பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை – முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு

பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை

முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு

“சிறுதுளி” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கோவையில் வனிதா மோகன் என்ற முதலாளி நாட்டு மக்களின் மீது திடீர் கரிசனம் வந்து நாட்டை மாற்ற அதனை முன்னேற்ற ஒரு தன்னார்வ நிறுவனத்தை தொடங்கினாராம். பல கோடிகளில் புரளும் இந்த இந்த சிறு துளிக்கு பணம் பிரிக்காலில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமிருந்தும் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி பெறப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு முதலாளியால் சிறந்த மனிதராக இருக்கமுடியுமா? முடியும் என்றவாறு தான் பொள்ளாச்சி மகாலிங்கம் முதல் வனிதா மோகன் வரை வேசம் கட்டிக்கொண்டி திரிகிறார்கள். ஆனால் என்ன செய்வது அரிதாரங்கள் தான் பல நாட்கள் நீடிப்பதில்லையே. இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகளின் உண்மைமுகம் டார் டாராய் கிழிந்து தொங்குகிறது. இல்லையில்லை நான் யோக்கியன் என்றபடி ஒப்பாரிவைத்தாலோ அல்லது சபதம் போடும் காலம் எல்லாம் மலை ஏறி விட்டது , வனிதா அறிவித்துவிட்டார் கோவையில் இனி எந்த முதலீடும் இல்லை.

முதலாளியே சொல்லிவிட்டார் தாங்குமா அரசு அய்யய்யோ சாமீ தெரியாம தப்பு நடந்து போச்சு என்றவாறு போலீசு படைகள் ஆலையின் வாசலில் குவிக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கிமுனையில் அரசும் முதலாளித்துவமும் சொல்லித்தருகின்றன நீ தொழிலாளி இல்லை அடிமை, உனக்கு உரிமை கிடையாது, அதை மீறினால் உனக்கு வேலை கிடையாது.

கோவையின் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள பிரிக்கால் என்ற நிறுவனத்தில் மூன்றாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.அவர்கள் அந்த ஆலையினால் கடுமையாகவும் கொடூரமாகவும் கசக்கிப்பிழியப்பட்டார்கள். அங்கே சில தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அந்த துரோகத்தலைமைக்கு எதிராக தொழிலாளர்கள் புதியதோர் தொழிற்சங்கத்தை தொடங்கினார்கள் அதுதான் ஏஐசிசிடியூ. இது சிபிஐ(எம்.எல்) liberationஇன் தொழிற்சங்கமாகும். இச்சங்கத்தில் சுமார் 90 % தொழிலாளர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இது வரை இச்சங்கத்துக்கு நிறுவனத்தால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

மேலும் சிறு துளி அமைப்பிற்காக கட்டாயமாக தொழிலாளர்களின் 1 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது அவர்களின் அனுமதி இன்றியே. ஊரை அடித்து உலையில் போடும் முதலாளிகள் இப்படித்தான் கடைத்தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து நல்லபேர் வாங்கிக்கொள்கிறர்கள்.

சுமார் ஈராண்டுகளாக தொழிலாளர்கள் தங்கள்பிரச்சினைகளுக்காக போராட்டத்தினை பல வடிவங்களில் எடுத்தனர்.சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய போராட்டத்தை சீர்குலைக்க பல வகையில் முயன்று தோற்றுப்போன நிர்வாகம் தொழிற்சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டிய நிர்பத்தத்தில் மாட்டிக்கொண்டது. சென்ற ஆண்டில் நடைப்பெற்ற போராட்டத்தின் முன்னணியாளர்கள் 40 பேரை தனியாக பிரித்த ஆலை நிர்வாகம் அவர்களை தனியாக புதிதாக ஆரம்பித்த யூனிட்டுக்கு மாற்றியது. பின்னர் சில மாதங்கள் கழித்து அந்த ஆலையில் உற்பத்தியை குறைத்து நட்டமென்று சொல்லி ஆலையை (அதாவது அந்த யூனிட்டை) மூடிவிடுவதாக அறிவித்துஅனைவரையும் பணி நீக்கம் செய்து விட்டது நிர்வாகம். அதற்கு எதிராகத்தான் கிளர்ந்தெழுந்தனர் தொழிலாளர்கள்.

பல கட்ட போராட்டங்களுக்குப்பிறகு மசியாத அந்த நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ பண்ணையின் காவல்காரனான மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப்பின்னர் உயிரிழந்திருக்கிறார். தற்போது ஆலையில் ஆயிரக்கணக்கான போலீசார் காவல் காக்கிறார்கள் தொழிலாளர்கள் சரியாக வேலையை மட்டும் செய்கிறார்களா என்று.

