சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு – ஆணாதிக்கத்தின் உச்சம் இல்லை இல்லை அதுதான் ஆரம்பம்

சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு

ஆணாதிக்கத்தின் உச்சம்  இல்லை  இல்லை அதுதான் ஆரம்பம்

அதோ அந்தக்குழந்தை சிரித்துக்கொண்டிருக்கிறது பாருங்கள்!. அதோ அக்குழந்தையைத்தான் அங்கு அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார்கள். உறவினர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். ஏதாவது விசேசமா? ஆம் விசேசம் தான் அக்குழந்தை இன்று முதல் பெண்ணாகப்போகிறாள். அக்குழந்தையின் தாய் அந்த அறைக்குள் அக்குழந்தையை அழைத்துக்கொண்டு செல்கிறாள். அக்குழந்தைக்கு விபரீதம் நேரப்போவது புரிந்து கத்துகிறது, வீறிட்டு அலறுகிறது.

இதோ இன்னமும் இருவர் வந்து விட்டார்கள். அக்குழந்தையின் ஆடைகளை கழட்டி அதை பென்ணுறுப்பை கையிலிருந்த பழைய பிளேடால் அறுத்து எடுக்கிறார்கள். அப்புறம் ஊசியில் நூல் கோர்க்கப்பட்டு அக்குழந்தையின் உறுப்பு தைக்கப்படுகிறது. பல மடங்கு ரத்தம் வெளியேறிவிட்டது. அக்குழந்தையால் அழ முடியவில்லை. இப்போது கால்கள் கட்டப்படுகின்றன. சில நாட்கள் இப்படித்தான் வைத்திருக்க வேண்டும். வெளியே மகிழ்ச்சி உறவினர்களிடையே பரவுகிறது “ஆயிஷா பெண்ணாகிவிட்டாள்”. குடி கும்மாளம் கரை புரண்டோடுகிறது. கேளிக்கைச்சத்தங்களில் பென்ணின் விம்மல் சத்தம் மெல்ல மெல்ல அடங்கிப்போகிறது.

——————————

—————————————————————————————————————————————

அநேகமாக ஓராண்டுக்கு மேல் இருக்கும் ஒரு புத்தகத்தைப்படித்து, அது காலச்சுவடா அல்லது உயிமெய் இதழா என்று மறந்து விட்டது. அவ்விதழை பத்திரமாய் வைத்திருந்தேன் இருந்தும் தொலைந்துவிட்டது. அவ்விதழைத்தேடி பல இடங்களில் அலைந்துக்கொண்டிருக்கிறேன். என் மனதில் கொஞ்ச நஞ்சமல்ல ஏகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திச்சென்றது. அக்கட்டுரைக்கதையை படிக்கும் பலருக்கும் கண்களில் கன்ணீரை முட்ட வைத்த  அந்த மாடலின் பெயர் கூட மறந்து விட்டது.

ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் ஒரு செயல் நடைபெறுவதை அப்போதுதான் முதல் முதலாகப் படித்தேன். அவர் ஒரு புகழ்பெற்ற  விளம்பர மாடல், அவருக்கு மிகச்சிறிய வயதில் அவருடைய பாலுறுப்பினை சிதைத்து அதில் தையலைப்போடும் நிகழ்ச்சி நடந்து விட்டது. அன்று முதல் சிறுநீர் கழிப்பதென்பது அவருக்கு நரகம்.

எல்லோரும் ஒரு கணம் தற்போது சிறு நீர் கழிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். ச்சீசீ ! என்று யாராவது முகத்தை சுழிப்பீர்களாயின் , அதைப்பற்றி பிறகு பேசலாம்.  பலமணி நேரமாய் அடக்கி வைத்திருக்கிறீர்கள் உங்கள் சிறு நீரை, இப்போது சிறு நீரைக்கழித்து விட்டு வரும் போது உங்கள் முகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கும்?

