப்பந்தய வீராங்கனையா? உங்க வேலைக்கு எந்தவிதத்துல அது தடயா இருந்துச்சு? ஒரு விசயத்த செய்யுறீங்கன்னா எதுக்குன்னே தெரியாமவே செய்யுறீங்களே எப்புடீங்க?”என்றேன்.

“அப்படி எப்படி சொல்லுறீங்க பத்து வருசம் முன்னாடி கிஷ்கிந்தா போனோம் அப்ப கண்ணாடி கீழ விழுந்துச்சு ,அப்புறம் எங்க அண்ணன் கூட சொன்னான் அதான் மாத்துனேன்”.    “அப்ப உங்க தேவைக்கு மாத்துல உங்க அண்ணன் தேவைக்காக மாத்துனீங்களா?இல்ல பத்து வருசமா அந்த விசயத்த நினச்சுகிட்டேயிருந்து லென்ஸ் போட்டீங்களா? பதில் சொல்லுங்க” என்றேன் அதற்கு பதில் இல்லை.

அறிவியலின் எந்த கண்டுபிடிப்பிற்கும் நான் எதிரா பேசலை அறிவியல் தான் கம்யூனிசம் . தன்னுடைய தேவை என்பதை மீறி மற்றவர்களின் தேவைக்காக தன்னை மாற்றிகொள்வது அப்படீங்குற விசயத்துல தான் எல்லோரும் தீவிரமா இருக்காங்க” ஏன் ஒரு விசயத்த செஞ்சீங்கன்னு கூட அதுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்ககுறீங்களே அதுதான் முதலாளித்துவத்தோட வெற்றி”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்னோட தேவைக்குதான் நான் வாழறேன்” என்ற படி கிளம்பினார். அவ்வாரம் முழுவதும் வேலைப்பளு காரணமாக அவ்விசயத்தப்பற்றி பேசமுடியவில்லை.

அவ்வாரம் முடிந்து அடுத்த வாரம் நைட் ஷிப்ட்ல் இருந்தேன். எல்லோருக்கும் மெயில் வந்திருந்தது. அலுவலகத்தில் பெண்கள் எல்லோரும் பெண்கள் தின கொண்டாட்டத்தை கொண்டாடிவிட்டார்களாம்.அந்த புகைப்படங்கள் மெயின் சர்வரில் போட்டிருந்தார்கள். விபி,மேனேஜர் ஹெச்.ஆர்.மற்ற பெண் தொழிலாளர்கள் உட்பட சமமாய் உட்கார்ந்து போஸ் கொடுத்திருதார்கள்.இன்னொரு போட்டோவில் கேக் சாப்பிட்டுக்கொண்டிருதார்கள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர் நோக்கினேன்.

எதிர்பார்த்த வாரமும் வர நேரமும் கைகூட நான் ஆரம்பித்தேன்” போட்டோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன அவ்வளவு ஜாலியா இருந்தீங்க, எல்லோரும் புடவைக்கட்டீருக்கீங்களே? எப்புடி முன்னாடியே சொன்னாங்களா?” ஆமா முன்னாடி நாள் எல்லோரையும் ஹெச் ஆர் கூப்பிட்டு சொன்னாங்க”.

“அப்புடியா சொன்ன வுடனே புடவைய கட்டீட்டு வந்துட்டீங்களா பெண்கள் தினம்னா என்னன்னு தெரியுமா ? அமெரிக்காவுல பெண்கள் தன்னோட கொத்தடிமைத்தனத்த எதிர்த்து போராடினாங்க ஆனா நீங்க எல்லாம் நவீன கொத்தடிமை பீபிஓவில அடிக்கவோ திட்டவோ வேண்டாம் சொன்னாவே செஞ்சுடுறீங்க இல்லயா?”.

” புடவை கட்டுறது என்ன தப்பு ?. “புடவை கட்டுறதப்பத்தி பேசல உங்களுக்கு எது தேவையோ அதை உடுத்த உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா மற்றவங்களோட கட்டளைய இன்பமா ஏற்று அடிமையா வாழறீங்கன்னுதான் சொல்லுறேன்,

அதாவது நீங்க உழைக்குற உழைப்புக்கு இங்க சம்பளம் இருக்கா இல்ல, காலையில வந்துட்டு தினமும் குறஞ்சது ரெண்டு மணி நேரம் ஓ.டி பாக்குறீங்களே அதுக்கு ஏதாவது அலவன்ஸ் தராங்களா? இல்ல நீங்க ஒரு பெண் அப்புடீங்கறதால எத்தன பிரச்சினய சந்திச்சு இருப்பீங்க அதப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா?இல்ல நவீன கொத்தடிமையா மாறிக்கிட்டு வர நமக்கு மகளிர் தினம் நாளைக்கு சேலை கட்டிட்டு வான்னு சொன்னா எதுக்கு வரணும் என்ன அவசியம்?

சுரண்டுகிற வி.பியும், ஹெச்.ஆரும். சுரண்டப்படுகிற எங்களோட எப்புடி மகளிர் தினம் கொண்டாடமுடியும்ன்னு ஏன் பேசல?”…………………….

சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன் ” அதே சீனியர் ஹெஆர் பசங்கள கூப்பிட்டு ஏப்பா எல்லோரும் வேட்டி கட்டிட்டு வாங்கன்னு சொன்னா எல்லோரும் கட்டிட்டு வருவாங்களா என்ன? ஆனா புடவை கட்டிட்டு வான்னு பெண்கள்கிட்ட சொன்னா உடனே தன்னோட தேசியக்கடமையா செய்யுறீங்க ஆனா ……………….”என்றேன்

அதற்குள் அவர் இடை மறித்தார் ” உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்களே எனக்கு பிடிச்சுருக்கு அதான் போட்டேன், எனக்கு பிடிச்சதான் நான் செய்யுறேன்.மத்தவங்களுக்காக வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” .

சரிங்க ” என்ன சைக்கிள் வச்சுருக்கீங்க?” .”லேடிபேர்ட்”என்றார். “ஏன் ஹீரோ சைக்கிள் வாங்கல அது லேடி பேர்ட விட தாங்கும் விலையும் குறைவுதான”. “எனக்கு பிடிக்கல” என்றார்.” எனக்கு பிடிக்குது பிடிக்கல என்பத யார் தீர்மானிக்குறா நீங்களா இல்ல அந்த சைக்கிள் கம்பெனிக்காரனா? ஏன்னா முதலாளி தீர்மானிக்குறான் இதுக்கு இப்படியெல்லாம் விளம்பரம் கொடுத்தா இப்படி வியாபாரம் ஆகும் என்று.