மேலும் அந்நிறுவனத்தில் பிரச்சினையை யாராவது ஏற்படுத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமென மாவட்ட எஸ்பி அறிவித்திருகிறார். ஆலையின் நிர்வாக இயக்குனர் வனிதா மோகனோ அமைதியாக இருந்த தொழிற்சாலையில் திட்டமிட்டே ஏஐசிசிடியூ பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகிறார். அக்குற்றங்கள் 1. 5 ஆண்டு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு 2.தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் என ஆசை. மேலும் அவர்கள் போராட்டத்தில் குதிக்க அச்சங்கமே காரணமென்றும் ஜார்ஜை கொன்றதோடு மட்டுமல்லாது பல உயரதிகாரிகளின் உயிருக்கும் அச்சங்கம் ஆபத்தாயிருக்கிறது என அறிவித்திருக்கிறார்.

90 கோடி நட்டமடைந்து விட்டதால் இனி கோவையில் எந்த முதலீடும் கிடையாதென சொல்லி முதலாளியை, அவனை நம்பித்தான் தொழிலாளியென மிரட்டியிருக்கிறார். இப்பிரச்சினையில் முக்கியமாக கூறப்படுவது ” என்னதான் இருந்தாலும் ஹெச் ஆரை கொன்னது தப்பு, அது மனித உயிரா பாருங்க ஏன் முதலாளியோட கையாளா பார்க்கறீங்க” கண்ணீரில் கூட இருக்கும் வர்க்கம் உயிரில் இருக்காதா என்ன? இந்த ஜார்ஜ் உண்மையியிலே யோக்கியனா? அவருக்காக மக்கள் கண்ணீர் வடிக்க வேண்டுமா? தொழிலாளிவர்க்கம் முதலாளிவர்க்கத்திடம் செய்த தவறுக்காக பாவ விமோசனம் பெறவேண்டுமா?

ஏற்கனவே இருந்த மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் தொழிலாளர்களின் பிரச்சினையால் ஓடிப்போய்விட கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நம்ம கதாநாயகனாக சித்தரிக்கப்படும் ஜார்ஜ் துணிந்து வந்தார். தொழிலாளர்களை அடிமையாக்கியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு வந்தவர் கடைசியில் தன் வாயில் துணிக்கட்டிக் கொள்ள வேண்டிய நிலை. மூன்று மாதத்தில் அதாவது செப்30க்குள் தொழிற்சங்கத்தை ஒழித்துக்கட்டுவேனன சபதம் போட்டு கடுமையாக தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி துவம்சம் செய்தவர் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். முதலாளிவர்க்கத்துக்காக ஓயாமல் குரைத்துக்கொண்டிருந்த அவரது உயிர் முதலாளிகளுக்காகவே பிரிந்தது.

சட்ட ரீதியான, நியாயமான போராட்டங்கள் தான் எப்போதும் தொழிலாளர்கள் மேற்கொள்கிறார்கள், ஆனால் முதலாளித்துவம் எப்போது சட்ட ரீதியாக நியாயமாக நடந்து கொண்டிருக்கிறது? தொழிலாளிகளின் மீதான முதலாளிகளின் தாக்குதல் எல்லை மீறும் போது தொழிலாளர்களும் எல்லை மீறுவது இயற்கைதானே. நியூட்டனின் விதிப்படி ஒவ்வொரு வினைக்கு ஒரு எதிர் வினை உண்டு என்பது போலத்தான் இது நடந்தேறியிருக்கிறது. உடனே மத்திய தொழிற்துறை தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது.

ஒரு முதலாளியின் கையாள் செத்துப்போனதற்காக கண்ணீர்வடிக்கும் பத்திரிக்கைகளே அதிகாரவர்க்கமே என்றாவது உன்னால் வேலையைவிட்டு துரத்தப்பட்ட பல லட்சக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்வு கேள்விக்குறியானதை நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? கோவையில் எத்தனை தொழிலாளிகள் ஆலைகள் மூடப்பட்டதால் தற்கொலை செய்திருக்கிறார்கள், ஓட்டாண்டியாக்கப்பட்டிருக்கிறார்கள். கோவையில் நகைக்கடை ஊழியர்கள் எத்தனை பேர் குடும்பத்தோடு சயனைட் தின்று இறந்திருக்கிறார்கள். அப்போது இந்த பத்திரிக்கைகளோ அல்லது அரசாங்கமோ எதைப்பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்?