ஆனால் அதற்கு பதில் சிறு நீர் கழிக்கும் போது  குத்தி குத்தி வலிக்கிறதெனில், சிறு நீர் பாய்வதற்கு சிறு துளை மட்டுமே இருக்கிறதெனில், சிறு நீர் பாய்ந்து வரும் கணங்களில் எரிச்சலோடு அய்யோ அம்மா என்று கதற வேண்டியத்தேவை இருக்கிறதெனில் யாராவது சிறு நீர் கழிப்பதை நினைத்துப்பார்ப்போமா என்ன? நாம் நினைத்துப்பார்க்கவே தயங்கும் அந்த சம்பவம் அந்த கதறல் ஆப்பிரிக்க பெண்களுக்கு சொந்தமானவை என்பதை நாம் அறிவோமா? இதோ இன்று நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பாலுறுப்பினை சிதைத்து கட்டி விட்டார்கள். நாளை  என்று போய்க்கொண்டே இருக்கிறது.

சிறு நீர் கழிப்பதே நரக வேதனையாக, தாங்க முடியாத வலியோடு, அதுவும் சொட்டு சொட்டாகத்தான் இருக்க வேண்டுமென்றால் அதை நினைத்துப்பார்க்க முடிகிறதா நம்மால்? ஆனால்  அப்படித்தான்  ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் பல கோடிக்கணக்கான ஆப்பிரிக்க பெண்கள். ஆங்கிலத்தில்  Female Genitial Multilation என்றழைக்கப்படும் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் நிகழ்ச்சி ஆப்பிரிக்க நாடுகளில் புனித சடங்காக பெண்களின் மீது ஏவப்படுகிறது.

பெண்ணின் பாலுறுறுப்பை வெட்டியெடுப்பது மூன்று வகைகளில் நடத்தப்படுகிறது.

1. பாலுணர்வினைத்தூண்டும் பெண்ணுறுப்பின் ஒரு பகுதியை வெட்டியெடுப்பது
2. பென்ணுறுப்பின் பெற்புறத்தை வெட்டி எடுப்பது
3.ஒட்டு மொத்த பெண்ணுறுப்பினையே வெட்டி யெடுத்து விட்டு சிறு துளையை மட்டும் விட்டு விட்டு நூல் மூலம் தையல் போடுவது.

ஏன் பாலுறுப்பு சிதைக்கப்படுகிறது?

“பெண்கள் சைத்தானின் வடிவங்கள், அவர்களைப்பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும் . அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள், ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் /  குறைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாயிருப்பார்கள்.”

ஒரு பெண் தான்  ஒழுக்கத்தோடு வாழ்வதற்கு தன் உறுப்புக்களை இழந்து ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆணாதிக்கம் பெண்ணுறுப்பின் மீதான சிதைப்பை சரி என்கிறது. தான் பிறந்து வந்து அந்த பாதை  மூடப்பட்டிருக்கும் வலியை ஒரு மனிதனால் உணர முடியாதா என்ன?

பாலுறுப்பு சிதைப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த என்னுடைய நண்பர் ஒருவர் “தயவு செய்து முடியவில்லை, நிறுத்துங்க” என்றார். அவர் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.இனி ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் இந்த நினைவுதான் வருமென்று சிலர் கவலைப்படலாம். நினைவுகளை
சுமப்பதற்கே கவலைப்படும் நாம் அந்த நினைவுகளை நடத்திக்கொண்டிருக்கும் அப்பெண்களின் உணர்வை புரிந்து கொண்டால் கண்டிப்பாய் இது கடினமாய் இராது.