ஒரு காலத்துல கண்ணாடிக்குன்னு அத்தன விளம்பரம் வந்துச்சு மருத்துவமனைகள் மூலமா ஆனா இப்ப அதே மருத்துவ மனைகள் என்ன சொல்லுது கண்ணாடி போடுறது கண்ணுக்கு விலங்கு மாட்டுறது போலவாம். லென்ஸ் போடுங்க லேசர் சிகிச்சை செய்யுங்க என்று இப்ப சொல்லுங்க நீங்க உண்மையாகவே உங்க நல்லதுக்குதான் லென்ஸ் போட்டீங்களா? “

“நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக்குறோம் இந்த சைக்கிள் தான் வாங்கணும் ஏன்னா அது லேடிஸ்க்குன்னு உருவானது, என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன கண்ணாடின்னு கூப்புடுறாங்க ,டூர்க்கு போனப்ப என் பிரண்ட் சொன்னா ஏன் இன்னும் கண்ணாடி போட்டிருக்க லென்ஸ் போடலியான்னு?.இது மட்டுமல்ல பேர் அண்ட் லவ்லியில இருந்து அடிக்குற செண்ட் வரைக்கும் மனிதனை ஒரு பொருளா மாத்தி இருக்கு . கருப்பா இருந்தா தன்னம்பிக்கை போயிடும், வாழ்க்கையே நாசமாபோயிடும் பேர் அண்ட் லவ்லி போடுன்னு சொல்லுறான்.அந்த விளம்பரம் புடிக்குதோ இல்லையோ ஏதாவது கிரீமை வாங்கி பூசிக்கிறது.”

“இப்படி ஒண்ணு ரெண்டு இல்ல வாழ்க்கயில எல்லா விசயத்தையும் ஏன் வாழ்க்கையையே மத்தவங்களுக்காகத்தான் வாழறோம். உங்களுக்காக உண்மையிலே ஒண்ணு பண்ணனுன்னு நினச்சீங்கன்னா போராடுங்க , பெண்கள் அடக்கப்படும் போது, உழைக்கிற மக்கள் பாதிக்கப்படும்போது ஏன் நீங்க பாதிக்கப்படும்போதும் போராடுங்க.ஆனா பலரும் அதப்பத்தி பேசவே தயாராயில்லை அப்படீங்கற்துதான் உண்மை. நல்லா  யோசிச்சுப்பாருங்க தியேட்டர் வாசல்ல கால்கடுக்க நிக்கத்தெரியுது,

கல்ச்சுரல் புரோகிராம்ல ஆடத்தெரியுது,ஆனா மக்களோட நம்மளோட பிரச்சனயப்பத்தி ஏன் பேச முடியல எது தடுக்குது ?.எது உங்கள மக்களை பத்தி பேசவிடாம தடுக்குதோ அதுதான் உங்கள தியேட்டர் வாசலில நிக்கவும் , உங்க முன்னாடியே கூட வேல செய்யுறவன் ஒரு பெண்ணை பத்தி கிண்டலடிச்சு பேசுனா அமைதியா இருக்கவும் செய்யுது. யோசிச்சு பாருங்க யாருக்காகத்தான் நீங்க வாழறீங்க?அது ஒண்ணுதான் விடுதலையை பெற்றுத்தரும்.அதில்லாம நீங்க செய்யுற எந்த வேலையும் உங்களை அடிமையாக நீடிக்கவே உதவும்.”

அப்பெண் அப்போது பேசவில்லை.பின்வரும் நாட்களில் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.இது நடந்து எப்படியும் ஒன்றரையாண்டுகள் இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன் பேச நேர்ந்த போது கூட அந்த அடிமைத்தனத்தின் சாயல் அவரிடமிருந்து துளியும் விலகவில்லை என்பதனை அவரின் மவுனமே காட்டிக்கொடுத்தது.

ஒரு வேளை மவுனங்கள் தான் அடிமைகளின் ஆசைமொழியோ என்னவோ?

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

ஜனவரி 21, 2009

ndlfmeet2

சனவரி 25, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநாடு,கலைநிகழ்ச்சிகளில் ஏன் பங்கேற்க வேண்டும்?

உலகமயமாக்கலினால்  தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்,ஐடி,பி.பீ.ஒ,ஏனைய தொழிற்சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக பிடுங்கி எறியப்படுகின்றார்கள்.முதலாளி தன் தேவைக்காக நம்மை எப்படியெல்லாம் பயன் படுத்தினான் தற்போதோ நம் உழைப்பு தேவை இல்லை என்பதால் தூக்கிஎறிந்து விட்டான்.பல்லாயிரக்கணக்கான ஐடி பி.பீ.ஒ ஊழியர்கள் இது வரை நீக்கப்பட்டுள்ளனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.குரங்குகளை போல மரம் விட்டு மரம் அதாவது கம்பெனி விட்டு  கம்பெனி தாவுகிறோம்.நூற்று கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலை செய்து என்ன பயன் நமக்காக நமது உரிமைக்காக சங்கத்தை கட்டினோமா என்றால் அது இல்லை.முதலாளிகள் நம்மை வைத்து சம்பாதித்த போது நமது உரிமைகளை அவன் காலடியில் வைத்து விட்டு அவனின் எலும்பு துண்டுக்கு ஏங்கினோம் என்பது தான் உண்மை.
ஏன் இங்கு ஓடி ,பிரச்சினை இல்லையா? நாயைப் போல் கேவலமாக நடத்த்ப்படுவது இல்லையா?பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படுவது தான் இல்லையா? இத்தனை பிரச்சினைகளையும் இவ்வளவு நாள்  ஒதுக்கி வைத்து விட்டோம். இனி எப்படி போராடுவது  எப்படி போராடுவது என கற்போம்.வேறு எங்கு வேலைக்கு போனாலும் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,இன்னும் ஆறு மாதத்தில் 50000பேர் ஐடி,பிபீஓ வில் மட்டும்  பணிநீக்கம் செய்யப்படப்போகின்றனர், இப்படிப்பட்ட நிலைக்கு தான் நம்மை இக்கம்பெனிகள் தள்ளிவிட்டன,நம் திறமைகள் முதலாளியின் தேவைக்காக குழிதோண்டி  தோண்டி புதைக்கப்பட்டன .இப்போது அவனின் தேவைக்காக வெளியேற்றப்பட்டிருக்கின்றோம். தொழிலாளர்களை முடியாக நினைத்து வதைத்த ஜேப்பியாரின் கொட்டத்தை ஒரு சங்கம் கட்டியதாலேயே அடக்க முடிந்தது.அங்கு வெற்றியை வரலாறாக்கிகாட்டிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இம் மாநாட்டில் திரளாய் பங்கேற்போம்..நம்முடைய பிரச்சினக்காக இனியும் போராடாது இருந்தால் வருங்காலம் தற்கொலை பாதைக்கு ஒப்பானதே.
தொழிலாளியாக நாம் இருக்கும் வரை தற்கொலை நமக்கானதல்ல சங்கமாய் ஒன்றிணைவோம் பாட்டாளியாய் போராடுவோம்.தொழிற்சங்க வாதத்தில் மூழ்கி இருக்கும் போலிகளை விரட்டியடிப்போம்.
——————————————————————————————————————-

என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……

வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..

தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……

இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.

————————————————————————————————————————————————————————————————-

முதலாளித்துவ பயங்கரவாதத்தினை பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்) நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

———————————————————————————-

இம்மாநாடு போலிகளுக்கு சாவு மணிஅடிக்க வாழ்த்துகிறோம்

கலகம்

இற்று வீழும் முகமுடிகள்

ஜனவரி 19, 2009

sathyama-copy

இற்று வீழும் முகமுடிகள்

சாயம் பூசும் தேசம்

பல முறை தேசிய விருதுகளைப்பெற்று உழைப்பால் உயர்ந்த உத்தமன்கள் வரிசையில் முன்வரிசையில் முண்டியடித்து கொண்டிருந்த நாமலிஙக ராஜு தப்பை ஒத்துக்கொண்டு வாரம் ஒன்றாகிவிட்டது..கடந்த வெள்ளிகிழமை ராஜுவின் மனுவை விசாரித்த வழக்காடு மன்றமோ தள்ளி வைத்திருக்கின்றது. பத்திரிக்கைகளோ பாவம் ராஜுவும் அவரது சகோதரரர்களும் ஏனைய முக்கிய அதிகாரிகளும் திறந்த வெளி கழிப்பறையில் காலைக்கடனை கழிக்கிறார்கள்.சாதாரண கைதி போலவே நடத்தப்படுகின்றார்,

இப்படி அந்த கிரிமினலின் வாழ்க்கையில் ஏதோ தெரியாமல் நடந்த தவறுக்காக இப்படி ஆகிவிட்டதே என்றபடி நம்மையும் பீலிங்கில் ஆழ்த்துகின்றன. ஒன்றல்ல ரெண்டல்ல எட்டாயிரம் கோடிகளை (கண்ணுக்கு தெரிந்து மட்டும்) அமுக்கிய ராஜு இன்னும் ஊடகங்களாலும் மற்றோர்களாலும் “அவர்” என்று மதிக்கப்படுகிறார்,சாதாரண பிக்பாக்கெட் திருடன் அவன் என்று ஏசப்படுகிறார்.ஏற்கனவே ராஜுவின் மீது பாலியல் சம்பந்தப்பட்ட புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது,அப்போதெல்லாம் அவன் மீது கையை வைக்காத போலீசு தற்போது மட்டும் லாக்கப்பில் தள்ளியது ஏன்?

 ஒரு முதலாளியே தன் தவறை ஒப்புக்கொண்டு விட்டதால் அது கண்டிப்பாய் உண்மையாய் தானிருக்கும்,ஏனெனில் எப்படி டாடா நாட்டுக்காக உழைத்து மிகக்குறைவான லாபத்தில் மக்களுக்காக லட்சரூபாய் கார்தர வந்தாரோ ,அப்படித்தான் இவரும் வந்தார்,ரொம்ப தூரம் வந்தவர் கொஞ்சம் கால்தடுக்கி விழுந்து விட்டார்.அவ்வளவுதான் , “நான் தப்பு செய்து விட்டேன் “அதற்காக சட்டம் த்ரும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளேன்” கடைசியாய் கம்பெனிக்கு எழுதிய கடிதம் இது. ஒரு குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டதால்……………. என இதை எடுத்துக்கொள்ள முடியுமா?

கண்டிப்பாய் முடியாது,சத்யம் டாடா,இன்போசிஸ் மட்டுமல்ல பல சிறு ஐடி பீபீஓ நிறுவனங்கள் தங்களின் கம்பெனியை சந்தையில் வைத்திருக்கின்றன.பங்குகளை அதிகம் வாங்கும் யாரும் அவர் நினைத்த எடுப்பிலேயே கம்பெனியை மூடக்கூட முடியும்,ஒரு தொழிலாளியின் உழைப்பை முதலாளி விற்று காசாக்குகிறான்.அதையே வைத்து தற்போது சூதாடிக்கொண்டிருக்கின்றான். இப்படி சூதாடும் ஆட்டத்தில் அரசு நிறுவனங்கள் பலவும் மக்களின் பணத்தை சத்தியம் டாடா போன்ற நிறுவனத்தில் பங்குகளை வாங்கிகுவித்தன.SBI-n காப்பீடு திட்டத்தின் விளம்பரத்தில் இப்படிவரும்” நாங்கள் தேர்ந்தெடுத்த கம்பெனிகளில் முதலீடு செய்கிறோம்”. தனியார் முதலாளிகள்,அரசு, நடுத்த்ர வர்க்கத்தின் சிறு பிரிவினர் ஆகியோர் சூதாட்ட்டத்தில் குவித்தனர்,ஒரு நிறுவனத்தை பற்றி எதுவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை ,ஆனாலும் நீ காலையில் ஒரு கம்பெனிக்கு பங்குதாரன் பிடிக்க வில்லையா மறுனாள் டிசிஎஸ்க்கு பங்குதாரன்,இப்படி சுற்றும் உலகை விட வேகமாய் சுற்றினார்கள்.

போட்டதை விட பல நூறு மடங்கு தரும் தங்க சுரங்கம் தான் பங்கு சந்தை என்பதை உணர்ந்த முதலாளிகள் என்னைப்பார் என் அழகைபார் என்றபடியே வரவுக்கணக்கை தாறுமாறாய் ஏற்றிக்காண்பித்து அதன் மூலம் பங்கு வருவாய்களை அதிகப்படுத்தினர்.மேலும் போலியாக கம்பெனிகளை உருவாக்கி அதிகமாக வாங்குவதற்கு வரவேற்பு இருப்பதாக செட்டப் செய்தார்கள்.மக்களின் பணத்தை தின்று குடித்த முதலாளிகளோ பல கம்பெனிகளை புதிதாய் உருவாக்கி அதையும் சந்தையில் இறக்கினர்கள்.

இப்படி சூதாட்டம் தேசப்பாதுகாப்பாக மாறியதால் சூதாடிகள் அரசின் பட்டங்களையும் மொத்தமாய் அள்ளினார்கள். இப்படி எல்லாரும் கமுக்கமாய் சுரண்டிக்கொண்டிடுந்த போது தான் அமெரிக்க பொருளாதார சுனாமி வந்தது.அதனால் தான் பங்கு சந்தையில் மாபெரும் தேக்கம் ஏற்பட்டும் ரொம்பவும் மண்மோகன் முன்முயற்சி எடுத்து சாக்கடையின் அடைப்பினை எடுத்துவிட்டதாக கூறினார்.அதையும் மீறி இந்தியாவில் ஐடி பீபீஓ நிறுவனங்கள் மூடத்தொடங்கின. சூதாடிகளோ தங்கள் கம்பெனிக்கு மேக்கப் போட்டு கொள்ளைஅடித்துக்கொண்டே போனார்கள்.

ஒருக்கட்டத்தில் தணிக்கை விசயத்தில் முதலில் மாட்டிய சத்தியம் திடீரன கம்பெனி நட்டத்தில் போவதாக அறிவித்து அதன் தலைவனும் கொள்ளைக்காரனுமான ராஜு “இப்ப என்னபண்ணறது” என்ற படி தெனாவட்டாயிருக்கிறான்.

53 ஆயிரம் பேரின் கதி என்ன என்பது இப்போது பங்கு சந்தை சூதாடிகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படப்போகின்றது.எத்தனை பேர் சாகவேண்டும் என்பதும் செத்தார்கள் என்பதும் காலையில் பங்கு சந்தைப்போல ஏறி இறஙகவும் நேரலாம்.உணவுப்பொருளை வைத்து சூதாடி விலைவாசியை விசம் போல் ஏற்றியது போல் மனித உழைப்பும் பங்கு சந்தையில் ஏற்றப்பட்டு இருக்கின்றது. இது என்னவோ ராஜு மட்டுமே குற்றவாளி இல்லை.இந்த அரசு தான் முக்கிய குற்றவாளி.சூதாட்டத்தில் மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட முதலாளிகளௌக்கு எப்படியும் தண்டனை கிடைக்கப்போவதில்லை,அர்சத் மேத்தா பல்லாயிரம் கோடி ஊழல் செதான் தீர்ப்புக்கு முன்னரே அவன் சொர்க்கலோகம் பத்திரமாக போய்விட்டான்.

அவனால் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னு நரகத்தில் துடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இப்போது சொல்லப்படுகிறதே “சத்யத்துக்கு அரசு 2000 கோடி த்ர வாய்ப்புண்டு ” என்ற இது கூட 53 ஆயிரம் பேருக்காக இல்லை. அண்ணிய செலாவணி மேற்கொண்டு வரவேண்டும் ஐடி பீபீஓ கம்பெனிகள் தங்கு தடையின்றி நாட்டையே சுடுகாடாக்கவேண்டும் அதுதான் இப்போதிருக்கும் காங்கிரசுக்கும் பீஜேபி போலிகள் உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளின் எண்ணம். மக்களின் பணத்தை இந்த நாய்கள் பிச்சையாய் அல்ல உரிமையாக கேட்கிறார்கள் எப்படி அமெரிக்காவில் செய்தார்களோ அதையே இங்கேயும் கோருகிறார்கள்.மக்களின் பணத்தில் வரிசலுகைகள் அவர்களின் நிலஙகளை பறித்து லட்சக்கணக்கானோரை கொத்தடிமையாக மாற்றிவிட்டு தன்னுடைய சொகுசுக்கு குறவு வந்து விடக்கூடாது என்பதற்காக மக்களை சாகவும் சொல்கிறார்கள். இதைத்தான் டாடா,இன்போசிஸ் நாரயணன் மூர்த்தி மற்றும் ஏனைய கம்பெனி கிரிமினல்களும் அரசின் ஆசியுடன் மேற்கொள்கின்றனர். தேவையென் ஆட்குறைப்பு நடவடிக்கை , தன் தேவைக்காக வேலையில்லா கூலிப்பட்டாளத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த விலைக்கு அடிமைகளை உருவாக்குதல் போன்றவை ஒரு முதலாளி மனசை கல்லாக்கிக் கொண்டு செய்யும் காரியங்களாக சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் ஒரு முதலாளி எல்லாம் திட்டம் போட்டே அடிமைகளை உருவாக்குதலையும்,ஆட்குறைப்பையும் மேற்கொள்கிறான். அப்போது தான் அவன் முதலாளியாக நீடிக்க முடியும். கண்ணா இது தான் டிரைலர் முழுப்படத்த பார்த்த….. இப்போது ராஜுதான் ஆரம்பமே இன்னும் பலரின் முகமுடிகள் இற்று விழ ஆரம்பித்து விட்டன,அவை கண்டிப்பாய் தேசத்தின் சோகமான முடிவுகளாக காட்டப்படும்,அம்முதலைகளின் கண்ணீருக்கு பதிலாய் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்படும் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் வேரோடு பிடுங்கப்பட்டு எறிபப்படும்.

கடந்த சனியன்று ராஜு இருக்கும் சிறைக்கு வெளியில் பூங்கொத்து கொடுத்து வைத்து அவர் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக சூதாடிகள் ஆணவமாய் சொல்லுகிறார்கள்.இனியும் அமைதியாய் இருந்தால் கண்டிப்பாய் அரச பயங்கரவாதிகளும் முதலாளித்துவ பயங்கரவாதிகளும் சாயம் பூசுவார்கள் நம் கல்லறைகளுக்கு. மார்க்ஸ் சொன்னாரே”இழப்பதற்கு ஏதுமில்லா வர்க்கம்” என்று அந்த தொழிலாளி வர்க்கத்தால் மட்டும் தான் இந்த பாசிசப்பயங்கர வாதிகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் அவர்களுக்கு கல்லறை கட்டமுடியும். நாம் பாட்டாளிகள் என்பதை நாங்கள் முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டோம்.

என்னருமை ஐடி பீபிஓ ஊழியனே அடிமை வர்க்கமா இல்லை ? இல்லை தொழிலாளி வர்க்கமா?முதலாளிய பயங்கர வாதத்துக்கு கல்லறை கட்டப்போகிறாயா இல்லை உனக்கு நீயே சாவு மணி அடித்துக்கொள்ளப்போகிறாயா நீயே முடிவு செய் முடிவு உன்கையில்.

டிசம்பெர் 25 முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு கல்லறை கட்டுவோம்.வர்க்கமாய் ஒன்றிணைவோம்.

B.P.O அடிமை .காம் பகுதி-3,அடிமைகளின் சொர்க்கம்

திசெம்பர் 28, 2008

B.P.O அடிமை .காம் பகுதி-3
அடிமைகளின் சொர்க்கம்

டிசம்பர் மாதம் என்றாலே  பீபிஓ கம்பெனிகளில் ஜாப் வரத்து வெகுவாக குறைந்து விடும்.கிறிஸ்துமஸ் முடியும் வரை அதிக ஜாப்கள் வராது. அந்த மாதம் கூட சரியான நேரத்துக்கு எங்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். பக்கத்து டீம் ஜாப் ஐ வாங்கி செய்ய சொல்வார்கள்.

இன்னைக்கும் பக்கத்து டீம் ஜாப் ஐ  வாங்கி செய்யசொல்லிட்டானுங்க.மெதுவாக செய்ய ஆரம்பித்தேன் மணி பனிரெண்டுதான் ஆகுது .காலையில வந்த வுடனே டி.எல் கிட்டேசொன்னேன்”இன்னைக்கு பர்மிசன் வேணும்” பார்க்கலாம் ஜாப் வரத்தை பார்த்துட்டு சொல்லுறேன். கடந்த ரெண்டு மாசமா நான் பர்மிசனே போடவில்லை,இது தான் கடைசி வாரம் இப்போ போடலேன்னா 3 வது மாசம் ஆயிடும்.இன்னும் டி.எல் வரலை.அவரு பிரேக் போனாலே எப்படியும் 1 மணி நேரம்  ஆயிடும்.  கதைஅடித்துக்கொண்டு இருந்தோம்.

நான்  “எங்க தாத்தா ராஜராஜ சோழன்கிட்டே படைத்தளபதியா வேலைசெஞ்சாரு” கதை விட்டேன்.உடனே ஒருவ்வர் சொன்னார்”ந்£ங்க என்ன கம்யூனிட்டின்னு சொல்லுங்க உண்மையா பொய்யான்னு  சொல்லுறேன்”.
மிகவும் சாதரணமாக மற்றவர்கள் இருந்தார்கள். “எனக்கு என்ன சாதின்னு தெரியாது ஆனா ஒண்ணுமட்டும் தெரியும் பாப்பான் தான் தான் நம்மையெல்லாம் வைப்பாட்டி மக்களா மாத்தினான்.என்னோட சாதிய நான் சொன்னேனா  அவன் சொன்னது உண்மைன்னு ஆயிடும்” என்றேன்.அருகில் இருந்த சுரேஷ் “சும்மா அதையே சொல்லாதீங்க எந்த பாப்பான் உங்களை படிக்கவேண்டாமுன்னு சொன்னான்,திமிரெடுத்துப்போயி நீங்க படிக்கலேன்னா அதுக்கு அவனா பொறுப்பு அவன் பாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான் அவனை புடிச்சு ஏன் நோண்டுறீங்கதிமுக ஆட்சியில முதலியாருங்க எல்லாம் எல்லாம் வளந்தாஙளே அப்புடி எந்த பாப்பான் பணக்காரனா இருக்கான்? என வெடித்தார். “அப்புடியா எல்லாம் முதலியாரு பணக்காரனாயிட்டான்னு சொல்லுறீங்களே எங்க ஊரில் பக்கம் கஞ்சி தொட்டி திறந்தப்ப  கியூ வுல நின்னது முக்காவாசி  அவுங்க தான் திமுக ஆட்சியில இருந்தப்ப கூட சிலபேர் பொறுக்கி தின்னுறுப்பான் அதுக்காக முதலியார் சமூகமே முன்னேரிடுச்சா என்ன?சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன்  பாதிப்பேர் தன் கண்களில் எனக்கு ஆதரவாய் பார்வை பார்த்தனர். மற்றொரு பெண் ஊழியரோ “எங்க சாதியில கூட அப்ப்டி இருக்காங்கன்னு சொன்னா நான் கோபப்பட மாட்டேன் அப்படியும்கூட பன்னலாம்”சந்தடி சாக்கில் தான் ஆதிகக சாதி என்பதை எடுத்துவிட்டார்.  அதற்குள் மதிய உணவுக்கு சென்றோம்.

சாப்பிடு போது கூட கடுமையான விவாதம் நானும் சுரேஷ¤ம் பேச அருகிலிருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
உங்களை எந்த வகையில முன்னேற்றத்தை  தடுத்தாங்க? .”தமிழகத்தில எதனை கிராமத்தில ரெட்டை குவளை முறை இருக்குன்னு தெரியுமா.வயதான தலித்தை கூட் மேல்சாதிகாரன் பயன் வாடா போடான்னு கூப்பிட்டு பார்த்து இருக்கீங்களா?”
எல்லாம் பார்த்து இருக்கோம் அப்புறம் என்னா இதுக்கு அவன் அங்கே இருக்கான் வேற இடத்துக்கு போக வேண்டியது தானே ரசிகர் மன்றம் வைக்கின்றது யார் ? கள்ளச்சாராயம் குடிக்கிறது யார் ? தலித்துங்க தானே முதல்ல தன் முதுகுல இருக்குற அழுக்க துடைச்சுட்டு வரசொல்லுங்க என்னமோ தலித்து எல்லாம் யோக்கியம் மாதிரி பேசுறீங்க,உமா சங்கர் என்ன சாதின்னு தெரியுமா அவரு படிச்சு முன்னேறுல இவனுக எல்லாம் சோம்பேறி”என்றார்.சற்று நேரத்துக்கு முன் எனக்கு ஆதரவாய் இருந்த கண்கள் எல்லாம் இப்போது சுரேஷ் பக்கம் சாய்ந்திருந்தது. நான் தீர்க்கமாய் சொன்னேன் எல்லோரு ரசிக்குறாங்களே இளையராசா அவரு ஊருக்கே ராசான்னாலும் பண்ணைபுரத்துல அவரு சொந்தக்காரனுக்கு ரெண்டாவது டம்ளர் தான் அதை விடுங்க மேல்சாதி மேல்சாதி
ந்னு பீத்திக்கிறீங்களே உன்னை ஏன் கோயிலுக்குள்ள மூலஸ்தானத்துக்குள்ள விட மாட்டேங்குறான் கேட்டா அது அவன் சுத்தமானவன் சொல்லுவீங்க ஏன் நீ உன் குடும்பத்துல யாருமே சுத்தம் இல்லையா ? இவ்வலவு ஏன் ஐஐடியில மாடுமேய்க்குற பயலுக வந்தா படிப்போட தரம் குறையும்னு சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துனானுங்களே அப்பமட்டும் உங்களோட எல்லா வாயையும் மூடிக்குறீ………….   நேரம் ரொம்ப ஆகிவிட்டது .கைகள் காய்ந்திருந்தது.
மீண்டும் வந்து வேலையை தொடர்ந்தேன் டி.எல்  பக்கத்து டீமிலிருந்து வாங்கி நிறய ஜாப் கொடுத்தார்.எல்லாம் முடித்தேன்.கைகள் வேலை செய்தாலும் மனமோ சரியா பதில் சொன்னோமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றது.என்ன செய்யலாம் ஆபிஸ்  விட்டவுடனே சுரேஷ் கிட்ட நிறய பேசனும் அவன் எப்படி யெல்லாம் கேள்விகேப்பாருன்னு மனதுக்குள்ளயே யோசித்து பதிலும் சொல்லிப்பார்த்தேன். இந்த யோசனையில் பர்மிஸன் கேட்டதை மறந்து போனேன்.மணி 4.30 ஆனது கிட்டதட்ட இது 6 து முறை சரியான நேரத்துக்கு கிளம்புவது. திரும்பி பார்த்தேன் சுரேஷ் சென்று கொண்டிருந்தார்.ஓடிப்போய் அவரோடு நடக்க ஆரம்பித்துவிட்டேன்.எதேச்சையை அவரின் கையை பார்த்தேன் கையில் கேடயம் வாள்  மற்றும் தனியாக மீன் பச்சை குத்த்ப்பட்டு இருந்தது.இந்த சின்னத்தை   எங்கேயோ பார்த்த   நினைவு, அவர் ஆரம்பித்தார்” நானெல்லாம் எங்க சாதிக்காக எத்தனை கேஸ் விழுந்திருக்குன்னு தெரியுமா தஞ்சாவூரில ஒருத்தனை ஓட வீட்டு குத்துனேன் எதுவும் வேண்டாமுன்னு விட்டுட்டு வந்துட்டேன்
எனக்கு பி சிகளை கண்டாவே புடிக்காது.எங்க ஊர் தஞ்சாவூர் மன்னாகுடி அடுத்த கிராமம் பிசிங்க அடிச்சா திருப்பி அடிதான்.சுத்தி 108 கிராமம் இருக்குது எங்க ஊர் மாதிரி எங்கேயும் இல்லை  நான் ஸ்டேட் கபடி பிளேயர் பக்கது ஊரில எங்க டீம் போனாலே பைனலில பிராடு பண்ணி தோக்கடிச்சுருவானுங்க தான் ஆதிக்க சாதியிடம் எப்படியெல்லாம் அடிப்பட்டதை விவரித்தார். கிண்டி ரயில்வே ஸ்டேசனில் உட்கார்ந்த படி பேசிக்கொண்டிருந்தோம்.என்ன தான் தீர்வு என்றேன் . நான் வரலை மற்றவனும் வரவேண்டியது தானே எல்லோரும் படித்தா சாதி ஒழிஞ்சுடும்” சொல்லிவிட்டு நேரமாச்சு என்ற படி கிளம்பினார்.

 நான் யோசித்தேன்”ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து இப்படி அம்மக்களுக்கே எதிராக பேச வைப்பது எது? ஒருவேளை அவர் அதிகமாய் பாதிக்கப்பட்டதால் இப்படி பேசுறாரோ.மறு நாள் காலையில் டீ பிரேக்கின்போது மீண்டும் ஆரம்பித்தது சுரேஷ் பேச ஆரம்பித்தார்”என்ன விவசாயம் பண்ணுறாங்க மாடர்ன் உலகத்துல அமெரிக்காவுல எப்படி முன்னேறுறானு பாக்குறத விட்டுட்டு  இன்னும் நிலத்தை புடிச்சு தொங்குறானுங்க என ஆரம்பித்து  நேத்து  போல்  தாழ்த்தப்பட்டோர் மீது சேற்றை வாரி இறைத்தார்.
 நானும் பதிலுக்கு பேசினேன் பிறகுதான் புரிந்தது இவன் பாதிக்கப்பட்டதால் பேசவில்லை அடிமைப்புத்தி அவனை பேச வைக்கின்றது
நாலு பேர் இருக்கும் போது தன்னை மேல்சாதியாக காட்டிக்கொள்வது தனியே என்னிடம் பேசும் போது தலித்தாக காட்டிக்கொள்வது என தன் பச்சோந்தி தனத்தை காட்டிக்கொண்டு இருந்தான். இவனின் தேவை எல்லம் தன்னை மற்றவர்கள் ரசிக்கவேண்டும் என்பது தான்.

நான் வெறுத்துப்போனேன் இப்படியும்  ஒரு மனிதனா? பிரேக் முடிந்து வரும் போது நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள் “New year celebration contest ” நடனம் பாட்டு என சகல கலைகளும் அடங்கியிருந்தன. டி.எல் சொன்னார்   எல்லாத்துலேயும் கலந்துக்கோங்க.என்னோட டீம் -ல் இது சம்பந்தமாக பேச ஆரம்பித்துவிட்டேன். நை ஷிப்ட்க்கும் ஓடிக்கும் அலவன்ஸ் தரதில்ல போட்டி வக்குறானுங்களாம் போட்டி.என் டீமிலிருந்த பெண்ணை கேட்டேன்” நீங்க கலந்துக்க போறீங்களா” ” நல்லா டேன்ஸ் பண்ணுவேன் ஆணா வேண்டாம்” என்றார்.
மூன்று நாட்கள் போனது  நடன போட்டிக்கு இன்சாஜ் இருவர் மணிக்கொருதரம் வந்து சொல்லிக்கொண்டே இருந்தனர் அப்பென்ணிடம்”கலந்துக்கோங்க”.கடைசியாய் விபி வந்தார் என்ன கேர்ள்ஸ் யாரும் கல்ச்சுரல் புரோகிராம்ஸ்ல கலந்துக்கவே இல்லீயா ஏன்? எல்லாம் பேர் கொடுத்துருங்க சரியா ?சொன்னவுடனே பணிபுரியும் பெண்களில் பாதிபேர் பேரை கொடுத்தார்கள் என் டீமிலிருக்கும் பெண் உட்பட. மாலை 6 மணி ஆனது  திடீரென நிறைய ஜாப் வந்திருந்தது செய்து கொண்டிருந்தோம்.ஒருவர் லைட்டாக  என்னிடம் கேட்டார்” நீங்க இந்த புரோகிராம் பத்தி என்ன  நினைக்குறீங்க?”

மெதுவாய் சொன்னேன் ” சொறி நாய்கள் ஆடுகின்றன வெறி நாய்கள் வேடிக்கை பார்க்கப்போகின்றன” அவ்வளவுதான் ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் ” எப்படி சொல்லலாம் ,இதை ஏன் ஒரு எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் ஆக நினைக்ககூடாது,டேன்ஸ் ஆடுற எல்லாரும் கீழ்த்தரமானவங்களா? அந்தப்பெண் சொன்னார்” நடனத்திறமை எங்கிட்ட இருக்கு இதை எப்படி கேவலமா சொல்லலாம் என்றார் மூக்கு விடைத்தபடி.

” அதாவதுங்க நீங்க எங்க வேணும்னாலும் ஆடலாம் இங்கே எதுக்கு ஆடறீங்க உண்மையாலுமே நடனத்து மேல அவ்வளவு பற்று அப்படீன்னா நான் சொல்லுற இடத்துல மக்கள் பிரச்சினைக்காக ஆடறிங்களா. நீங்க சொல்லுற  எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ்  அப்படீங்குறது இப்ப எதுக்கு பயன் படுதுன்னு சொல்லுங்க மற்றவரிடமிருந்து தன்னை வித்யாசப்படுத்தி காட்டறதுக்குதானே.அதுக்கு பல வழிமுறை இருக்கு எந்த வழியா தன்னை வெளிப்படுத்துறீங்க என்பதுதான் முக்கியம்.நான் சொல்லுற இடத்துல மக்கள் பிரச்சினைக்காக ஆடறிங்கன்னா யாரும் உங்களை கேலிப்பொருளா பார்க்க மாட்டாங்க ஒருவேளை போலீசு அடிகூட கிடைக்கலாம் நீங்க் தயாரா.ஆனா இங்க எப்படி?  ஓடி பார்த்தா பணம் கிடையாது, நைட் ஷிப்ட்ல food கிடையாது தினமும் ஓ.டி ஓ.டி ன்னு நம்மள ஓடவச்சுட்டானே அதுக்கு ஆடறீங்களா அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு?ஸ்கூல்,காலேஜ்ல ஆடறதுக்கும் ஆபீஸ் ல ஆடறதுக்கும் வித்யாசம் இருக்கு நீ நேரடியா பாதிக்கப்படுறயா இல்லையா? இதுக்கு எல்லாம் சம்மதம் சொல்லி தான் ஆடறீங்களா. அப்படித்தான் மத்தவங்களுக்காக என்னை எல்லோரும் ரசிக்கணும்கறதுக்காக ஆடுவேன்னு சொல்லுங்க அதை விட்டுட்ட்டு  நடனத்திறமை அது இதுன்னு கதை அளக்காதீங்க.ஆனா ஒண்ணு இங்க நீங்க ஆடறது மூலமா தொழிலாளியான நீங்க கேள்வி கேட்குற உரிமையைஇழந்து அடிமையா மாறுவீங்க என்பது மட்டும் நிச்சயம்.”

ஒரு வாரம் கழிந்தது  function க்கு நாளும் இடமும் குறித்துவிட்டார்கள்,ஆரம்பத்தில் போககூடாது என நினைத்த நான் கோமாளிகள்
என்னதான் செய்கிறார்கள் என்பதற்காகவே சென்றேன். நான் போவதற்கு பல  நேரம் முன்னே நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டார்கள், நான்  போகும் போது  சுரேஷ் ஆடிக்கொண்டு இருந்தார்.அடுத்து அந்தபெண் கும்பலாக ஆடியது.ஜோக் என்று சொன்ன படி எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான் உம்மனாமூஞ்சியாகவே இருந்தேன்.இறுதியாக பேசிய பிரசிடெண்ட்”அடுத்த வருசம் நிறய ஜாப் வரும் எல்லோரும் அதிகமா ஓடி பார்க்கவேண்டிவரும் இந்த function  ஒரு புத்துணர்வு தான் இந்த வருசம் வேலை செஞ்ச மாதிரி அடுத்த வருசம் 10 மடங்கு வேலை செய்யனும் சரியா லெட்ஸ் என்ஜாயென்றார்”  வுடனே விசில் பறக்க அடுத்த  பாட்டு ஆரம்பித்துவிட்டது.அவன் வெளிப்படையாகத்தான் சொல்கிறான்.இவர்கள் தான் தொழிலாளி என்பதை மறந்து அடிமைகளாய் வரிசையில் நிற்கிறார்கள்.அதற்குமேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை அவசராவசரமாய் வெளியேறினேன்.ய்யரு என்னை கவனிக்கவில்லை.அடிமைப்போதையில் ஆடிக்கொண்டிருப்போரால் எதையும் கவனிக்க முடியாது ஆண்டானின் கட்டளையை தவிர.

B.P.0.அடிமை.C0M- பகுதி2அடிமைத்தனமே சுவாசமாய்

நவம்பர் 23, 2008

B.P.0.அடிமை.C0M- பகுதி 2
அடிமைத்தனமே சுவாசமாய்

வழக்கம் போல  அலுவலகத்துக்கு ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தேன்.என்னருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார்.”நீங்க எங்க வேலை செய்யறிங்க”.நான் விளக்கினேன்.அவர்” இப்படி தினமும் இத்தன பேர வேலயவிட்டு தூக்கறாஙளே என ஆரம்பித்தவர்.அமெரிக்க சந்தை சரிவு ,ஒரு சங்கம் அமைத்தால்….. என இழுத்துக்கொண்டே போக நானிறங வேண்டிய இடம் வந்தது.அலுவகத்துக்கு நடக்க ஆரம்பித்தேன்.மனதில் பல யோசனைகள்.போன மாதம் தான் நோட்டிஸ் போர்டில் ஒட்டினார்கள்.இனி யாருக்கும் வாகன வசதி கிடையாது(கேப்) .நை ஷிப்ட் உட்பட பணிபுரியும்  யாரும் தங்கள் சொந்த பாதுகாப்பிலேயே வரவேண்டும்.

B.P.0 மற்றும் ஐ.டிக்கு நிறைய வித்யாசமிருக்கின்றது.இங்கு ஒரு நாளில் ஏத்தனை ஜாப் செய்கின்றோம் என்பதுதான் கணக்கு..என் மானேஜர் சொன்னர்” நீங்க 20 மணி நேரம் கூட வேல செய்யுங்க அதப்பத்தி யாரும் கவலைப்படமாட்டங்க.குறைந்த நேரத்தில் அதிக ஜாப் செய்ய பழகிகோங்க.”

நிறைய ஜாப் வந்துவிட்டதெனில் எல்லவற்றையும் முத்துவிட்டு தான் செல்ல வேன்டும்.6 மணிக்கு வேல முடியும் நேரதில் 3 மணிநேரத்துக்கு ஜாப் போட்டுவிட்டு டீம் லீடர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். மாதம் ஒரு முறை மீட்டிங் ,கடந்த மாத மேடிங்-ல் மானேஜெர்கள் சொன்னர்கள் ” அப்புடித்தான் தினமும் 2 (அ) 3 மணிநேரம் அதிக நேரம் வேலை செஞுதான் ஆகணு. தேவையின்னா இங்க இரு இல்லேன்னா போய்க்கிட்டே இரு .உனக்கு  தர்ற 10000 சம்பளத்துக்கு 5000 க்கு ரெண்டுபேர் தயாரா இருப்பாங்க.இன்னொரு ஊழியர் சொன்னர்” சார் தினமும் இங்கயிருந்து கிளம்பவே 9 மணி ஆகுது  வாரத்துக்கு ஒரு மறைதான் குழந்தைகளை பார்க்கமுடியுது.எம் பையன் என்கிட்ட சரியாக்கூட பேச மாட்டென்கிறான்.” அதுக்கு என்ன பண்றது சேகர் வேலைன்னா அப்படித்தான் இருக்கும்.” சொல்லிவிட்டு போனார்கள்.

அலுவலகத்துக்குள் சென்றேன்.எல்லோரும் எதோ ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.கம்பூட்டரை போட்டு விட்டு என்னவென்று விசாரித்தேன்.நேற்று நைட் ஷிப்ட் வந்தவ்ர்களிடம் ஓவர் டைம் பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கின்றார்கள்.காலையில் 6 மணிக்கு எல்லோரும் சிஸ்டத்தை ஆப் செய்து விட்டு கிளம்பிவிட்டார்கள்.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.எங்கள் கம்பனி வரலாறிலேயே முதல் ஸ்ட்ரைக்

மதிய உணவு இடைவேலைக்கு முன் அறிவிக்கப்பட்டது.இன்று மாலை அவசர மீட்டிங் என்று.இடைவேளை போது பலரும் பேசினார்கள்”என்ன கேக்கட்டும்.நான் பேசுற பேச்சுல  நீ யாருன்னு என்னை தெரிஞ்சுக்குவீங்க” மீட்டிங் அறையில் வழக்கம் போல சவால் விட்டவர்கள் பேசவில்லை.மீண்டும் தலைமையிடமிருந்து மிரட்டல்.காலையில் தூக்கியிருந்த காலர் அதற்குள் தொங்கிவிட்டது.

அந்த வாரம் முடிந்து அடுத வாரம் நைட் ஷிப்ட்-ல் நான்.ஒருவர் சொன்னார் இன்னைக்கு கண்டிப்பா ஓ.டி.பார்க்க சொன்னா கிளம்பிவிடலாம்.எனக்கு மணி 5 ஆகும் போதே சந்தோசம்.மணி முள் மீது திட்டு விழுந்து கொண்டிருந்தது. மணி 6 ஆனது வேலையோ இன்னும் 2 மணி நேரத்துக்கு அதிகரிக்கப்பட்டது.யாரும் கிளம்பவேயில்லை,கரெக்ட்டா 6 மணிக்கு கிளம்பிடுவாங்களா என்ன ,மணியோ ஆறரை தாண்டியது.

சொன்னவரிடம் கேட்டேன் ” என்ன கிளம்பலீயா”எவனும் வரமாட்டான்”.என்றார்.
அவ்வா முழுக்க இடைவேளையில் நாயகனானவர்கள்.ஓ.டி போது மவுனமானார்கள்.

அடுத்த வாரமும் வந்தது H.R. வந்தார் ” உங்களுக்கு work load  கொஞ்சம் அதிகம் தான் அதனால தான்……” புதுசா ஆள் எடுக்கப்போறாங்களா” இது நான். அவர் தொடர்ந்தார்.அதனால  எல்லாரும் இந்த வாரம்  எக்ஸ்கர்சன் போகப்போறோம்.வெஜ் ஆர் நான் வெஜ் food code உங்க டி.எல்.கிட்ட சொல்லுங்க

நான் எனது டீம்-ல் உள்ளவர்களிடமும் ,பக்கத்து டீம்- உள்ளவ்ர்களிடமு இப்படி சொன்னேன்.” எதுக்கு டூர் ஓ.டிக்கு பணம் இல்லையே அதுக்கா,கேப் கட்பணிணானே  அதுக்கா,மனுசன்னா சொரணை வேன்டும் நாய்க்கு பொறை நமக்கு டூரா?.தனிதனியாய் பேசினேன்.சுமார் 20 பேர் போகமாட்டேன் என்றார்கள் .அடுத்த நாள்  லீடர் கேட்டார் என்னப்பா பேர் சொல்லவேயில்லை” நான் வரலை சார். பரிட்சை இருக்கு” பொய் சொன்னேன். அருகிலிருந்த்வன் கேட்டான் சார் தண்ணீ இருக்கா? நாட் அலவுட் என்ற படியே கண்ணடித்தார்.

இல்லை நான் போக மாட்டேன் என்றார்கள் பேரை கொடுத்துவிட்டு.சண்டே வந்து விட்டு போனது.எல்லோருக்கும் மெயில் வந்தது.னேத்து நடந்த டூர் போட்டோ,வீடியோ மெயின் சர்வரில் உள்ளது என்றார்கள்.கண்டிப்பாய் 10 பேராவது போயிருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த வீடியோவை பார்த்தேன்.அதில் ஆண்,பெண் பேதமில்லாமில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப சாதுவாய் ஒரு பெண் இருக்கும்.அதுகூட குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.மப்பில் பலர் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ஸ்டிரைக்-ஐ நடத்தினேன் என்றாரே அவர் உட்பட..எனக்கு உடம்பெல்லாம் வெப்பாம் ஏறியது.அந்த சாதுப்பெண் என்னிடம் கேட்டார்”நீங்க வரலை?” நான் பதிலேதும் கூறாமல் அமைதியாயிருந்தேன்.

எனக்கு மாபெரும் உண்மை விளங்கியது.இங்கு பலரும் தன்னை நுகர் பொருளாக்கிகொள்ளவே விரும்புகிறார்கள்.இடுப்புக்கு கீழே பேண்ட்,தலையை சிரைத்துகொள்வது என தன்னால் முயன்றதனைத்தையும் செய்கிறார்கள்..அதன் மூலமே தன் இருப்பை உயர்த்திகொள்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறதே.2000,1000 என பி.பீ.ஓ-ல் வேலையை விட்டு தூக்கப்படுவதாக.ஏன் அவர்கள் இணைவதில்லை.இணையவேண்டுமெனில் ஐக்கியம் தேவை ,நாளை நீ தூக்கப்படுவாய் என சொல்லிப்பாருங்கள் ,எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்கள்.
ஒற்றுமை இப்படி எச்சில் இலைக்கு அலைந்து கோண்டிருந்தால் கிடைக்காது.உரிமைகளை மீட்டெடுக்க
சங்கம் தேவை.அது கண்டிப்பாய் நாக்கை தொங்கப்போட்டு கொண்டிருப்பவனால் முடியாது.
நாங்கள் நுகர் பொருளாய் இருக்கும் வரை எங்கள் வாழ்வு சவக்குழிக்கானதாகவேயிருக்கும்.