லட்சம் விவசாயிகள் செத்தபிறகுதான் அது தேசிய அவமானம் என்று மண்மோகனால் சொல்லப்படுகின்றது. ஆனால் டாட்டாவின் ஓட்டலுக்கு பாதிப்பு என்றால் உடனே அது தேசியத்தின் மானப்பிரச்சினை, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தால் கொல்லப்பட்ட, தினம் கொல்லப்படுகின்ற மக்களின் எண்ணிக்கைகளை எண்ணமுடியுமா என்ன? காலையில் தொழிலாளியாயிருந்து காரணமின்றி மாலையில் வெட்டியாக்கப்படும் கொடூரம் கண்டிப்பாய் கண்களில் கண்ணீரை வரவழைக்காது. ஆனால் ஜார்ஜ் செத்துப்போனாலோ, டாட்டாவுக்கு முதுகுவலித்தாலோ, அம்பானிகளின் சொத்துப்பிரச்சினைகள் நம் கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஆம் ஆணையிடுகிறது முதலாளித்துவம் அழு அழு அழு நன்றாய் அழு முதலாளித்துவத்தின் முதுகெலும்பினை அசைக்க நினைத்ததற்காக அழுதே பாவத்தினைப்போக்க வேண்டும். ஆனால் அழுதுகொண்டும் வெட்கித்தலைகுனிந்து கொள்வதற்கு தொழிலாளி வர்க்கம் தவறொன்றும் செய்யவில்லை, முதலாளிகளின் வரன்முறையற்ற சுரண்டலுக்கான எதிர்விளைவே இது. ஏஐசிசிடியூ-ன் அனந்தநாரயணன் சொல்வது போல இச்சம்பவத்துக்கு தொழிலாளிகள் பொறுப்பேற்க முடியாது, முதலாளிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

முதலாளிகளால் கசக்கி பிழியப்படும் தொழிலாளி வர்க்கத்துக்கு இது ஒரு எச்சரிக்கைமணி. சங்கம் ஒன்றே தீர்வு நம் உரிமைகளைப்பெற, உரிமைகளைப்பாதுகாக்க. அது சாத்தியமாகாத வரை முதலாளித்துவ வெறிநாய்கள் நம்மீது பாய்ந்து கொண்டுதானிருக்கும். நம்முடைய ஒற்றுமை ஒன்றே முதலாளித்துவத்திற்கு சாவு மணியடிக்கும்.

கோவை பிரிக்கால் ஆலை அதிகாரி ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் அடித்துக்கொலை

அன்றாடம் தொழிலாளர்கள் மீது பயங்கரவாத முதலாளிகள் செய்து வரும் சித்திரவதை கொடுமைகளின் எதிர் விளைவே இது

தொழிலாளி வர்க்கம் வருத்தப்படவோ, அனுதாபப்படவோ தேவை இல்லை

பிரிக்கால் ஆலைத்தொழிலாளிகளின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்

தமிழக அரசே!! நாள் தோறும் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கொடுமைகள் செய்து வரும் பயங்கரவாத முதலாளிகளை கைது செய்

முழக்கங்கள் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

6 பதில்கள் to “பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை – முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு”

  1. சுனா பானா Says:

    மேலும் சம்பள வெட்டு, அபாயமான பணி சூழல், சுகாதாரமற்ற பணி சூழல், வேலை அழுத்தம், என தினம் தினம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் முதலாளிகளால் தொழிலாளர்கள் ஆயிரகணக்கில் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் தொழிற்சங்கம் அமைப்பதையே பெரும் குற்றமாக கருதி பணி நீக்கம் செய்கின்றனர் முதலாளிகள்.

    எந்த காரணமின்றி ஆயிரகணக்கில் பணி நீக்கம் செய்யப்படும் போது கண்டுகொள்ளாத ஊடகம் (ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், தினகரன்) இப்போது பிரிக்கால் முதலாளிக்காகவும், ராய் ஜார்ஜ்க்காகவும் முதலை கண்ணீர் வடிக்கிறது.

  2. மாக்சிமஸ் Says:

    வாழ்த்துக்கள் தோழர்!
    உங்கள் கட்டுரையில் சில இடங்களில் நிறுத்தக்குறிகள், இல்லாமல், இருந்து….
    மேலும் தவறான புரிதலை கொள்ளும் படியான வார்த்தை பிழைகள் உள்ளன எடுத்துக்கட்டாக……..

    ##நான் யோக்கியன் என்றபடி ஒப்பாரிவைத்தாலோ அல்லது சபதம் போடும் காலம் எல்லாம் மலை ஏறி விட்டது , வனிதா அறிவித்துவிட்டார் கோவையில் இனி எந்த முதலீடும் இல்லை.##

    ##சுமார் 90 % தொழிலாளர்கள்##

    ##90 கோடி நட்டமடைந்து விட்டதால் இனி கோவையில் எந்த முதலீடும் கிடையாதென சொல்லி முதலாளியை, அவனை நம்பித்தான் தொழிலாளியென மிரட்டியிருக்கிறார். இப்பிரச்சினையில் முக்கியமாக கூறப்படுவது ” என்னதான் இருந்தாலும் ஹெச் ஆரை கொன்னது தப்பு, அது மனித உயிரா பாருங்க ஏன் முதலாளியோட கையாளா பார்க்கறீங்க”##
    ##ஒழித்துக்கட்டுவேனன ##

    இதை தயவுசெய்து சரிசெய்யுங்கள் தோழர்!

  3. குருத்து Says:

    இந்த நாட்டில் 100% தொழிலாளர்களில், தொழிலாளர்களுக்கான உரிமைகள் பெற்றவர்கள் 10% மட்டுமே!

    முதலாளிகள் சங்கம் வைக்கிறார்கள். அமைச்சர் பெருமக்கள் அவர்களுடைய சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு, நன்மை, தீமை விவாதிக்கப்பட்டு, மானியம் பெற்றுக்கொள்கிறார்கள்.

    இப்படிப்பட்ட முதலாளி வர்க்கம், தொழிலாளர்கள் சங்கம் வைக்கவே அனுமதி மறுக்கிறார்கள். சட்டபூர்வ வழியை அடைப்பது முதலாளிகள். பிறகு, தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். விளைவு – கக்கூஸில் விட்டு வெளுப்பதாக முடிகிறது! அதிகபட்சமாக கொலையில் முடிகிறது!

    பு.ஜ.தொ.மு சொல்கிற படி, இந்த நடவடிக்கையை தூண்டியதற்கு, முதலாளி வர்க்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்!

    நாடு முழுவதும், அந்த தொழிலாளர்களுக்காக ஆதரித்து பிரச்சாரம் செய்யவேண்டும்.

    //ஏஐசிசிடியூ. இது சிபிஐ(எம்.எல்) செங்கொடி இன் தொழிற்சங்கமாகும். //

    அப்படியா! அது சிபிஐ (எம்.எல்) லிபரேசனுடையது தானே!

  4. kalagam Says:

    மன்னிக்கவும் தோழர்,

    தவறான தகவலை தந்ததற்காக, நீங்கள் சொல்வது உண்மைதான் ஏஐசிசிடியூ (லிபரேசன்)தான் பிழை திருத்தப்பட்டது.
    நன்றி

  5. மகா Says:

    கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

    முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

    அன்பார்ந்த தொழிலாளர்களே!

    கடந்த செப். 21ந் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜே.ஜார்ஜ் என்பவன் தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் “வன்முறை – பேராபத்து” எனறு அலறுகிறது. ஊடகங்கள்: தொழிலாளர்களை பயங்கரவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கின்றன.

    அமைச்சர்களோ தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்கள் போல பேசுகின்றனர். கோவை நகரமே கலவரபூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்கள் பயங்கரவாதிகளா? முதலாளி வர்க்கம் தினந்தோறும் தொழிலாளர்கள் மீது ஏவி விடுகின்ற கொடூரங்களை அனுபவித்த எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவை பிரிக்கால் ஆலை நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளை அறிந்த எவரும் தொழிலாளர்களை வ்னமுறையாளர்கள் என்று சொல்லமாட்டார்கள்.

    மேலும்….

    http://mahasocrates.blogspot.com/2009/10/blog-post.html

  6. செங்கொடி Says:

    தங்களின் ஆபத்தை முதலாளிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால் தான் அலறிக்குதிக்கிறார்கள். லட்சக்கணக்கில் விவசாயிகளும், தொழிலாளர்களும் மடிந்து கொண்டிருக்கையில் அதை தடுப்பதற்கு நாதியற்ற அரசும் ஊடகங்களும் ஒரு கைக்கூலிக்காக ஊரையே கூட்டுகிறார்கள். இனி முதலாளிகள் பஞ்சு மெத்தையில் சுகமாக தூங்கமுடியாது என்பதற்கு இது ஒரு தொடக்கம்.

    தோழமையுடன்
    செங்கொடி

பின்னூட்டமொன்றை இடுக