———————————————————————————————————————————————————————–

ஆயிஷாவுக்கு இப்போது பருவ வயதாகி விட்டது. தினமும் சிறு நீர்கழிக்கும் துக்க காரியத்தை செய்து முடிக்கும்
வேதனையோடு காலத்தை கழித்துவிட்டாள். அவளின் தாய் அடிக்கடி சொல்லுவாள் “கல்யாணம் ஆனால் சரியாகிடும்”. அவளின் திருமணத்தின் பின்னர் பெண்ணுறுப்பின் மீதான் தையல் பிரிக்கப்பட்டது, மாப்பிள்ளைக்கென்றே புதிய சரக்கு அன்று படைக்கப்பட்டது. இனி அவளால் முன்னைப்போல அல்ல சற்று வலி குறைவாக சிறு நீர்கழிக்கலாம், ஆனால் வலி, வலிதானே! ஊனம் ஊனம்தானே. பிறந்த அவளின் செல்ல மகளின் பெண்ணுறுப்பை ஆவலாய் பார்க்கிறாள். தன் பெண்ணுறுப்பினை அவளுக்கு பார்த்ததாய்  நினைவே இல்லை, “நம்முடைய உறுப்பும் இப்படித்தான் இருந்திருக்குமோ?”

—————————————————————————————————————————————————————————

வலைத்தளங்களில் “போர்னோ”ஈஸ்வரனை அன்றாடும் தரிசிக்கும் இளவட்டங்கள், இதோ இந்த பெண்ணுறுப்பினை பார்க்கத்துணிவார்களா? இந்த வீடியோக்களை 18+ என்றோ வயது வந்தவர்களுக்கென்றோ மிகவும் உங்கள் மனதை பாதிக்குமென்றோ  குறிக்கப்பட போவதில்லை. காரணம் பாதிக்கட்டும் உங்கள் மனம் /  நம் மனம்.

என்ன சிறு நீர் கழிக்கப்போகிறீர்களா? அதற்கு முன் இந்த வீடியோக்களையும் பார்த்து விடுங்கள்.

இங்கே தொடுப்பிற்காக தோழர் தமிழச்சியின் கட்டுரை உள்ளது. ஈராண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கட்டுரை அது.  நான் தேடி களைத்த நிலையில் பல சிரமங்களுக்கு  மத்தியில் கேட்டவுடன் அக்கட்டுரைத்தொடுப்பை தந்த அவருக்கு நன்றி!!!

குறிச்சொற்கள்: , , , , , ,

3 பதில்கள் to “சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு – ஆணாதிக்கத்தின் உச்சம் இல்லை இல்லை அதுதான் ஆரம்பம்”

 1. sivakumar Says:

  அவரது பெயர் வரிஸ் தீரி (Waris Dirie).
  http://en.wikipedia.org/wiki/Waris_Dirie
  அது உயிர்மை என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கட்டுரைக்காகத்தான் நானும் வைத்திருந்தேன். பின்பு எப்படியோ தொலைத்து விட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் அழுகையும் ஆத்திரமும் வரும். இந்தக் கொடுமைக்காக ஆண்கள் வெட்கப்பட வேண்டும். தன்னுடைய காமவெறிக்காக பெண்ணை எல்லாவகையிலும் இயற்கைக்கு மாறாகவும் பயன்படுத்தும் அதே ஆண் அவனது மதமும் கலாச்சாரமும் துணை நிற்க பெண்ணின் இயல்பையே பாவமெனக் கற்பித்து குதறுகிறான்.

 2. sandanamullai Says:

  அப்பப்பா…அந்தக்கொடுமையை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
  என்னவொரு மூடத்தனமும் மூர்க்கமும் நிறைந்த மதநம்பிக்கைகள்!
  அப்பெண்ணின் பெயர் வேரிஸ் டைரி…அவரது புத்தகம் கூட மிகவும் புகழ்பெற்ற ஒன்று. புத்தகத்தின் பெயர் (டெஸர்ட் ஆர்கிட் ? ) நினைவில் இல்லை.

  நல்ல இடுகை.

 3. Bharathi Says:

  http://en.wikipedia.org/wiki/Moolaad%C3%A9

  இதை கதைக்களமாக கொண்ட ஒரு படம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: